என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • டெம்போ 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கணவன், மனைவி 2 பேரும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    குனியமுத்தூர்.

    கோவை மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்தவர் சிவதாஸ்(61). இவரது மனைவி நாகமணி(50).

    சிவதாஸ் அதே பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இன்று காலை சிவதாஸ் தனது மனைவியுடன் டெம்போ வாகனத்தில் சென்றார்.வாகனம் போடி பாளையம் பிரிவு அருகே வந்தபோது சிவதாஸ் வண்டியை திருப்ப முயற்சித்தார்.

    அப்போது, எதிரே கேரளாவை நோக்கி வேகமாக வந்த கண் டெய்னர் லாரி மொபட் மீது மோதியது. இதில் டெம்போ சாலையோரம் இருந்த 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவன், மனைவி 2 பேரும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    அப்போது அந்தவழியாக துடியலூர் யூனிட்டை சேர்ந்த பேரூர் சப் டிவிஷன் ஊர்க்காவல் படையினர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இந்த விபத்தை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி விட்டு, இறங்கி சென்று டெம்போவில் இருந்த கணவன், மனைவியை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிவதாஸ், அவரது மனைவி நாகமணியை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து, லாரியை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த 17 வயது மாணவி, ஸ்ரீநிதி மற்றும் ரம்யா ஆகியோர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவை டாடாபாத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.

    அவரது பெற்றோர் அக்கம்பக்கம் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் ஸ்ரீநிதி (21). இவர் கோவை பீளமேட்டில் தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த ஸ்ரீநிதி திடீரென யாரிடமும் கூறாமல் வெளியே சென்று விட்டார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் விடுதிக்கு திரும்பவில்லை.

    திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே சாமிபுதூரை சேர்ந்தவர் ரம்யா(19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார், ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.

    • போலீசார் கோவை ஜங்சன், ரோபர்ஸ்டன் ரோடு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
    • 46 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை புறநகர் போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை ஆர்.எஸ். புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கோவை ஜங்சன், ரோபர்ஸ்டன் ரோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

    அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கரன் (வயது48) அந்த பகுதியில் பெட்டி கடையில் வைத்து குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையில் அங்கு குட்காவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாஸ்கரனை கைது செய்து அவரிடம் இருந்து 26 பாக்கெட் குட்காவை, பறிமுதல் செய்தனர். இதேபோன்று கோவை கெம்பட்டி காலனி பகுதியில் குட்கா பதுக்கி விற்ற சிவக்குமார் 44 என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 20 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தனர்.  

    • 7 நிலை ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
    • ரூ.5. 30 கோடி மதிப்பில் கோபுரம் அமைக்கப்படவுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆடி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நாட்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலில் ரூ.5. 30 கோடி மதிப்பில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியினை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

    இதில் வனப்பத்திரகாளி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதாகல்யா ணசுந்தரம், பரம்பரை அரங்காவலர் வசந்தா சம்பத், தாசில்தார் மாலதி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • தங்கவேலுக்கும் சுதர்சனுக்கும் இடையே மீதி பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது.
    • கண்டக்டர் தங்கவேலு பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 57).

    இவர் அரசு போக்குவரத்து கழகம் பொள்ளாச்சி கிளையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் தங்கவேலுக்கும், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சுதர்சன் (21) என்பவருக்கு இடையே மீதி பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று தங்கவேலு பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் பஸ்சில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த சுதர்சன் கடந்த மாதம் என்ன தப்பா பேசுனல, இப்ப பேசுடா பார்க்கலாம் என கூறி கண்டக்டர் தங்கவேலுவை தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து கண்டக்டர் தங்கவேலு பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 41,526 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
    • 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் தொடங்கி நடந்தது. இந்த தேர்வுகள் முடிந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

    இந்த தேர்வுகள் வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடந்தது. இதனை தொடர்ந்து வருகிற 10-ந் தேதி ஆங்கில பாடத்துக்கான தேர்வும், 13-ந் தேதி கணிதம், 15-ந் தேதி மொழித்தேர்வு, 17-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் என கோவையை சேர்ந்த 388 பள்ளிகள், பொள்ளாச்சியை சேர்ந்த 138 பள்ளிகள் என 526 பள்ளிகளை சேர்ந்த 20,936 மாணவர்கள், 20,590 மாணவிகள் என மொத்தம் 41,526 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

    மேலும் பள்ளியின் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 150 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்காக 7 தேர்வு மையங்கள் என 157 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

    முதல் நாள் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிந்தது. தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 157 முதன்மை கண்காணிப்பாளர்கள், 157 துறை அதிகாரிகள், நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து மாணவ-மாணவிகளும் மையங்களுக்கு வந்தனர். பின்னர் ஹால் டிக்கெட்டை பரிசோதனை செய்த பின்னர் தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மொழி பாடத்தேர்வை மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் எழுதி விட்டு வந்தனர்.

    • தேர்த்திருவிழா கடந்த 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
    • 10-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் மண்டல பூஜை முடிந்த பிறகு தேர்த்திருவிழா கடந்த 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. இதை தொடர்ந்து பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர். திருவிழா முடியும் வரை இந்த கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபடுவார்கள். கடந்த 28-ந்தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பூவோடு ஏந்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு கோவிலுக்கு பக்தர்கள் மா விளக்கு எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு நடை பெற்றது. இதையொட்டி 21 அடி உயர வெள்ளித்தேரில் மாரியம்மனும், 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர். இரவு 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் அம்மா தாயே, காவல் தெய்வமே என்று பக்தி கோஷம் எழுப்பினர். அம்மன் மலர் அலங்காரத்தில் சிவப்பு நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கோவில் வளாகத்தில் தொடங்கிய தேரோட்டம் மார்க்கெட் ரோடு வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. தேர்த்திருவிழாவையொட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். 2-ம் நாள் தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்பட்டு உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது.

    நாளை (வெள்ளிக் கிழமை) இரவு 7 மணிக்கு 3- ம் நாள் தேரோட்டம் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கி ழமை) காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    10-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. 

    • சிறுமி தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்தார்.
    • பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் வீட்டு அருகே இரும்பு கடை வைத்து நடத்தி வரும் பெருமாள் (வயது 40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தாய்க்கும், அவரது தந்தைக்கும் இடை யே தகராறு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றார். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு திரும்பினார்.

    கணவர் மீது கோபத்தில் இருந்த அந்த பெண், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெருமாளின் வீட்டிற்கு சென்று தனது குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

    அப்போது இரும்பு கடை உரிமையாளர் பெருமாள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தார்.

    அவர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருப்பு கடை உரிமையாளர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அஜித்குமார் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்தார்.
    • போலீஸ்காரர் பிரபு சண்டையை தடுக்க சென்றார்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நெல்லுகுத்தி பாறையை சேர்ந்தவர் பிரபு. இவர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதையொட்டி பிரபு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித் ெதாழிலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீஸ்காரர் பிரபு சண்டையை தடுக்க சென்றார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர் அவர் போலீஸ்காரர் பிரபுவின் ஆள்காட்டி விரலை கடித்தார்.

    காயம் அடைந்த போலீஸ்காரரை மற்ற போலீசார் மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீஸ்காரர் பிரபு அளித்த புகாரின் பேரில் போலீசார் அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி கொண்டனர்.
    • பஸ்சின் பின் சக்கரம் தங்கவேல், நந்தகுமார் மீது ஏறி இறங்கியது. இதில், 2 பேருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 66). விவசாயி.

    இவரது மகன் நந்தகுமார் (34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நந்தகுமார் அந்த பகுதியில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நந்தகுமார் இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக தன்னை கருமத்தம்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கொண்டு வந்து விடும்படி தனது தந்தையிடம் கூறினார்.

    இதையடுத்து தங்கவேலும், நந்தகுமாரும் வீட்டில் இருந்து கருமத்தம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை தங்கவேலு ஓட்டினார்.

    நந்தகுமார் பின்னால் அமர்ந்து இருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் கிட்டாம்பாளையம் நால்ரோடு பகுதிக்கு வந்தது.

    அங்கு வந்ததும் தங்கவேலு நேரே செல்வதற்காக மற்ற பகுதிகளில் இருந்து வாகனங்கள் ஏதாவது வருகிறதா? என பார்த்த படி நின்றார். அப்போது பொள்ளாச்சியை நோக்கி தனியார் கல்லூரி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் ரோட்டை கடப்பதற்காக நின்ற மோட்டார்சைக்கிள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

    மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி கொண்டனர். இதில் பஸ்சின் பின் சக்கரம் தங்கவேல், நந்தகுமார் மீது ஏறி இறங்கியது. இதில், 2 பேருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காலை நேரம் என்பதால் அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் சென்ற சிலர் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    பின்னர் விரைந்து ஓடி சென்று அவர்களை பார்த்தபோது 2 பேருமே இறந்து விட்டது தெரிய வந்தது. உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்து கிடந்த தந்தை, மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை, மகன் விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் அங்கு அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தந்தை- மகன் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சியை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் தங்களது குழந்தைகளுடன் அன்னூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்தவர் 32 வயது கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் திருப்பூர் பாண்டியன் நகரில் வசித்து வந்தார். அப்போது இவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த லோடுமேன் பாலாஜி (வயது 24) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.

    இவர் அடிக்கடி கட்டிட தொழிலாளியின் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது கட்டிட தொழிலாளியின் மனைவிக்கும் பாலாஜிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தனது கணவர் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் கட்டிட தொழிலாளிக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    பின்னர் இளம்பெண் தனது கணவரை பிரிந்து பாலாஜியுடன் சென்றார். 2 பேரும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    இது குறித்து கட்டிட தொழிலாளி திருப்பூர் பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். 2 பேரும் செஞ்சேரி பிரிவில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் தங்களது குழந்தைகளுடன் அன்னூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது பாலாஜி அங்கு வந்தார். அவர் இளம்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்தார். அப்போது கட்டிட தொழிலாளிக்கும், பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கட்டிட தொழிலாளியின் தலையில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மடக்கி பிடித்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கட்டிட தொழிலாளி, தாக்குதலில் காயம் அடைந்த பாலாஜி ஆகியோரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பா.ஜ.க மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராயர்பாளையம், ராமாட்சிபாளையம், குமரன் நகர் பகுதிகளில் மது விற்பது நடப்பது தெரியவரவே அங்கு சென்று மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சூலூர்:

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில் கோவை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் நேற்று செயல்படவில்லை.

    இந்நிலையில் கருமத்தம்பட்டியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் மதுக்கடை அருகே அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக தகவல் வந்தது. இந்த தகவல் அறிந்ததும் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி தலைவி ரேவதி தலைமையில் சிலர் மது விற்பனை நடந்த இடங்களுக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு விற்பனைக்காக மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக இருந்தது. இதனை தொடர்ந்து பா.ஜ.க மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. ஆனந்த ஆரோக்கியராஜூக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை பிடித்து, அங்கிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வேறு எங்காவது இதுபோன்ற மது விற்பனை நடக்கிறதா என சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ராயர்பாளையம், ராமாட்சிபாளையம், குமரன் நகர் பகுதிகளில் மது விற்பது நடப்பது தெரியவரவே அங்கு சென்று மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் கருமத்தம்பட்டி பகுதிகளில் மது விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து பா.ஜ.க வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ரேவதி பேசும்போது, கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதியில் 6 மதுக்கடைகள் உள்ளதாகவும், இந்த மது கடைகளில் அரசு விடுமுறை தினத்தில் கூட அதிக விலைக்கு சர்வ சாதாரணமாக மது விற்பனை நடைபெறுகிறது. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    இதற்கிடையே விடுமுறை தினத்தில் டாஸ்மாக் கடை அருகே மது விற்பனை நடந்ததை போலீசாருக்கு தெரிவித்த பா.ஜ.க மகளிர் அணி தலைவி ரேவதியை, அந்த பகுதியை சேர்ந்த பார் உரிமையாளர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான உரையாடல்கள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×