என் மலர்
கோயம்புத்தூர்
- புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.
கோவை:
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மனோஜ் (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தாரணிபிரியா (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தேனிலவிற்காக கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி மதுரையில் இருந்து கோவைக்கு வந்தனர். கோவை ராம்நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபடி சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர்.
சம்பவத்தன்று புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர். அங்கு இரவில் நடைபெறும் லேசர் ஷோ முடிந்து விபூதி வாங்குவதற்காக மனோஜ் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மனைவி தாரணிபிரியா மாயமாகி இருந்தார். அவரை மனோஜ் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.
பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் ஷேர் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மனோஜ் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் எதற்காக மனோஜிடம் சொல்லாமல் அங்கிருந்து சென்றார், அவர்களுக்குள் எதாவது தகராறு ஏற்பட்டு கோபத்தில் புறப்பட்டுச் சென்றாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண்ணின் மாமாவான விக்னேஷ் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து, பிரசாந்த்தை சரமாரியாக வெட்டினார்.
- போலீசார் விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை:
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பிரசாந்த்(வயது21).
இவர் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரசாந்துக்கு செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
முதலில் நட்பாக பழகி வந்த இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 3 வருடங்களாக 2 பேரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து 2 வீட்டு பெற்றோரும், பிரசாந்த் மற்றும் இளம்பெண்ணை அழைத்து பேசினர்.
அப்போது உங்களது காதலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கொஞ்ச நாட்கள் சென்ற பின்னர் உங்கள் இருவருக்கும் திருமணமும் செய்து வைக்கிறோம். அதுவரை பொறுத்திருங்கள் என தெரிவித்தனர்.
இதையடுத்து காதலர்கள் 2 பேரும் அடிக்கடி போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர்.
இன்று பிரசாந்தின் காதலிக்கு பிறந்த நாள். இதனால் நள்ளிரவில் தனது காதலியின் பிறந்த நாளை கொண்டாட பிரசாந்த் முடிவு செய்தார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
அதன்படி நேற்று இரவு பிரசாந்த், தனது நண்பர்களான தரணிபிரசாத், குணசேகரன், அபிஷேக் ஆகியோருக்கு தனது காதலியின் பிறந்த நாளையொட்டி விருந்து கொடுத்தார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மதுகுடித்தனர்.
அப்போது நாம் கேக் வாங்கி கொண்டு, நேராக எனது காதலியின் வீட்டிற்கு சென்று, கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம் என பிரசாந்த் தெரிவித்தார். நண்பர்களும் அவருடன் வர சம்மதித்தனர்.
பின்னர் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 4 பேரும் ஒரே மொபட்டில் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறைக்கு நள்ளிரவில் சென்றனர். அப்போது தாங்கள் வாங்கி வைத்திருந்த பிறந்த நாள் கேக்கினையும் எடுத்து சென்றிருந்தனர்.
மயிலாடும்பாறைக்கு சென்றதும், நேராக பிரசாந்த், தனது காதலியின் வீட்டிற்கு சென்றார். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் கதவை பூட்டி விட்டு தூங்கி விட்டனர்.
கதவு பூட்டி கிடந்ததால், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இளம்பெண்ணின் பெயரை சொல்லி வெளியில் வா என கூச்சல் எழுப்பினர்.
ஆனால் யாரும் வராததால் பிரசாந்த் உள்பட 4 பேரும் வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதித்தனர். பின்னர் வீட்டின் அலார மணியை அழுத்தி கொண்டே, வீட்டில் யாரும் இல்லையா? வெளியில் வாருங்கள் என இளம்பெண்ணின் பெயரை சொல்லி அழைத்து வா நாம் உனது பிறந்த நாளை கொண்டாடலாம் என பிரசாந்த் கூச்சல் போட்டார்.
சத்தம் கேட்டு, பெண்ணின் தந்தை மகாதேவன், பெண்ணின் தாய்மாமா விக்னேஷ் ஆகியோர் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தனர். இவர்கள் 2 பேரும் கால் டாக்சி டிரைவர்களாக உள்ளனர்.
வீட்டிற்கு வெளியில் வந்த அவர்கள், வீட்டின் முன்பு பிரசாந்த் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
நாங்கள் உனது காதலை ஏற்று கொண்டோமே எதற்காக நள்ளிரவு நேரத்தில் வந்து இப்படி சத்தம் போடுகிறாய் என பெண்ணின் தந்தை மகாதேவன் கேட்டார். அதற்கு பிரசாந்தும், அவரது நண்பர்களும், இன்றைக்கு உங்கள் மகள் பிறந்தநாள் அதனை கொண்டாட வந்துள்ளோம். வெளியில் வர சொல்லுங்கள் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடலாம் என்றனர்.
அதற்கு இந்த நேரத்தில் வேண்டாம். நாளை பார்த்து கொள்ளலாம். முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்து சத்தம் போட்டபடியே இருந்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் மாமாவான விக்னேஷ் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து, பிரசாந்த்தை சரமாரியாக வெட்டினார்.
மேலும், பெண்ணின் தந்தை மகாதேவன், அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து பிரசாந்தை விக்னேசுடன் சேர்ந்து தாக்கினார். இதில் தோள்பட்டை, மார்பு பகுதிகளில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் பிரசாந்த்தை தாங்கள் வந்த மொபட்டில் தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
ஆனால் வரும் வழியில் மொபட் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. இதனால் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் பிரசாந்த்தை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொன்ற பெண்ணின் தாய்மாமாவான விக்னேசை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான பெண்ணின் தந்தையை தேடி வருகின்றனர்.
பிரசாந்த் வெட்டப்பட்ட போது அவரது காதலியும் சம்பவ இடத்தில் இருந்தார். அவர் கண்முன்பு பிரசாந்த் தாக்கப்பட்டார். காதலி எவ்வளவோ தடுத்தும் பிரசாந்தை காப்பாற்ற முடியவில்லை.பிரசாந்த் உயிரிழந்ததை அறிந்து அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
- வீட்டு அறையில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
- இது தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி,
தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி 2 பேரும் மும்பைக்கு சென்று வசித்து வந்தனர். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முத்துராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவைக்கு வந்தார்.
கோவை வடவள்ளி வி.என்.ஆர் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். ராமலட்சுமி கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியாகி கதறி சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவரது கணவரிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவத்தன்று காலை எனது மனைவியிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றேன். பின்னர் வந்து பார்த்த போது தூக்கில் தொங்கி கொண்டிருந்தாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே ராமலட்சுமியின் தந்தை தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முத்துராஜ் தனது மகளை அடித்து கொன்று விட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கணவர் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார். ஆனால் கழுத்தில் அதற்கான தடயங்கள் இல்லை. இதனால் நர்சு சாவில் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 30-க்கும் மேற்பட்டோர் சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- மேட்டுப்பாளையம் -சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் பெள்ளேபாளையம் ஊராட்சி பட்டக்காரனூர் கிராமத்தில் அனிதா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊராட்சி சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக தங்களது தோட்டங்களுக்கு செல்ல அனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது விவசாய தோட்டத்திற்கு செல்லும் சாலையை அருகில் உள்ள தனிநபர் ஒருவர் அது தன்னுடைய இடம் என கூறி அந்த வழியாக தங்களை செல்ல அனுமதிப்பது இல்லை என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் அனிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு சத்தி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் இரு தரப்பு ஆவணங்கள் சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் மேட்டுப்பாளையம் -சிறுமுகை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றார்.
- ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டோமினிக், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்
கோவை,
கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் டோமினிக் (வயது 22). இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 9-ந் தேதி வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆன்லைன் மூலம் வேலை செய்வது குறித்து குறுஞ்செய்தி வந்தது.
இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நாங்கள் கொடுக்கும் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுத்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என கூறி அதற்கான வழிமுறைகளை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சிறிது, சிறிதாக டோமினிக், அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 98 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை எதுவும் வரவில்லை. மேலும் அவருக்கு ஏற்கனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்கிற்கு வரவு வைக்க முடியவில்லை.
இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தொடர்ந்து பணம் செலுத்துமாறு கேட்டார். ஆனால் அவரால் பணம் செலுத்த முடியவில்லை. மேலும், அவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரால் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகரில் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை இழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களின் வழிகாட்டுதலின்படி ஆன்லைனில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
- இளம்பெண்ணின் காதலன், தனது காதலியின் சகோதரர் மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.
- இதுகுறித்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர்.
சூலூர்,
சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சூலூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவர் பள்ளியில் படித்த போது, அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததார். இதையறிந்த அவரது பெற்றோர் தங்களது பெண்ணை கோவையில் வேலைக்கு சேர்த்து விட்டனர். ஆனாலும் அவர் தனது காதலனுடன் பேசி வந்ததாக தெரிகிறது. பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில் வீட்டிற்கு செல்ல இளம்பெண் முடிவு செய்தார்.
இதனால் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் ஊருக்கு வர விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதற்கு பெற்றோர், நீ தனியாக வர வேண்டாம், அண்ணனை அங்கு அனுப்பி வைக்கிறோம், அவனுடன் நீ ஊருக்கு வா என தெரிவித்தனர்.
அதன்படி அந்த பெண்ணின் சகோதரர் இங்கு வந்தார்.
அதேசமயம் இளம்பெண் தனது காதலனுக்கும் போன் செய்து அழைத்துள்ளார். அதன்படி இளம்பெண்ணின் காதலனும் அங்கு வந்தார். காதலன் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்தார்.
இளம்பெண்ணின் சகோதரர், தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தங்கையை அழைக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த இளம்பெண்ணின் காதலன் அந்த மோட்டார் சைக்கிளை பஞ்சராக்கினார்.
அப்பாவியான சகோதரர், தனது தங்கையுடன் வெளியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் பஞ்சராகி இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் தங்கையை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளை அருகே உள்ள மெக்கானிக் கடைக்கு செல்வதற்காக தள்ளிக்கொண்டு சென்றார்.
அப்போது இளம்பெண், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த தனது காதலன் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண்ணின் சகோதரர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். உடனே இதுகுறித்து தனது பெற்றோருக்கு புகார் ெகாடுத்தார்.
அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காதலனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- தனுஷ் ஆதித்தன் 14.41 நிமிடத்தில் தாண்டி வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.
- ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவதே எனது ஒரே இலக்கு என்றார்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் சந்தை கடையை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இவருக்கு தனுஷ் ஆதித்தன் (21). திவாகர் என 2 மகன்கள் உள்ளனர்.
இதில் தனுஷ் ஆதித்தன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி யாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளி படிப்பு காலத்தில் இருந்து தடகள போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்தாண்டு டிசம்பர் மாதம் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று இருந்தார்.
இதில் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றார். இதில் 14.06 நிமிடத்தில் தாண்டி முதல் பரிசை பெற்றுள்ளார்.
இதையடுத்து இவர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். அதில் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 14.41 நிமிடத்தில் தாண்டி வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.
இதையடுத்து லக்னோவில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த தனுஷ் ஆதித்தனுக்கு மேட்டுப்பாளையம் சர்வ வல்லமை விளையாட்டு குழுவினர் சால்வை அணிவித்து மாலை போட்டு வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து தனுஷ் ஆதித்தன் கூறுகையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவதே எனது ஒரே இலக்கு என்றார்.
- ெபாள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடந்தது.
- நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ெபாள்ளாச்சி,
எனது தந்தையே, என் வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்மாதிரி என பொள்ளாச்சியில் நடந்த பாராட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விஸ்வநாதன் கூறினார்.
ெபாள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா பொள்ளாச்சியில் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் துரை வரவேற்றார்.
விழாவில் நீதிபதி விஸ்வநாதன் பேசியதாவது:-
பொள்ளாச்சியில் சிறு வயதில் படித்த அனுபவம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. மேல் படிப்புக்காக வெளியூருக்கு சென்றாலும் மனதில் இருந்து பொள்ளாச்சியை நீக்க முடியாது.
தந்தை எனக்கு கல்வியை கொடுத்ததால் நல்ல நிலைக்கு வந்துள்ளேன். ஒழுக்கத்தை எனது பெற்றோரிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.
உலகத்தில் உள்ள அனைத்து தாய்களும் தனது மகன் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பர். ஆனால் அவர்களது உழைப்பு, அர்ப்பணிப்பு வெளியில் யாருக்கும் தெரிவதில்லை.
எனது தந்தையே என் வாழ்க்ைகயிலும், தொழிலும் முன்மாதிரியாக உள்ளார். தற்போதுள்ள வக்கீல்கள் கடுமையாக உழையுங்கள். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களது வழக்கை செவ்வனே செய்ய முயற்சிக்க வேண்டும்.
நமக்கு கடவுள் ஒரு பாதை வகுத்துள்ளார். அந்த பாதையில் கடமையை செவ்வனே செய்தால் அதற்கான பலன் கிடைக்கும்.
எனது நீதிபதி பதவியை பொறுப்பாக பார்க்க விரும்புகிறேன். இதற்கு கடின உழைப்பு தேவையாகும். இந்த கண்ணோட்டத்தில் இருந்தால் தான், மக்களுக்கு நீதியை வழங்க முடியும். நான் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் இந்த பொறுப்பில் உள்ளவரை நன்றாக பணியாற்ற கடவுள் மற்றும் பெரியோரின் ஆசி தேவை. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து வக்கீல்கள் சங்கம் சார்பில், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி நீதிபதிகள், வக்கீல்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன.
- விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
கோவை,
கோவை மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே விளம்பர பலகைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விளம்பர பலகை சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் அடங்கிய குழு அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகராட்சிப் பகுதிகளில் 100 வார்டுகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-
கோவை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 80 சதவீத விளம்பரப் பலகைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டன.
வடக்கு மண்டலத்தில் 26, கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில்16, தெற்கு மண்டலத்தில் 24, மத்திய மண்டலத்தில் 11 என மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பாலக்காடு சாலை, ஈச்சனாரி சாலை, பேரூர், ராமநாதபுரம், சிங்கா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களில் அகற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.
- தலையில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணன சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
தேனி மாவட்டம் கோவில்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் அதே கல்லூரியில் படிக்கும் ஆதித்யா என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கினார். பின்னர் தனது நண்பரான கல்லூரி மாணவர் திருவாரூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை பின்னால் அமர வைத்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கடைக்கு டீக்குடிக்க சென்றார்.
பின்னர் 2 பேரும் நள்ளிரவு 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திரும்பினர். மோட்டார் சைக்கிளை ஹரிகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர்.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணன சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஆகாசை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த தகவல் கிடைத்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் விபத்தில் இறந்த கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் செல்வகுமார் (20). சம்பவத்தன்று இவர் சுல்தான் பேட்டை- வடவேடம்பட்டி ரோட்டில் டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்துது சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாலமுருகன் மற்றும் சூர்யாவை ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
- ஷேக்கல்முடி போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் சக்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை முருகாளி எஸ்டேட்டை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39). இவரது மகன் சூர்யா (12). இவர்கள் நேற்று முருகாளி எஸ்டேட்டில் இருந்து மொபட்டில் வால்பாறைக்கு சென்றனர்.
அப்போது பெரியார் நகர் அருகே, எதிர்பாராதவிதமாக டிராக்டர் மோதியது. இதல் பாலமுருகன், சூர்யாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. எனவே அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்ககு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தந்தை பாலமுருகன், மகன் சூர்யா ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்கு பதிவு செய்து அதிவேகமாக டிராக்டர் ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக, டிரைவர் சக்தி (38) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் சூறாவளி காற்றும், பலத்த இடியும் மின்னியது.
- ராமச்சந்திரன் தோட்டத்தில் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது.
சூலூர்,
கோவை சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி அருகே ராயர்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஊர் கவுண்டர் தோட்டம் என்னும் பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் தென்னை மரம் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. நேற்று மாலை சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும், பலத்த இடியும் மின்னியது.
அப்போது திடீரென வெடிப்பு சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில், தோட்டத்தில் இருந்த 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தென்னை மரங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகியது.
இதுகுறித்து தோட்ட உரிமையாளர் ராமச்சந்திரன் கூறும் பொழுது வீட்டில் இருந்தபோது திடீரென பலத்த ஓசை கேட்டதாகவும் வெளியே ஓடி வந்து பார்த்தபோது தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது என்றார்.






