என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.300 சேர்த்து அந்த பணம் ரூ.1500 ஆக திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தார்.
    • ஹேமலதா உள்பட 3 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் யூடியூப் மூலம் பழகி முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்ததாக, விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியை சேர்ந்த ஹேமலதா (வயது 38) என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹேமலதா கடந்த 2020-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அப்போது அவர் முதலில் பொழுது போக்கு அம்சங்களை மையமாக கொண்டு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதற்கு பார்வையாளர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்து வந்தது.

    இந்நிலையில் ஹேமலதாவை ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் தொடர்பு கொண்டு, தங்களின் உற்பத்தி பொருட்களை யூடியூப் சேனல் மூலம் பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டது. எனவே அவரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆகா ஓகோவென புகழ்ந்து, அதனை சமூகவலை தளத்தில் வீடியோவாக பதிவு செய்தார். இதற்காக அவருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் வழங்கியது.

    இது ஹேமலதாவிடம் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டிவிட்டது. எனவே அவர் கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அங்கு உள்ள பொருட்களை யூடியூப் மூலம் பிரபலப்படுத்தினார். இதில் அவருக்கு பணம் கொட்டியது.

    யூடியூப் மூலம் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையே, ஹேமலதாவை இன்றைக்கு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தள்ளி உள்ளது. ஹேமலதா சமீபத்தில் யூடியூபில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எனது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். உங்களின் பணத்துக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.300 சேர்த்து அந்த பணம் ரூ.1500 ஆக திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இதனை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலத்துக்கு பிறகும் ரொக்கத்தொகை வந்து சேரவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா என்பவர் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா கணவர் ரமேஷ் மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து யூடியூப் மூலம் போலி வாக்குறுதி கொடுத்து பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து யூடியூபர் ஹேமலதா, கணவர் ரமேஷ் மற்றும் அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமிரா மற்றும் 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    கோவை குற்றப்புலனாய்வு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஹேமலதா தலைமையிலான கும்பல் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக, வாடிக்கையாளர்கள் 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ரூ.1½ கோடி வரை மோசடி செய்திரு க்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே ஹேமலதா உள்பட 3 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.
    • தண்டவாளம் மற்றும் சிக்னல்களில் சிறிய அளவு குறைபாடுகள் இருந்தாலும், அவை உடனடியாக ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தை பொருத்தவரை ரெயில் போக்குவரத்தை பெரும்பாலான பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதில் பஸ் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் கட்டணம் குறைவு. அதேநேரத்தில் வசதிகள் அதிகம் உண்டு. எனவே நிம்மதியாக, பாதுகாப்பாக பயணம் செய்து திரும்ப முடியும்.

    அதுவும் தவிர பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேகமாக செல்லக்கூடியவை. எனவே செல்ல வேண்டிய இடத்துக்கு குறைந்த நேரத்தில் செல்ல முடியும். இதன்காரணமாக தமிழகத்தில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் ஓடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது ரெயில் பயணத்தை விரும்பும் பயணிகளிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி சேலம் கோட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம், சிக்னல் இயக்கம் ஆகியவை தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தபடியாக தண்டவாளம் மற்றும் சிக்னல்களில் சிறிய அளவு குறைபாடுகள் இருந்தாலும், அவை உடனடியாக ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் ரெயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

    சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு 24 மணி நேரமும் ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. அங்கு இருந்து 20 பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக கோவை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கோவை ரெயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம் மற்றும் சிக்னல் இயக்கம் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில், ஊழியர்கள் மிகவும் கவனமாக வேலை பார்த்து வருகின்றனர். தென்னக ரெயில்வேயில் பயணிகளுக்கான பாதுகாப்பான ரெயில் சேவை உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பயணிகள் அவசியமின்றி பயப்பட தேவை இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.

    • நமது நாட்டில் 40 சதவீதம் டிஜிட்டல் பயன்பாடு இருக்கிறது.
    • ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து துரதிஷ்டவசமானது.

    கோவை :

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பா.ஜனதா சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை மிகவும் எளிமையாக இருக்கிறது. நமது நாட்டில் 40 சதவீதம் டிஜிட்டல் பயன்பாடு இருக்கிறது. ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து துரதிஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை. எதையும் மூடி மறைக்கவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு பா.ஜனதாவை வீழ்த்திவிடலாம் என்று ராகுல்காந்தி, நினைத்தால் அது ஒருபோதும் பலிக்காது.

    ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு எதிராக பேசி வருவது நாட்டின் பெருமையை சிதைக்கும் வகையில் இருக்கிறது. அவர் நமது நாட்டை சேர்ந்தவர்தானே!. ஏன் வெளிநாட்டில் பேசுகிறார். இவ்வாறு அவர் பேசுவதை உடனே நிறுத்த வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் விளம்பர பலகை வைப்பது அதிகரித்து வருகிறது. விளம்பர பலகை வைக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பவம் நடக்கும்போது மட்டும் நடவடிக்கை எடுக்கும் நிலை இருக்கிறது.

    மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரசும், தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வும் தமிழக நலனை காப்பாற்ற போகிறார்களா என்பதை பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
    • நொய்யல் நதியை புத்துயிரூட்டும் பணியில் தமிழ்நாடு அரசுடன் ஈஷாவும் இணைந்து செயல்பட உள்ளது.

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது காவேரி கூக்குரல் இயக்கம். இதன் ஒரு பகுதியாக கோவையில் நரசீபுரம் பகுதியிலுள்ள சாமிநாதனின் பண்ணையில் இன்று(ஜூன் 5) மரக் கன்று நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், அரோமா நிறுவன நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி, சுவாமி அஜய் சைதன்யா, நொய்யல் டிரஸ்ட், மணிகண்டன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, வெள்ளியங்கிரி உழவன் FPO இயக்குனர் கிருஷ்ணசாமி, சிறுதுளி அமைப்பின் பொறுப்பாளர் வனிதா மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் பேசுகையில், "ஈஷாவின் பசுமை தொண்டாமுத்தூர் திட்டத்தின் மூலம் தொண்டாமுத்தூரில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. பசுமை பரப்பை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் இப்பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும். குறிப்பாக, நொய்யல் வடிநிலப் பகுதிகளிலும், அதில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய அதிகளவு மரங்களை நட வேண்டும். பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், காவேரி கூக்குரல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான இன்று என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

    கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்து வரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டு இலக்கு 1.1 கோடி மரங்களை நடுவது. தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

    அதன்படி, ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட்டன. சுமார் 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடுகின்றனர். இதுதவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை புத்துயிரூட்டும் பணியில் தமிழ்நாடு அரசுடன் ஈஷாவும் இணைந்து செயல்பட உள்ளது. அதன் தொடக்கமாக, நொய்யல் உற்பத்தியாகும் சாடிவயல் பகுதியில் முதல் 4 கி.மீ தூரம் வரை பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் இன்று தொடங்கி வைத்தார்.

    இதில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

    'நடந்தாய் வாழி காவேரி' என்னும் தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டும் இந்த நீண்ட கால பணியில் ஈஷா உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் கரம்கோர்த்துள்ளன. அதன்படி, நொய்யல் நதியின் முதல் 4 கி.மீ தூரத்திற்கான பணி ஈஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஈஷாவின் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், காவேரி கூக்குரல் இயக்கம் போன்ற அமைப்புகள் நொய்யல் நதியில் சாக்கடை கழிவுகள் சேர்வதை தடுப்பது, நீர் வளம் அதிகரிக்க நதியின் வடிநில பகுதியில் தேவையான எண்ணிக்கையில் மரங்கள் நடுவது, குப்பைகள் சேராமல் தடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளன. இதற்கு முன்பு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'பசுமை தொண்டாமுத்தூர்' என்னும் பெயரில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலங்களில் 4 லட்சம் மரங்களை நடும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர். விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை மிகக்குறைந்த விலையான 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.

    • சேகர் மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்குப்பம்பாளையம் சாலையில் சென்றார்.
    • விபத்தில், சேகர் மற்றும் நவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை அன்னூர் அருகே காரனூரை சேர்ந்தவர் சேகர்(32).

    இவர் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கு ப்பம்பாளையம் சாலை யில் சென்றார்.

    அப்போது எதிரே சிறுமுகை லிங்காபுரத்தை சேர்ந்த நவீன்குமார்(30) மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன்(30) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கி ளில் வெள்ளிக்குப்பம் பாளையம் நோக்கி வந்தனர். அதே சாலையில் கருப்பசாமி(36) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது வெள்ளிகுப்ப ம்பாளையம் சாலை பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக 3 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொ ண்டன. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் தூக்கி சாலையில் வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில், சேகர் மற்றும் நவீன்குமார் ஆகி யோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.நவீன்குமா ருடன் வந்த ஹரிஹரனுக்கு பலத்த காயமும், கருப்ப சாமி லேசான காயமும் ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சிறுமுைக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஹரியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.மேலும் லேசான காயமடைந்த கருப்பசாமி சிறுமுகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிறு முகை போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

    வடவள்ளி,

    உலக சுற்றுச்சூழல் தினததை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் மகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

    • 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வருகிறார்.
    • மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    வால்பாறை,

    வால்பாறை அருகே முத்துகுட்டி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு டி.பார்ம் படிப்பதற்கு விருப்பம் இருந்து வந்துள்ளது. ஆனால் மாணவிக்கு அவர் விரும்பிய பாட பிரிவு கிடைக்கவில்லை. இதனால் வாழ்கையில் விரக்கி அடைந்த மாணவி வீட்டில் இருந்த மீன் வளர்ப்பு உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 40க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டனர்.

    கோவை,

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அந்த வகையில் கோவையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதராவாக ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர்.

    ஆனால் அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க எம்பி பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அவர்கள் பா.ஜ.க எம்.பி. பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரியும், அவர் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர்.

    • ஐஸ்வர்யாவின் தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தங்கை இறந்ததால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கை இறந்ததில் இருந்து ஐஸ்வர்யா மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    மேலும் அவர் இறந்த துக்கம் தாங்காமல் வேதனைப்பட்டார். சம்பவத்தன்று ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

    • கோவையில் டாப்சிலிப் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • விடு முறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார், பரம்பிகுளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன.

    எனவே கோவை மட்டு மின்றி வெளிமாவட்ட ங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனை மலை புலிகள் காப்பக சுற்றுலா தலங்களில் ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ப சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். விடு முறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக வால்பாறை செல்லும் சுற்றுலா பயணி கள் பலரும், போக்கு வரத்து சாலைக்கு வெகுஅருகில் உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்ற னர்.

    இங்கு மழை காலத்தி ன்போது, அருவியில் தண்ணீர் வரத்து அதிகளவில் இருக்கும். அப்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

    கவியருவியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் அங்கு போதிய மழை இல்லை. வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    எனவே கவியருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவரை நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் நூல் போல வந்து கொண்டு இருந்த தண்ணீர் வரத்து, கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் முற்றிலுமா க நின்றுபோ னது.

    எனவே கவியருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது.

    அங்கு வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கவியருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

    • பில்லூர் அணையில் மின் உற்பத்திக்கு பின் பவானி ஆறு வழியாக உபரிநீர் தினசரி வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணைக்கு கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பொழியும் மழைநீர் காட்டாறுகள் மூலம் பில்லூர் அணைக்கு வந்தடைகிறது.

    பில்லூர் அணையில் மின் உற்பத்திக்கு பின் பவானி ஆறு வழியாக உபரிநீர் தினசரி வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் நீரை மேட்டுப்பாளையம் தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் மாவட்டத்திற்கு 1, 2-வது கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் குழாய்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலை வழியாக செல்கிறது. அவ்வாறு செல்லும் போது நால்ரோடு, தேரம்பாளைம், நடூர் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத தால், அவ்வப்போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கசிவு நீர் சாலையோரங்களில் வழிந்தோடும்.

    இதேபோல நேற்று இரவு மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட தேரம்பாளையம் கிராம த்தில் ஒரு இடத்தில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர் அருகிலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் புகுந்தது. தோட்டத்தில் 30 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. விடிய, விடிய தண்ணீர் பாய்ந்ததால் கிணறு முழுவதும் நிரம்பி வழிந்தது.

    கிணறு நிரம்பியதால் அருகிலுள்ள கருவேப்பிலை தோட்டத்திலும் தண்ணீர் சூழ்ந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து ள்ளனர். தற்போது மழை பெய்ததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நேரத்தில் இவ்வளவு குடிநீர் வீணானது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெள்ளாதி ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது -

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்காமல் உள்ளது.

    இச்சூழ்நிலையில் தேரம்பாளையம் பகுதியில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வரை வீணாகி வருகிறது.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை என்றனர்.

    • பாஸ்கர் சாமிதாஸ் கோவை சுந்தராபுரத்தில் போதகராக உள்ளார்.
    • சாலையோரம் நின்ற சரக்கு ஆட்டோ மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

    கவுண்டம்பாளையம்

    தூத்துக்குடியை சேர்ந்தவர் பாஸ்கர் சாமிதாஸ் (வயது37). இவர் கோவை சுந்தராபுரத்தில் போதகராக உள்ளார்.

    இவர் சம்பவத்தன்று தனது காரில் கோவை-துடியலூர் சாலையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்றார்.கார் துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி கேட் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது மோதி சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது.

    மேலும் அங்கு நடந்து சென்ற நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் (40) என்பவர் மீதும் மோதியது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் காரை ஓட்டி வந்த பாஸ்கர் சாமிதாஸ் வலது கையில் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார் விபத்து நடைபெற்ற காட்சி அருகில் இருந்த பேக்கரி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியு ள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைராலாகி வருகிறது.

    ×