என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நிற்கும்.

    கோவை,

    கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த ரெயிலில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த ரெயிலில் பயணித்து திருப்பதிக்கு சென்று வந்தனர்.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. ரெயிலை கூடுதல் நாட்களும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் எழுந்தது.

    இந்த நிலையில் கோவை-திருப்பதி இடை யே செவ்வாய்க்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வந்த ரெயில், நிரந்தரமாக வாரத்துக்கு 4 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை-திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை தோறும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரெயிலானது, வாரத்துக்கு 4 நாட்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளது.

    அதன்படி கோவை-திருப்பதி விரைவு ரெயில் (எண்:22616) செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

    திருப்பதி-கோவை ரெயில் (எண்: 22615) திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு, அதே நாள் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும்.

    இந்த ரெயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆத்திரம் அடைந்த பெண் தனது மகள் மற்றும் சிலருடன் சேர்ந்த வாலிபரை தாக்கினார்.
    • 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கரூரை சேர்ந்த 36 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அடிக்கடி கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள ஒரு மடத்தில் தங்கி செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் பெண்ணின் மகளுக்கு தெரிய வரவே அவர் தனது தாயை கண்டித்தார். இதனால் பெண் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

    சம்பவத்தன்று வாலிபர் மடத்துக்கு சென்றார். அப்போது பெண் அவருடன் பேசாமல் இருந்தார். உடனடியாக வாலிபர் தனது கள்ளக்காதலியிடம் சென்று ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெண் தனது மகள் மற்றும் சிலருடன் சேர்ந்த வாலிபரை தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆழியாறு போலீசார் கள்ளக்காதலனை மகளுடன் சேர்ந்து தாக்கிய பெண் அவரது மகள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா மங்கலநிசாந்தா மற்றும் உறவினர்களுக்கு போலி விசாவை தந்துள்ளார்.
    • போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜஷ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    இலங்கையை சேர்ந்த பிரேமரத்னா மகன் மங்கலநிசாந்தா (வயது 48). இவர் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம், வடகோவையில் தனியார் ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா (வயது34) என்பவரிடம், எனக்கும் உறவினர்களுக்கு விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என கேட்டார். இதற்காக அவர் சகல ஆவணங்களையும் சமர்ப்பித்து இருந்தார்.

    அப்போது விசா பெறுவதற்கு ரூ.11 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்று ஜஷ்வா கூறினார். எனவே மங்கல நிசாந்தா மற்றும் உறவினர்கள் ஜஷ்வாவின் வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 11 லட்சத்து 71 ஆயிரத்து 466 பணத்தை செலுத்தி உள்ளனர்.

    அதன்பிறகு அவர்களுக்கு போலி விசா தரப்பட்டது. இந்த நிலையில் மங்கலநிசாந்தாவின் உறவினர் அந்த விசா மூலம் இலங்கை சென்றார். அப்போது கொழும்பு விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். இதில் அது போலி விசா என்பது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த மங்கலநிசாந்தா, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏஜென்சி உரிமையாளர் ஜஷ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்
    • சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

    சூலூர்,

    கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்தநிலையில் சூலூர் மற்றும் கோட்டூரில் புதிய மகளிர் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

    இந்த 2 புதிய மகளிர் போலீஸ் நிலையங்களை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    சூலூரில் நடந்த மகளிர் போலீஸ் நிலைய திறப்பு விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டார். போலீஸ்நிலையத்தை டி.எஸ்.பி. ைதயல் நாயகி ரிப்பன் வெட்டி திறந்தார். போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் பிரமுகர்கள் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

    தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாரா யணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூலூர் காவல் நிலையத்தில் எண்ணற்ற வழக்குகள் மகளிர் சார்ந்து வருவதால் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    தற்போது அங்கு செல்ல வேண்டியது இல்லை. சூலூரில் தொடங்கப்பட்டு உள்ள மகளிர் காவல் நிலையத்திலேயே தீர்வு காணலாம்.

    அனைத்து உட்கோட்டத்திலும் விரைவில் மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்படும். அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் சைபர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும். மகளிர் எந்த நேரத்திலும் மகளிர் காவல் நிலையங்களை அணுகி சைபர் தொடர்பான குற்றங்களுக்கு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், கண்ணம்பாளையம் பசுபதி, சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ், தி.மு.க. கோவை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் செல்வகுமார், சூலூர் பேரூராட்சி உறுப்பினர் விஜயகுமார், பாஜக மகளிர் மாவட்ட அணி தலைவர் ரேவதி, பொருளாளர் கார்த்திகேயினி, கண்ணம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் பத்மநாபன், மகளிர் அமைப்பு தன்னார்வலர் வெற்றிச்செல்வி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சூலூர் மகளிர் போலீஸ் நிலையம் கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், சுல்தான்பேட்டை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட 6 போலீஸ்நிலையங்களை உள்ளடக்கி இருக்கும். 

    • வாலிபர்கள் குடோனில் இருந்து செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • அனீஸ் ரகுமான் மற்றும் மன்சூர் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குனியமுத்தூர்,

    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (வயது42). இவர் கரும்புகடை பாரதி நகரில் பழைய மின்சாதன பொருட்கள் குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கரும்பு கடையை சேர்ந்த அப்பாஸ் (23) என்பவர் வேலை பார்த்தார்.

    இதையடுத்து அவர் வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் வழக்கம்போல காலையில் குடோனை திறப்பதற்கு அமீர்அப்பாஸ் சென்றார். பின்னர் குடோனை திறந்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் குடோன் திறந்து இருப்பதை கண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் உள்ளே இருந்த 5 கிலோ செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் வெளியே சென்று விட்டு வந்த அமீர்அப்பாஸ், அந்த வாலிபர்கள் குடோனில் இருந்து செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 4 வாலிபர்களையும் மடக்கி பிடித்து கரும்புகடை போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இவரது குடோனில் வேலை பார்த்த அப்பாஸ் (23) என்பவர், அவரது நண்பர்களான அனீஸ் ரகுமான் (22), மன்சூர் ரகுமான் (24), தவூபிக் (17) ஆகியோர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று குடோனில் இருந்த பொருட்களை திருட முயன்றதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இதில் அனீஸ் ரகுமான் மற்றும் மன்சூர் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்ணின் தந்தை தகராறை விலக்கிவிடவே சென்றது தெரியவந்ததால் விசாரணைக்கு போலீசார் விடுவித்தனர்.
    • போலீசார் விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). கூலித் தொழிலாளி. இவரும் செட்டிப்பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு பிரசாந்த் தனது காதலிக்கு பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி வாழ்த்து சொல்வதற்காக தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.

    குடிபோதையில் இருந்த அவர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். அப்போது பிரசாந்த் தனது காதலியின் பெயரை கூறி வெளியே வருமாறு அழைத்தார்.

    இந்த சத்தம் கேட்டு பெண்ணின் தந்தை மகாதேவன், தாய் மாமா விக்னேஷ் ஆகியோர் வெளியே வந்தனர். அப்போது பிரசாந்த் அவர்களிடம் பிறந்த நாள் கொண்டாட தனது காதலியை வெளியே அனுப்புமாறு கூறி தகராறு செய்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை வெட்டினார். இதில் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விக்னேஷ், பிரசாந்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் இளம்பெண்ணின் தந்தை மகாதேவன், பிரசாந்தை கட்டையால் தாக்கியதாக அவருடன் சென்ற நண்பர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மகாதேவனையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தகராறை விலக்கிவிடவே சென்றது தெரியவந்தது. இதையடுத்து மகாதேவனை விசாரணைக்கு பின்னர் போலீசார் விடுவித்தனர்.

    • பஸ் கண்டக்டர் அபுபக்கர் சித்திக் தூங்குகிறார் என நினைத்து அவரை எழுப்பினார்.
    • போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    கோவை,

    மதுரை அருகே உள்ள ஏழுமலையை சேர்ந்தவர் பெரியசாமி என்ற முருகன் (வயது 50). இவர் கேரள மாநிலம் திருச்சூரில் சலவைத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

    பெரியசாமி சொந்த ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டார். இதற்காக அவர் திருச்சூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கேரள மாநில அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் பயணம் செய்த போது பெரியசாமி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    பஸ் பொள்ளாச்சி பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். ஆனால் பெரி யசாமி மட்டும் இறங்காமல் இருந்தார். இதனை பார்த்த பஸ் கண்டக்டர் அபுபக்கர் சித்திக் தூங்குகிறார் என நினைத்து அவரை எழுப்பினார்.

    ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக அவர் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஸ்ருதி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ரகு வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
    • இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள வி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் ரகு (வயது 39). டிரைவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் மைசூரை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டது. இதனால் ஸ்ருதி தனது கணவரை பிரிந்து மைசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ரகு மைசூருக்கு சென்று தனது மனைவியை அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்ருதி விவாகரத்து கேட்டு தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ரகு கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

    இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடந்தது.
    • கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் கெம்மாரம்பாளையம் ஊராட்சி கண்டியூர் கிராமத்தில் தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டம் இணைந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உழவர் தின விழா மற்றும் விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். காரமடை வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி வரவேற்றார். கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.

    கோவை வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் வெங்கடாசலம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் காடுகள் வணிக மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபெருமாள், காரமடை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் காரமடை தோட்டக்கலை உதவி இயக்குனர் சுசீந்திரா, என்ஜீனியரிங் துறை உதவி பொறியாளர் ஹசீனா, கால்நடை உதவி மருத்துவர் வருண், உதவி வேளாண்மை அலுவலர் ராமகிருஷ்ணன், பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் சிவசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரிதா நன்றி கூறினார்.

    • அபிலாஷ் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கணபதி அருகே மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது26). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டு இருந்தார்.

    இந்நிலையில் அபிலாஷ்க்கு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் அபிலாஷிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். அவர் பலமுறை நேரில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் இளம்பெண் பேச மறுத்து விட்டார். இதனால் அபிலாஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று அபிலாஷ் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன.
    • விளம்பரப் பலகை, பிளக்ஸ பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன. இதை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

    இதுகுறித்து காரமடை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-ன்படி நகராட்சி எல்லைப் பகுதியில் விளம்பரப் பலகை, பிளக்ஸ பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்க சட்டம் உள்ளது.

    மேலும் விளம்பர பலகைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட இட உரிமையாளர் மற்றும் விளம்பர உரிமையாளரே முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே காரமடை நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. அரசு, தனியார் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வீரம்பாளையத்தில் 9 கடைகள் மூடப்பட்டன.
    • மளிகை கடைகளில் ஆய்வு செய்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை,

    கோவையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டர் தூரத்துக்குள் சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கும் பெட்டிக்கடைகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டிருக்கிறார்.

    கோவையில் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்திருப்பது சமீபத்தில் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட அளவில் ஒவ்வொரு பள்ளிக்கும் அருகில் 100 மீட்டர் தூரத்துக்குள் பெட்டிக்கடைகள் இருக்கிறதா என கணக்கெடுக்கப்பட்டது.

    துடியலூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, ஆலாந்துறை, வடவள்ளி, கிணத்துக்கடவு, காருண்யா நகர், க.க.சாவடி, கருமத்தம் பட்டி, செட்டிபாளையம், கோவில்பாளையம், சுல்தான்பேட்டை, சூலூர், பொள்ளாச்சி, கோமங்கலம் என அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள பெட்டிக்கடைகள் பட்டியலிடப்பட்டன. மொத்தம், 256 இடங்களில் பெட்டிக்கடைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இவற்றை அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் நேரில் ஆய்வு செய்து போதை பொருட்கள் விற்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விற்பது உறுதியானால் உடனடியாக பெட்டிக்கடைகளை அகற்ற வேண்டும் அல்லது மூடி சீல் வைக்க வேண்டுமென கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கல்வீரம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான குழு நேற்று கள ஆய்வு செய்தது. கல்வீரம்பாளையத்தில் 9 கடைகள் மூடப்பட்டன. இதில் இரு பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டன. மளிகை கடைகளில் ஆய்வு செய்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் குழுக்கள் அமைத்து பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    ×