என் மலர்
கோயம்புத்தூர்
- பணத்தை வாங்கிய வேகத்தில் குட்டி, ஏற்கனவே அங்கு தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பியோடி விட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
கோவை தெலுங்குபாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது44). இவர் நகைகள் வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் அடிக்கடி வேலை விஷயமாக கோவையில் ஒரு தனியார் வங்கிக்கு சென்று வருவார். அப்போது அந்த வங்கியில் வேலை பார்க்கும் வீட்டுக்கடன் மேலாளர் அறிமுகம் ஆனார்.
அவர், பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்ற நபரை பிரகாசுக்கு அறிமுகப்படுத்தினார். குட்டி, தன்னை ரியல் எஸ்டேட் மற்றும் பல தொழில் செய்து வருவதாக கூறினார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குட்டி, பிரகாசுக்கு போன் செய்தார். அப்போது தன்னிடம் 2½ கிலோ தங்க நகைகள் இருக்கிறது. அதனை விற்று தந்தால் கமிஷன் தருவதாக கூறினார்.
இதனை உண்மை என நம்பிய பிரகாசும், நீ யாரிடமோ விற்பதற்கு பதிலாக என்னிடம் கொடுத்தால் நானே வாங்கி கொள்கிறேன். அதற்கான பணத்தையும் தந்து விடுகிறேன் என தெரிவித்தார்.
அதற்கு குட்டி, நான் பொள்ளாச்சியில் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அங்கு வந்து வாங்கி கொள்கிறீர்களா என கேட்டார். இதையடுத்து பிரகாசும் நகையை வாங்குவதற்காக அதற்கு தேவையான பணத்தை எடுத்து கொண்டார்.
மேலும் தன்னுடன், வங்கி மேலாளர் மற்றும் டிரைவருடன் தனது காரில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டார். பொள்ளாச்சி சென்றதும் குட்டிக்காக அவர் சொன்ன இடத்தில் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
நீண்ட நேரம் கழித்து குட்டி ஒரு காரில் வந்து இறங்கினார். அவருடன் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். அவர்களை போக சொல்லி விட்டு குட்டி மட்டும் இறங்கி கொண்டார்.
பின்னர் குட்டி, நகை வியாபாரி பிரகாஷ் மற்றும் மேலாளர், டிரைவர் பிரகாசின் டிரைவர் ஆனந்த் ஆகியோருடன் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் பகுதிக்கு சென்றனர்.
அப்போது குட்டியுடன் ஏற்கனவே காரில் வந்த ஆணும், பெணும் அங்கு இருந்தனர். வேறு யாரையாவது பார்க்க வந்திருப்பர் என பிரகாஷ் நினைத்தார்.
காரை விட்டு இறங்கியதும், குட்டி பிரகாசை பார்த்து நீங்கள் கொண்டு வந்த பணத்தை காட்டுங்கள் என தெரிவித்தார். அவரும் பேக்கில் வைத்திருந்த ரூ.1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திறந்து காண்பித்தார். நீங்கள் பணத்தை கொடுங்கள் நான் நகையை தருகிறேன் என்றார்.
அவரும் நம்பி பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிய வேகத்தில் குட்டி, ஏற்கனவே அங்கு தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பியோடி விட்டார்.
இதனால் அதிர்ச்சியான பிரகாஷ் தனது காரில் அவர்களை துரத்தி சென்றார். ஆனால் குட்டி சென்ற கார் எங்கு சென்றது என்றே தெரியவில்லை.
இதையடுத்து பிரகாஷ் ஆனைமலை போலீஸ் நிலையம் சென்று, நகை இருப்பதாக கூறி தன்னிடம் இருந்து ரூ.1.37 கோடியை பறித்து சென்ற குட்டி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.
- குடிபோதையில் ஜீவானந்தம் திருமாயனை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
- இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் திருமாயன் (வயது67). கூலித் தொழிலாளி.
இவரது பேத்தியை கவுண்டன்பாளையத்தை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் ஜீவானந்தம் (25) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். தற்போது ஒரு மகன் உள்ளார்.
கடந்த 1 ½ வருடங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து தாத்தா திருமாயன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடிபோதையில் ஜீவானந்தம் அங்கு சென்றார். அவர் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம், திருமாயனை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய திருமாயனை அவரது உறவினர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறில் தாத்தாவை தாக்கிய மாநகராட்சி ஊழியர் ஜீவானந்தத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
- அபிஷேக் தன்வீர் கூறும்போது, இதுவரை அணி வீரராக ஆடினேன். தற்போது கேப்டன் பொறுப்பேற்று உள்ளேன்.
- எங்கள் அணியில் கோவையை சேர்ந்த வீரர்களும் இருப்பதால் கோவை ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்புகிறோம்.
தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 7-வது சீசன் நாளை(திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(ஜூலை) 12-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
இந்த போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்கிறது. அதன்படி கோவையில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதனை முன்னிட்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ஜெகதீசன், நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் அருண்கார்த்திக், சேலம் அணி கேப்டன் அபிஷேக் தன்வீர் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ஜெகதீசன் கூறியதாவது:-
போட்டியின் போது எதிரணியின் வியூகத்தை பார்த்து எங்களது வெற்றிக்கு திட்டமிடுவோம். நடப்பு சாம்பியன் என்ற போதிலும் எவ்வித அழுத்தமும் இன்றி அணியினர் அனைவரும் ஒன்றாக இணைந்து உற்சாகத்துடன் இந்த போட்டிகளை எதிர்கொள்வோம். இதுவே எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் அருண் கார்த்திக் கூறும்போது, எங்கள் அணியில் கோவையை சேர்ந்த வீரர்களும் இருப்பதால் கோவை ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்புகிறோம். ஐ.பி.எல் போட்டி போன்று டி.என்.பி.எல் போட்டியிலும் இம்பாக்ட் வீரர் இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
சேலம் அணி கேப்டன் அபிஷேக் தன்வீர் கூறும்போது, இதுவரை அணி வீரராக ஆடினேன். தற்போது கேப்டன் பொறுப்பேற்று உள்ளேன். அணியின் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு முயற்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் விளையாட உள்ளோம் என்றார்.
- டாஸ்மாக் கடைகளில், எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வருபர்கள் மது வாங்கி குடித்து விட்டு, சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர்.
- பொதுமக்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை.
அன்னூர்:
கோவை மாவட்டம் அன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இந்த டாஸ்மாக் கடைகளில், எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வருபர்கள் மது வாங்கி குடித்து விட்டு, சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர்.
இந்த 2 கடைகளும், அன்னூரில் உள்ள மன்னீஸ்வரர் கோவில் அருகே உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மதுபோதையில் ஆங்காங்கே சிலர் கிடப்பது, பக்தர்களை முகம் சுளிக்கவும் வைக்கிறது. இதனால் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் பல நாட்களாக விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுவை வாங்கி குடித்தார்.
பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், தள்ளாடியபடியே சென்ற அவர், மன்னீஸ்வரர் கோவில் அருகே கீழே விழுந்துவிட்டார்.
தொடர்ந்து கோவில் முன்பு உள்ள சாலையில் அங்குமிங்குமாக உருண்டு கொண்டு இருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியாகினர்.
அவரின் அருகே சென்று அந்த நபரை பக்தர்கள் எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவே இல்லை. கோவில் முன்பு அங்குமிங்கும், சாலையில் உருண்டபடியே இருந்தார்.
இதையடுத்து பொதுமக்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை.
இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் அதிகாரிகளுக்கு 42 டேப்லெட்டுகளை வழங்கினார்.
- கல்லூரி மாணவர்களுக்கு ராக்கிங் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கோவை,
கோவை மாநகரில் உள்ள 14 போலீஸ் நிலையங்களில் களப் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய டேப்லெட் வழங்கும் நிகழ்ச்சி கோவை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு 42 டேப்லெட்டுகளை வழங்கினார்.இந்த டேப்லெட்டில் நிறுவப்பட்டுள்ள செயலிகள் உதவிகள் கொண்டு அலுவல் செய்ய வேண்டிய இடத்திற்கு எளிதில் செல்லலாம்.
களத்தில் உள்ள போலீசார் பணி விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதுடன் தகவல்களையும், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை பரிமாறிக் கொள்ளலாம்.
மேலும் இதன் மூலம் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள பதட்டமான இடங்கள், முதியோர்களுக்கு உதவுதல், ரவுடிகளை கண்காணித்தல் ஆகியவற்றையும் நிர்வகிக்க முடியும்.
இந்த டேப்லெட்டில் நிறுவப்பட்டுள்ள செயலிகள் மூலம் சேகரித்து பாதுகாக்கப்படும் விபரங்களை தினந்தோறும் அல்லது வாராந்திர அல்லது மாதாந்திர அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதிதாக ஏதேனும் ஒரு கட்டிடத்தையோ அல்லது ஒரு இடத்தையோ போலீஸ் நிலைய எல்லைக்குள் சேர்க்க வேண்டும் என்றால் அதையும் ஜி.பி.எஸ்உதவியுடன் மார்க் செய்து கொள்ளலாம். இதில் துணை கமிஷனர்கள் மதிவாணன், சண்முகம், சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிந்த பின்னர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை நகரில் சிக்னல் இல்லாத சாலையாக, ஸ்மார்ட் சாலையாக பயன்படுத்தி வருகிறோம். களத்தில் வேலை பார்க்கும் போக்குவரத்து போலீசாருக்கு ரிப்ளைட்டிங் ஜாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறக்கும் அன்றைய நாள் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் போலீசாரை எப்படி அனுகுவது என்பது குறித்து நோட்டீஸ் கொடுக்க உள்ளோம்.
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ராக்கிங் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்து கள் குறைந்து ள்ளது. சாலையை எளிமையாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மாயமான சிறுவர்கள் நிறைய பேர் காதல் வயப்பட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்களுடன் காணாமல் போனவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். தற்போது 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
- பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராஜா மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பெட்ரோல் பங்கிற்கு கியாஸ் நிரப்புவதற்காக மோகன் என்பவர் அவரது காரை ஓட்டி வந்தார்.
கார் பங்கிற்குள் வந்த போது திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் காரில் தீ வேகமாக பரவியது.
உடனடியாக அங்கு இருந்தவர் தீ பிடித்த காரை கிரேன் மூலமாக அங்கு இருந்து அகற்றினர். சற்று நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் காரில் எரிந்த தீயை அரை மணி நேரம் போராடி அனைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஹசன் வைரக்கல்லை புகைப்படம் எடுத்து விட்டு ஜாகீத்திடம் திருப்பி கொடுத்தார்.
- போலீசார் ஹசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கோவை,
கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜாகீத்(57). இவர் வைரக்கல் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஜாகீத் துபாயில் இருந்து 6½ பவுன் வைரக்கல் ஒன்று வாங்கினார்.
இவரது நண்பர் ஹசன் (39). இவர் கேரள மாநிலம் பேரமங்களம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹசன், ஜாகீத் வீட்டிற்கு வந்து வைரக்கல்லை விற்பனைக்காக கேட்டார்.
அப்போது ஜாகீத் தான் வைத்திருந்த வைரக்கல்லை அவரிடம் காண்பித்தார். அதனை பெற்று கொண்ட
இதையடுத்து அவர் வைரக்கல்லை வாங்கி வீட்டிலுள்ள அலமாரியில் வைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது ஹசன், அவரது வீட்டில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த ஜாகீத் வீட்டில் உள்ள அலமாரியை திறந்து பார்த்தபோது வைரக்கல்லை காணவில்லை.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஹசன் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. இது குறித்து ஜாகீத் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் ஹசனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வைரக்கல்லை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஹசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- குப்பையை தரம் பிரித்து கொடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- கழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தூய்மை பணி முகாம் நடந்தது. எம்.ஜி.ஆர். நகர் முதல் வளையங்குட்டை வரையில் முகாம் நடந்தது.
பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தனர். குப்பையை தரம் பிரித்து கொடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நீர் நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து நீர் நிலை கரைப்பகுதிகளில் மரம் நட்டு வைத்தனர். மேலும் அனுமதி இன்றி வைக்கப்படட் விளம்பர பலகைகள், பேனர்களை அகற்றினர்.அனுமதியின்றி கொட்டப்பட்ட கட்டுமான பொருட்களை, இடிப்பு கழிவுகளை அகற்றினர்.
பள்ளி கல்லூரிகளில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்குமார் செய்து இருந்தார்.
- பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை.
- பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பெள்ளேபாளையம் ஊராட்சி.
இதில் மொத்தம் 13 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து இரும்பறை ஊராட்சியில் உள்ள சிட்டேபாளையம் நீரேற்று கிணற்றில் தண்ணீர் நிரப்பி அங்கு 3 அடுக்கு முறையில் தண்ணீரை சுத்திகரித்து அதன் பின் ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை என்றும், அருகே உள்ள குட்டை நீர் சிட்டேபாளையம் நீரேற்று நிலையத்தில் கலந்து பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து இன்று காலை பெள்ளேபாளையம் ஊராட்சியை சேர்ந்த வெள்ளிகுப்பம்பாளையம், எஸ்.ஆர்.எஸ்.நகர் தென்பொன்முடி, எலகம்பாளைய,ம் வடபகத்தூர், எஸ்.எஸ்.நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள சிறுமுகை-அன்னூர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் சிவக்குமார், அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது இன்ஸ்பெக்டர் நித்யா திடீரென மறியலில் ஈடுபட்டிருந்த ஒருவரை பிடித்து இழுக்க முயற்சித்தார். இதனைப் பார்த்த சக பொதுமக்கள், இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மறியல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் தொடர்ந்தது.
- கடந்த மாதம் 13-ந் தேதி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொருட்காட்சி தொடங்கியது.
- ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வந்துள்ளது.
கோவை,
கோவை காந்திபுரம் அருகே உள்ள ஜெயில் மைதானத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொருட்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்பட 27 அரசுத்துறை அரங்குகளும், 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்கு என மொத்தம் 33 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பொழுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. அரசு பொருட்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளிகள் அழைத்து வரும் மாணவர்களுக்கு ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சியை நேற்று வரை 26 நாட்களில் 1 லட்சத்து 93 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வந்துள்ளது.
தினந்தோறும் ஆயிரக்கணக்காக பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை கண்டு களித்து செல்கி றார்கள்.
இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:-
கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் எங்கும் செல்ல முடியவில்லை. அப்போது தான் காந்திபுரம் அருகே ஜெயில் மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கிய தகவல் வரவே குழந்தைகளுடன் அங்கு சென்றோம் .அங்கிருந்த ராட்டினங்கள் மற்றும் விளையாட்டுகளில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினர்.
நாங்கள் அரசு பொருட்காட்சிக்கு சென்றது வாரவிடுமுறை என்பதால் அப்போது கோவை மாநகர போலீசார் சார்பில் வளர்ப்பு நாய்களில் சாகச கண்காட்சி நடைபெற்றது.
இதில் நாய்களின் சாகசம், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.
இதுதவிர அங்கு இருந்த ஸ்டால்களில் மிக குறைவான விலையில் அதிக பொருட்களை வாங்கி வந்தோம். மீண்டும் பொருட்காட்சிக்கு அழைத்து செல்லுமாறு எங்கள் குழந்தைகள் கூறி வருகின்றனர்.
அந்தளவுக்கு அங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போலீசார் அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- 8 பேரில் ஹபிஸ் என்பவருக்கு வலது கை எலும்பு முறிவு மற்றும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை உக்கடம் கரும்பு கடை பகுதியை சேர்ந்தவர்கள் அனஸ் (20), ஹபீஸ் (19), சிஹாப் (20), சன்சார் (20), சுகைல் (19), ஆசீர் (18), அரபாஸ் (19), இப்ராஹிம் (20). இவர்கள் அனைவரும் நண்பர்கள்.
நண்பர்கள் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதனையடுத்து காரில் நண்பர்கள் அனைவரும் ஊட்டி சென்றனர். காரை இப்ராஹிம் ஓட்டி சென்றார். ஊட்டி-குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த நண்பர்கள் மீண்டும் இன்று அதிகாலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் கார் முழுவதுமாக சேதம் அடைந்தது. கார் மின்கம்பத்தின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த 8 பேரில் ஹபிஸ் என்பவருக்கு வலது கை எலும்பு முறிவு மற்றும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மோட்டார் சைக்கிள் டேங் கவரில் பாட்டிலில் பெட்ரோல் வைத்து இருப்பதை போலீசார் பார்த்தனர்.
- சுரேஷ்குமார் தனக்கு வாழ பிடிக்க வில்லை என்று தற்கொலை செய்ய போவதாக கூறினார்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 41). மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 5-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் பாப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மோட்டார் சைக்கிள் டேங் கவரில் பாட்டிலில் பெட்ரோல் வைத்து இருப்பதை போலீசார் பார்த்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேஷ்குமார் அவருக்கு வாழ பிடிக்க வில்லை. எனவே தற்கொலை செய்ய போவதாக கூறினார். அதற்காக தான் பெட்ரோல் பாட்டிலுடன் சென்று கொண்டு இருக்கிறேன் என்றார்.
இதனையடுத்து போலீசார் சுரேஷ்குமாருக்கு அறிவுரை கூறி அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் லைசென்சு ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டனர்.
வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் காலையில் போலீஸ் நிலையம் வந்து மோட்டார் சைக்கிளை பெற்று செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி சூலூர் பழைய பஸ்நிலையத்தில் விஷம் குடித்து வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த தகவல் கிடைத்தும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த வாலிபர் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சுரேஷ்குமாரின் அண்ணன் தனது தம்பியை கடந்த 3 நாட்களாக காணவில்லை என சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவரிடம் பழைய பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த வாலிபரின் புகைப்படத்தை காட்டினர். அப்போது இறந்தது சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது.
தற்கொலை எண்ணத்துடன் சுற்றித்திரிந்த அவரை போலீசாரால் அறிவுரை கூறி அனுப்பி 12 மணி நேரத்துக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






