search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்
    X

    மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்

    • பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை.
    • பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பெள்ளேபாளையம் ஊராட்சி.

    இதில் மொத்தம் 13 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பவானி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து இரும்பறை ஊராட்சியில் உள்ள சிட்டேபாளையம் நீரேற்று கிணற்றில் தண்ணீர் நிரப்பி அங்கு 3 அடுக்கு முறையில் தண்ணீரை சுத்திகரித்து அதன் பின் ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் பவானி ஆற்றில் இருந்து சிட்டேபாளையத்திற்கு வரும் தண்ணீர் சுத்தமாக வருவதில்லை என்றும், அருகே உள்ள குட்டை நீர் சிட்டேபாளையம் நீரேற்று நிலையத்தில் கலந்து பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து இன்று காலை பெள்ளேபாளையம் ஊராட்சியை சேர்ந்த வெள்ளிகுப்பம்பாளையம், எஸ்.ஆர்.எஸ்.நகர் தென்பொன்முடி, எலகம்பாளைய,ம் வடபகத்தூர், எஸ்.எஸ்.நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள சிறுமுகை-அன்னூர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் சிவக்குமார், அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்ஸ்பெக்டர் நித்யா திடீரென மறியலில் ஈடுபட்டிருந்த ஒருவரை பிடித்து இழுக்க முயற்சித்தார். இதனைப் பார்த்த சக பொதுமக்கள், இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் மறியல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் தொடர்ந்தது.

    Next Story
    ×