search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தங்க நகை வியாபாரியிடம் ரூ.1.37 கோடி பறித்து விட்டு காரில் தப்பிய வாலிபர்
    X

    கோவையில் தங்க நகை வியாபாரியிடம் ரூ.1.37 கோடி பறித்து விட்டு காரில் தப்பிய வாலிபர்

    • பணத்தை வாங்கிய வேகத்தில் குட்டி, ஏற்கனவே அங்கு தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பியோடி விட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை தெலுங்குபாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது44). இவர் நகைகள் வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் அடிக்கடி வேலை விஷயமாக கோவையில் ஒரு தனியார் வங்கிக்கு சென்று வருவார். அப்போது அந்த வங்கியில் வேலை பார்க்கும் வீட்டுக்கடன் மேலாளர் அறிமுகம் ஆனார்.

    அவர், பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்ற நபரை பிரகாசுக்கு அறிமுகப்படுத்தினார். குட்டி, தன்னை ரியல் எஸ்டேட் மற்றும் பல தொழில் செய்து வருவதாக கூறினார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று குட்டி, பிரகாசுக்கு போன் செய்தார். அப்போது தன்னிடம் 2½ கிலோ தங்க நகைகள் இருக்கிறது. அதனை விற்று தந்தால் கமிஷன் தருவதாக கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய பிரகாசும், நீ யாரிடமோ விற்பதற்கு பதிலாக என்னிடம் கொடுத்தால் நானே வாங்கி கொள்கிறேன். அதற்கான பணத்தையும் தந்து விடுகிறேன் என தெரிவித்தார்.

    அதற்கு குட்டி, நான் பொள்ளாச்சியில் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அங்கு வந்து வாங்கி கொள்கிறீர்களா என கேட்டார். இதையடுத்து பிரகாசும் நகையை வாங்குவதற்காக அதற்கு தேவையான பணத்தை எடுத்து கொண்டார்.

    மேலும் தன்னுடன், வங்கி மேலாளர் மற்றும் டிரைவருடன் தனது காரில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டார். பொள்ளாச்சி சென்றதும் குட்டிக்காக அவர் சொன்ன இடத்தில் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

    நீண்ட நேரம் கழித்து குட்டி ஒரு காரில் வந்து இறங்கினார். அவருடன் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். அவர்களை போக சொல்லி விட்டு குட்டி மட்டும் இறங்கி கொண்டார்.

    பின்னர் குட்டி, நகை வியாபாரி பிரகாஷ் மற்றும் மேலாளர், டிரைவர் பிரகாசின் டிரைவர் ஆனந்த் ஆகியோருடன் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் பகுதிக்கு சென்றனர்.

    அப்போது குட்டியுடன் ஏற்கனவே காரில் வந்த ஆணும், பெணும் அங்கு இருந்தனர். வேறு யாரையாவது பார்க்க வந்திருப்பர் என பிரகாஷ் நினைத்தார்.

    காரை விட்டு இறங்கியதும், குட்டி பிரகாசை பார்த்து நீங்கள் கொண்டு வந்த பணத்தை காட்டுங்கள் என தெரிவித்தார். அவரும் பேக்கில் வைத்திருந்த ரூ.1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திறந்து காண்பித்தார். நீங்கள் பணத்தை கொடுங்கள் நான் நகையை தருகிறேன் என்றார்.

    அவரும் நம்பி பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிய வேகத்தில் குட்டி, ஏற்கனவே அங்கு தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பியோடி விட்டார்.

    இதனால் அதிர்ச்சியான பிரகாஷ் தனது காரில் அவர்களை துரத்தி சென்றார். ஆனால் குட்டி சென்ற கார் எங்கு சென்றது என்றே தெரியவில்லை.

    இதையடுத்து பிரகாஷ் ஆனைமலை போலீஸ் நிலையம் சென்று, நகை இருப்பதாக கூறி தன்னிடம் இருந்து ரூ.1.37 கோடியை பறித்து சென்ற குட்டி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×