என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 1 ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு இருந்த 10 வாழை மரங்கள் வெட்டப்பட்டன.
    • வாழை மரங்களை வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் சத்தி ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). விவசாயி.

    இவர் அல்லிகுளம் பகுதியில் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி ராஜேந்திரன் வேலையை முடிந்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இரவு தோட்டத்துக்குள் நுழைந்த மர்மநபர் யாரோ 1 ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு இருந்த 10 வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்றனர்.

    மறுநாள் காலையில் தோட்டத்துக்கு சென்ற ராஜேந்திரன் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தர். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    • காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மாணவியின் பெற்றோர் மகளை தங்களுடன் வா என அழைத்தனர்.

    கோவை:

    கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் 23 வயது மாணவி.

    இவர் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் படித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இடுக்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் அனீஸ் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாணவி தனது காதலை தொடர்ந்து வந்தார்.

    நேற்றுடன் மாணவியின் பட்டப்படிப்பு முடிந்தது. எனவே தன்னை அழைத்து செல்ல வருமாறு மாணவி அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து அனீஸ் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 9 பேருடன் கல்லூரிக்கு வந்தார்.

    மாணவியின் பெற்றோரும் தங்களது மகளை அழைத்து செல்வதற்காக கல்லூரிக்கு வந்திருந்தனர்.

    மாணவி தனது பெற்றோர் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. மாணவியின் பெற்றோர் மகளை தங்களுடன் வா என அழைத்தனர். ஆனால் அவருக்கு தான் வீட்டிற்கு சென்றால் காதலை மறந்து விடு என்பார்கள்.

    அத்துடன் வேறு யாருக்காவது தன்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என நினைத்து பயந்தார். இதனால் அவர்கள் கூப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    நான் உங்களுடன் வரமாட்டேன். எனது காதலருடன் தான் செல்வேன் என கூறினார். இதனால் பெற்றோர் மீண்டும் அவரிடம் பேசி பார்த்தனர். ஆனால் மாணவி தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.

    இதனை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். கல்லூரி நிர்வாகம் பெற்றோருடனே செல்லவே நாங்கள் அனுமதிப்போம் என தெரிவித்தனர். அப்போதும் அவர் பெற்றோருடன் செல்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    இதுபற்றிய தகவல் ஆனைமலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவி, அவரது பெற்றோர், மாணவியின் காதலன், காதலனின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போதும் மாணவி தான் காதலனுடன் தான் செல்வேன். பெற்றோருடன் செல்லமாட்டேன் என தெரிவித்ததால், போலீசார் மாணவியை அவரது காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

    • சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் அன்னூர் போலீசில் புகார் செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    கோவை:

    கோவை அன்னூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஸ் என்ற காந்தி (வயது26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் கடந்த 11-ந் தேதி ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் 12-ந்தேதி காந்திபுரத்தில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சிறுமியை கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். அங்கு வைத்து காந்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் அன்னூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சிறுமி கேரள மாநிலத்தில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் காந்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்த காந்தியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாலிபர் மீது கஞ்சா மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய ஸ்ரீகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் தமிழ் அரசு (வயது 24). இவர் மீது கஞ்சா மற்றம் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் ஒரு வழக்கில் கைதான தமிழ் அரசு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்த வெளியே வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (20) என்வருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று தமிழ் அரசு தனது தம்பியுடன் ஸ்ரீகாந்தை கொலை செய்வதற்காக அந்த பகுதியில் உள்ள காலி இடத்துக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தமிழ் அரசின் வயிறு மற்றும் இடுப்பில் குத்தினார். இதனை தடுக்க சென்ற அவரது தம்பிக்கும் கையில் கத்திக்குத்து ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஸ்ரீகாந்த் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழ் அரசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதத்தில் தமிழ் அரசை கத்தியால் குத்திய ஸ்ரீ காந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன
    • 11-வது வார்டில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத்பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தலைவராக மெஹரீபாபர்வீன், துணைத்தலைவராக அருள்வடிவு ஆகியோர் உள்ளனர்.

    இந்த நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத்பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

    இவரது வார்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், சீரான குடிநீர் விநியோகம், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்க வில்லை என கூறப்படுகிறது. ஜம்ரூத்பேகம் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினார்.

    ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே 11-ம் வார்டில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஜம்ரூத்பேகம் வீட்டிற்கு சென்று குப்பைகளை அகற்ற வலியுறுத்தினர்.

    இதனால் வேதனை அடைந்த ஜம்ரூத்பேகம் மகன்களுடன் சேர்ந்து வார்டு பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றுவது என்று முடிவு செய்தார். இதன்படி அவர் 11-வது வார்டுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு தேங்கி கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    மேட்டுப்பாளையம் வார்டு உறுப்பினர் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில், மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய வீடியோ சமூகவலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    • இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்
    • போலீசார் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் சதீசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பலாங்கரையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு செல்போனை பார்த்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஸ் (வயது 37) என்பவர் இளம்பெண்ணின் வாயை மூடி அவரை வீட்டிற்குள் தூக்கி சென்றார். பின்னர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி யடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    உடனே சதீஸ், இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து இளம்பெண் நெகமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை வீட்டிற்குள் தூக்கி சென்ற பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் சதீசை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • இன்ஸ்டாகிராம் மூலமாக துடியலூர் அருகே டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக துடியலூர் அருகே உள்ள பன்னிமடையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம்.

    கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி என்னை தொடர்பு கொண்ட சக்தி தங்கவேல் தனக்கு காய்ச்சல் அடிப்பதாகவும், உதவி செய்ய வருமாறும் அழைத்தார்.

    இதனையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு அவர் தனியாக இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திய சக்தி தங்கவேல் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து என்னை அவர் பலாத்காரம் செய்ததால் நான் 2 மாத கர்ப்பமானேன். இதுகுறித்து நான் அவரிடம் தெரிவி த்தேன். அதற்கு அவர் கருவை கலைத்து விடு என்றார். கருவை கலைக்க வில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    தற்போது அவர் என்னுடன் பேசுவதையும், பழகுவ தையும் தவிர்த்து விட்டார். எனவே திருமணம் செய்வ தாக ஆசைவார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய சக்தி தங்கவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சக்தி தங்கவேலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • வேறு வேறு இடங்களில் இருந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் ரெயில் சந்திப்பு அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த கூலித் தொழிலாளி மீனாட்சி சுந்தரம் (வயது 24), விஷ்ணு சங்கர் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பெரியக்கடை வீதி போலீசார் பருப்பு குடோன் வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் கஞ்சாவை பதுக்கி விற்ற கெம்பட்டி காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனசேகரன் (32),செல்வபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி துரை (43) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சாய்பாபா காலனி போலீசார் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற இடையர்பாளையத்தை சேர்ந்த சரவணகு மார் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் சரவணகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சாஸ்திரி மைதானம் அருகே சிலர் போதை மாத்திரை களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற சுந்தரம் வீதியை சேர்ந்த வசந்தகுமார் (23), இஸ்மாயில் சரீப் (42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 18 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பீளமேடு போலீசார் சவுரிபாளையம் ரோட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற தினேஷ் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 40 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள யஸ்வந்த் என்பவரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    • நாட்டு மருந்து கடைக்காரரும், வைத்தியருமான சின்ன தம்பிராஜை வனத்துறை சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் கைது செய்தனர்
    • பாம்பினை கொண்டு புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

    கோவை,

    கோவை மருதமலை அடுத்த கோவில்மேடு பகுதியில் ஒருவர் புலித்ேதாலை பதுக்கி வைத்து இருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தினார்கள்.

    இதன் ஒரு பகுதியாக நாட்டு மருந்துக்கடை வியாபாரியும், வைத்தியருமான சின்னதம்பிராஜ் (வயது 52) என்பவரின் கடையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு ஒரு புலித்தோல் சிக்கியது. வனத்துறை அதிகாரிகள் வைத்தியர் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அங்கு 3 மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவற்றில் ஒன்று ஏற்கெனவே செத்து அழுகிய நிலையில் இருந்தது. மண்ணுளி பாம்புடன் மான் கொம்பு ஒன்றும் சிக்கியது.இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் நாட்டு மருந்து வைத்தியர் சின்னதம்பிராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

    அவர் போலீசாரிடம் கூறுகையில் எனது தந்தை சின்னச்சாமி நாட்டு மருந்து கடை வைத்து இருந்தார். அவருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் மருத்துவ முறைகள் அத்துப்படி. இதன்மூலம் அவர் மருந்து தயாரித்து பலரின் நோய்களை குணப்படுத்தி உள்ளார்.

    இந்த மருந்துகள் தயாரிக்கும் முறையை அவர் எனக்கும் கற்று கொடுத்தார். அதன்படி நான் புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பது என்று முடிவு செய்தேன். இதற்காக மண்ணுளி பாம்பு, மான்கொம்பு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வந்தேன் என்றார். இதனை தொடர்ந்து நாட்டு மருந்து கடைக்காரரும், வைத்தியருமான சின்ன தம்பிராஜை வனத்துறை சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் கைது செய்தனர். சின்ன தம்பிராஜிடம் பறிமுதல் செய்யப்ப ட்டது உண்மையிலேயே புலித்தோல் தானா? என்று தெரியவில்லை. இது சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் நகை பறிப்பில் ஈடுபட்டனர்.
    • பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடை வீதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இங்கு எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

    இந்த நிலையில் பெண் ஒருவர் நேற்று காலை பொருட்கள் வாங்குவதற்காக பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். அங்கு உள்ள வெங்கட்ரமணன் வீதியில் நடந்து சென்றார். அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் வந்தனர்.

    திடீரென நடந்து சென்ற பெண்ணை அவர்கள் கீழே தள்ளினர். இதில் அந்த பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் நகை பறிப்பில் ஈடுபட்டனர். அதிர்ச்சி அடைந்த பெண் சுதாரித்து கொண்டு தங்கச்சங்கிலியை காப்பாற்றுவதற்காக கொள்ளையர்களுடன் பேராடினார்.

    இதற்கிடையே கடைவீதியில் நின்றிருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனை பார்த்த 2 கொள்ளையர்களும் நகைப்பறிப்பு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பொள்ளாச்சியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடைவீதி பஜாரில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிள் கும்பல் துணிகர வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு  கேமராக்களை கைப்பற்றிய போலீசார் அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெண்ணை கீழே தள்ளி நகைப்பறிப்பில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் முகக்கவசமும், பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் ஹெல்மெட்டும் அணிந்து இருந்தனர். இதுதொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் பொள்ளாச்சி மேம்பாலத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் நேற்று இரவு அதிவேகமாக வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

    இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த 2 பேரும் பொள்ளாச்சி கடைவீதியில் பெண் ஒருவரிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

    போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் விபத்தில் பலியானது தாராபுரத்தை சேர்ந்த சஞ்சய்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இன்னொருவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக பொள்ளாச்சி போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி கடை வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர், மேம்பால சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இந்த கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து, திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து 6 மணிக்கு தலைமை பூசாரி ரகுபதி அம்மனின் சூலத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் எலுமிச்சை மற்றும் பூக்கட்டுகளை குண்டத்தில் உருட்டி விட்டு அதன் பின்னர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், செயல் அலுவலரும், திருக்கோவில் உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டி.எஸ்.பி.க்கள் தென்னரசு, பாலாஜி, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 12 இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 550 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலின் பல்வேறு பகுதிகள் குறிப்பாக குண்டம் இறங்குமிடம், பவானி ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் இடங்கள், காணிக்கை செலுத்தும் இடங்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் சிசிடிவி காமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்தனர். 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    பக்தர்கள் வசதிக்காக கோவை, மேட்டுப்பா ளையம், அன்னூர் போன்ற இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    • அண்மையில் கூட ஆடி அமாவாசையன்று ஆற்றில் தண்ணீர் வராததால் பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் ஷவர் அமைத்திருந்தது.
    • வறண்டு கிடந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதை பார்த்த விவசாயிகள் தண்ணீரை வணங்கி வரவேற்றனர்.

    வடவள்ளி,

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பெய்யும். இந்த கால கட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

    சில நாட்கள் பெய்த மழை, அதன் பின்னர் பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். பயிர்களை பயிரிடுவதிலும் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

    கோவை நொய்யல் ஆற்றில் தென்மேற்கு பருவமழை நேரத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக நொய்யல் ஆறு தண்ணீர் இன்றி வறண்டே காணப்பட்டது.

    அண்மையில் கூட ஆடி அமாவாசையன்று ஆற்றில் தண்ணீர் வராததால் பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் ஷவர் அமைத்திருந்தது.

    தண்ணீர் பாய்ந்தோடிய ஆற்றில் இப்படி ஷவர் வைத்து, அதில், கை, கால்களை நனைத்து சென்ற பக்தர்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மழை பெய்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவை மாவட்ட பகுதிகளிலும், நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையையொட்டி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சிறுவாணி அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

    மேலும் தொடர் மழையால் கோவை குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி அணைக்கு நேற்று மதியம் முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதுவரை வறண்டு கிடந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதை பார்த்ததும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் சந்தோஷம் அடைந்தனர்.

    விவசாயிகள் ஓடி சென்று அணைக்கு வந்த நீரை தொட்டு, கைகூப்பி வணங்கி வரவேற்றனர். சிலர் தடுப்பணையில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    தற்போது கீழ்சித்தரை சாவடி கிளை வாய்க்காலில் இருந்து சுண்டப்பாளையம், வேடபட்டி வழியே வாய்க்காலில் பாசனத்திற்கான நீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் வெங்காயம், தாக்காளி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×