என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
    • கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள செங்குட்டை வீதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 60). பால் வியாபாரி. கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைத்து வைத்துவிட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து சதாசிவம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சண்முகம், உதவி கமிஷனர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு பெண் சதாசிவம் வீட்டிற்குள் சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் வெங்கமேட்டை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மனைவி ரமணி (33) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரது கூட்டாளியான வினையா (33) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட ரமணியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை காப்பாற்றுவதற்காக நான் முதலில் திருட ஆரம்பித்தேன். நான் ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் இருந்தேன். அப்போது எனக்கு போக்சோ வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்த வினையாவுடன் நட்பு ஏற்பட்டது. அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரை ஜாமீனில் வெளியே எடுத்தேன். பின்னர் 2 பேரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தோம்.

    நாங்கள் வீடு வாடகைக்கு கேட்க செல்வது போலவும், வேலை கேட்டு செல்வது போலவும், உறவினர் வீட்டை தேடி வந்தது போலவும் செல்வோம். அப்போது அங்கு திறந்து இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவோம். கொள்ளையில் ஈடுபடும் போது யாராவது வந்து விட்டால் அதற்கு ஏற்ப நாடகமாடி அங்கு இருந்து தப்பிச் சென்று விடுவோம். நாங்கள் பெண்கள் என்பதால் எங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

    நாங்கள் 2 பேரும் வீடு வாடகைக்கு கேட்டு செல்வது போல மசக்காளிபாளையம் பகுதியில் நோட்டமிட்டோம். அப்போது சதாசிவம் என்பவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைத்து வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்டோம். எனவே அவரது வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டோம். சம்பவத்தன்று நாங்கள் கால் டாக்சியில் மசக்காளி பாளையம் செங்குட்டை வீதிக்கு சென்றோம். வினையா காரில் அமர்ந்து இருந்தார். நான் காரில் இருந்து இறங்கி சென்று சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றோம்.

    போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    கைது செய்யப்பட்ட ரமணி மீது கரூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அவர் கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இவர் கொள்ளையடித்த நகைகளை அவரது சித்தி ஜெயந்தி என்பவரிடம் கொடுத்து பணமாக மாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. ஜெயந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட ரமணி, வினையா ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின.
    • மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை தீவனம் மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து, விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). இவர் அங்கு உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமாக நஞ்சேகவுண்டன் புதூரில் சுமார் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அஙகு இவர் நேந்திரன் வாழை பயிரிட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு 3 காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்தன. அங்கு இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின. அதன்பிறகு வாழைத்தார்களை மட்டும் பிடுங்கி ருசித்து விட்டு காட்டுக்குள் சென்றன.

    திருநாவுக்கரசு இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்றார். அப்போது வாழைத்தார்களை மட்டும் யானைகள் ருசித்துவிட்டு சென்றது தெரிய வந்தது. இது திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விவசாயி திருநாவுக்கரசு கூறுகையில், காட்டுப்பன்றி, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே அடர்வனத்தில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில், ஏற்கனவே வெட்டப்பட்டு உள்ள அகழிகளை ஆழப்படுத்த வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள மின்வேலிகளை முறையாக பராமரிக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இதற்கிடையே சிறுமுகை லிங்காபுரத்தில் பெரிய தந்தங்களுடன் கூடிய ஒற்றைக் காட்டு யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி லிங்காபுரம் சாலையோரத்தில் முகாமிட்டது. இதனை தற்செயலாக பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

    சிறுமுகை, லிங்காபுரத்தில் நீண்ட நேரமாக முகாமிட்டு இருந்த காட்டு யானை அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது. அதன்பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு, காந்தையூர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. இதனால் லிங்காபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க முகாம்கள் நடத்தப்படும்.
    • அடுத்த மாதம் 12-ந் தேதி சிங்காநல்லூர் வெங்கட்லட்சுமி திருமண மண்டபத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது

    இந்த முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, 3 சக்கர மொபட் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் நேரடியாக மனு அளித்தனர்.

    பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 7 பேருக்கு 3 சக்கர மொபட் ஆகியவற்றை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்த முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

    அவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றி தரப்படும். 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க முகாம்கள் நடத்தப்படும்.

    மாற்றுத் திறனாளி களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் 12-ந் தேதி சிங்காநல்லூர் வெங்கட்லட்சுமி திருமண மண்டபத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    எனவே இந்த முகாமை மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் யுனைடெட் இந்தியா சமூக நல அறக்கட்டளை சார்பில் மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கொடிசியா அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
    • விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(50).

    இவர் நேற்று முன்தினம் கொடிசியா அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது.

    அந்த கார் எதிர்பாராத விதமாக பாலாஜி மீது மோதியது. இதில் பாலாஜி தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாலாஜியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.2¼ கோடி மதிப்பிலான 1,265 செல்போன்கள் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • போதையில்லா கோவை திட்டத்திற்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.30 லட்சம் மதிப்புள்ள 143 செல்போன்களை உரிய ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிய வர்களிடம் ஒப்படைத்தார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் இதுவரை தனிப்படை மூலம் ரூ.2¼ கோடி மதிப்பிலான 1,265 செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கஞ்சாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 401 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 611 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ரூ. 33 லட்சம் மதிப்பில் கஞ்சா சாக் லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 4369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 34 ஆயிரத்து 350 மது பாட்டில்கள், 7, 735 ஆயிரம் லிட்டர் கள்ள சாராயம் மற்றும் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    26 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 326 திருட்டு வழக்குகளில் 444 பேர் கைது செய்யப்பட்டு ரூ. 4 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது.

    குழந்தைகளுக்கு எதிரான 116 பாலியல் குற்றங்களில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டில் இதுவரை 128 பாலியல் வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் 8 பேருக்கு சிறை தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

    மிஷன் கல்லூரி திட்டத்தின் கீழ் போதையில்லா கோவை என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண் 900 325 1100 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் எண் கல்லூரி வளாகம் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ஒட்டப்ப டும். போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    அவர்களது பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அற்புதராஜ் மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
    • 12 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கபணம் மாயமாகி இருந்தது.

    கோவை,

    கோவை அருகே உள்ள உப்பிலிபாளையம் கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் அற்புதராஜ்(வயது58).

    இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அற்புதராஜ் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கபணம், 3 வெள்ளி டம்ளர்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    சுற்றுலா முடிந்து வீட்டிற்கு திரும்பிய அற்புத ராஜ் கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.பின் னர் அவர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீ சில் புகார் அளித்தார்.

    புகா ரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரே கைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கோமதிசங்கரிடம் இருந்த ரூ. 400 பணத்தை பறித்து தப்பி செல்ல முயன்றார்.
    • போலீசார் சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் கோமதிசங்கர்(வயது24). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கோமதி சங்கரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த வாளை கோமதி சங்கரின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 400 பணத்தை பறித்து தப்பி செல்ல முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியில் கோமதி சங்கர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வாளை கழுத்தில் வைத்து மிரட்டி பணம் பறித்தது கணபதி மோர்மார்க்கெட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் சூர்யா(25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மூர்த்தியிடம் ரூ.500 பணத்தை பறித்து மிரட்டி சென்றனர்.
    • மூர்த்தி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சரவணம்பட்டி,

    கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி(51). இவர் சத்தி-விளாங்குறிச்சி ரோட்டில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 4 பேர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மூர்த்தியிடம் ரூ.500 பணத்தை பறித்து மிரட்டி சென்றனர்.

    இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், டிபன் கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறித்தது கணபதி மோர் மார்க்கெட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(18), 16 மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    • கோவை மாநகராட்சி 29வது வார்டு மோர் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.
    • 18, 31, 32, 40, 42, 43, 44, 46-ம் வார்டுகளில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

    கோவை,

    கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் கட்சி நிர்வாகிகளுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு தரப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோவை மாநகராட்சி 29வது வார்டு மோர் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. 30ம் வார்டு மணியக்காரம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள பாரதியார் ரோடு, அண்ணாநகர், ஸ்ரீதேவி நகர், மூகாம்பிகை நகர் மற்றும் பெரியார் நகரச்சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

    கணபதி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள பழுதான சாலைகளை சீரமைத்து தர வேண்டும். மாமரத்தோட்டம், மணல் தோட்டம் பகுதிகளில் உள்ள பூங்காவுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

    சங்கனூர் பாலத்தின் அடியில் உள்ள ஓடையை தூர்வார வேண்டும்.20வது வார்டில் பாரதி நகர் முதல் வ.உ.சி நகர் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.இதுதவிர 18, 31, 32, 40, 42, 43, 44, 46-ம் வார்டுகளில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • பிரவீனிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை சவுரிபாளையம் உடையாம்பாளையம் ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருகூர் ஏஜி புதூர் ரோட்டை சேர்ந்த பிரவீன்(வயது22) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பெரிய கடைவீதி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எல்ஜி தோட்டத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    உடனடியாக போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கெம்பட்டி காலனியை சேர்ந்த மனோஜ்குமார்(26), தர்மலிங்கம்(19) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கோண வாய்க்கால்பாளையம் கக்கன் நகர் ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த தொழிலாளி சதாம் உசேன்(21) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • தன்னார்வலர் ஒருவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் சர்க்கஸ் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    கோவை,

    கோவை வ.உ.சி மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இங்கு நாய்கள், கிளிகளை கொண்டும் சர்க்கஸ் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தன்னார்வலர் ஒருவர் பாம்பே சர்க்கசில் கிளிகளை முறையான பதிவு சான்று இல்லாமல் வைத்திருப்பதாகவும் அவற்றை துன்புறுத்துவதாகவும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சர்க்கஸ் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பாம்பே சர்க்கசில் ஆப்பிரிக்க மஞ்சள் கிளிகளான (காக்டூ) என்ற 2 வெளிநாட்டு கிளிகளை உரிய பதிவு சான்று இல்லாமல் பொழுது போக்கு நிகழ்ச்சியில் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 ஆப்பிரிக்க கிளிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன.

    இதில் 29-வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீ சபரி பாலாஜி நகர் பகுதியில் குடிநீர், சாக்கடை, தார் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக சரி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

    ஆனால் இதுவரை நகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இன்று காலை மேட்டுப்பாளையம்- குரும்பனூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், நகராட்சி பொறியாளர் சுகந்தி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாலை மறியலை கைவிட மறுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    காரமடை நகராட்சி 16-வது வார்டில் குளத்துப்பாளையம், முல்லை நகர் கொண்டசாமி நகர், பயணீர் காலணி ஆகிய பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், குப்பைகளை சேகரித்தல், குடிநீர் தொட்டியை சீரமைத்து புதுப்பித்தல், உப்பு தண்ணி குழாய்கள் புதுப்பித்தல், பொது சுகாதார வளாகத்தை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்ைகைகளை வலியுறுத்தி கேட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரமடை சிறுமுகை சாலையில் குளத்துப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பிரச்சினைகளுக்கு உட னடியாக தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காரமடை- சிறுமுகை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×