என் மலர்
கோயம்புத்தூர்
- கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.
- ஆழியார் திருக்கோவில் சோதனைச்சாவடியில் இருந்து கவியருவிக்கு செல்லும் வழி மூடப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் கவியருவி உள்ளது. இங்கு ஆண்டின் ஒருசில மாதங்களில் தண்ணீர் ரம்மியமாக கொட்டும். அப்போது பொதுமக்கள் திரண்டுவந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வர்.
இந்தநிலையில் ஆனைமலை வனப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே அருவிக்கு வரும் நீரோடைகளில் தண்ணீர்வரத்து அதிகமாக உள்ளது.
இதன்காரணமாக கவியருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு வேலியையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.
எனவே ஆழியார் திருக்கோவில் சோதனைச்சாவடியில் இருந்து கவியருவிக்கு செல்லும் வழி மூடப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறை ஊழியர்கள் தற்போது தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கவியருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்து உள்ளதால், அங்கு குளிப்பதற்காக ஆர்வமாக திரண்டு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆனைமலை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே கவியருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு வேலியையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே கவியருவியில் குளிக்க தடை விதித்து உள்ளோம். வனப்பகுதியில் கனமழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும், அங்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்து உள்ளனர்.
- சாலை வழியாக 20-க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் அங்கும் இங்குமாக சென்ற வண்ணம் இருக்கும்.
- பல ஆண்டுகளாக கவனிக்காமல் விடப்பட்டிருக்கும் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
கோவை,
தொழில் நகரான கோவையில் பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக மாறி காட்சி அளிக்கிறது. மெயின் சாலைகள் மட்டுமின்றி, தெருக்களில் உள்ள சாலைகளும், குறுக்கு சாலைகளும் மிகவும் பழுதடைந்து, குண்டும், குழியுடன் வருவோரை வரவேற்க காத்திருக்கின்றன இந்த சாலைகள்.
இந்த சாலைகளால் மக்கள் படும் கஷ்டங்களை சொல்லிமாளாது. அந்தளவுக்கு சாலைகள் மக்களை சிரமப்படுத்தி வருகிறது.
கோவை பொள்ளாச்சி ரோடு குறிச்சி சுந்தராபுரம் அருகே உள்ளது கல்லுக்குழி வீதி. இந்த பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதுதவிர ஒரு மேல்நிலைப்பள்ளி, கடைகள் மற்றும் சில நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
மேலும் இந்த வீதியானது அம்மணி அம்மாள் காலனி ,அம்மன் நகர், பூங்கா நகர், மாச்சம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதி ,துளசி கார்டன், அருள் கார்டன், திருநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையாகவும் உள்ளது. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையானது தற்போது இருப்பது போன்று இல்லை. இந்த சாலையிலும் 20க்கும் மேற்பட்ட மினி பஸ்கள், பல்வேறு வாகனங்களும், மோட்டார் சைக்கிள்களும், கார்களும் சென்று வந்த சாலை தான். இப்போது எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
பல வருடங்களுக்கு முன்பு பழுதாகியும் இதுவரை இந்த சாலையானது எந்தவித பராமரிப்புமின்றி, குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகளை வருத்தி எடுக்கும் சாலையாக மாறி விட்டது. இந்த வழியாக செல்பவர்களில் பலர் கீேழ விழுந்து எழும் நிலை காணப்படுகிறது.
குறிப்பாக பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் சைக்கிளில் வரும் போது குண்டும், குழி யில் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலையே நீடிக்கிறது. நடந்து செல்வதும் மிகவும் சிரமமாக தான் இருக்கிறது. ஏதாவது வாகனம் அங்கு வருகிறது என்று நினைத்து வழிவிட ஒதுங்கும் போது, குண்டுகளில் விழும் நிலை உள்ளது. 7 வருடங்களுக்கு முன்பு தார்சாலையுடன் மிகவும் நன்றாக காட்சியளித்த இந்த சாலையானது தற்போது தார்சாலை என்பதை பார்த்தே வருடங்கள் கடந்து விட்டது. இதுவரை அந்த சாலைக்கு விமோஷனம் கிடைத்தபாடில்லை.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக இச்சாலையானது தார் சாலையாக பள,பளவென்று காட்சி அளித்தது. ஒரு நாளைக்கு இந்த சாலை வழியாக 20-க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் அங்கும் இங்குமாக சென்ற வண்ணம் இருக்கும்.
அடிக்கடி மினிபஸ் வருவதால் நாங்களும், பஸ்சில் ஏறி எங்கள் வீட்டில் முன்பே இறங்கி விடுவதால் எங்களுக்கு எந்தவித களைப்புமே தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது அப்படி இருந்த சாலையா இப்படி இருக்கிறது என்று நினைக்கும் போது எங்களுக்குள் வருத்தம் ஏற்படுகிறது.வீட்டு வாசலை விட்டு இறங்குவதற்கு கூட எங்களுக்கு பயமாக இருக்கிறது.
அந்த அளவுக்கு சாலை கரடு, முரடாக, குண்டும், குழியாக காட்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக வீதிகளை தோண்டி, தோண்டி மூடியதால் சாலை முற்றிலும் சேதமாகி விட்டது. ஆங்காங்கே தெருக்களில் பள்ளங்கள் தோண்டி தோண்டி மூடப்படுவதால் வீதி முழுவதும் சிறு சிறு கற்கள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது இந்த சாலையில் இருசக்கர வாகனம் செல்வதே மிக சிரமமாக தான் இருக்கிறது. அந்தளவுக்கு மோசமாகி விட்டது.
மேலும் ஆங்காங்கே கிடக்கும் ஜல்லி கற்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் டயர்களில் குத்தி பஞ்சராகும் சூழ்நிலை உள்ளது.
குழிகள் தோண்டப்பட்டு காட்சி அளிப்பதுடன், சில நேரங்களில் வேலை என கூறி தெருவையும் அடைத்து விடும் சூழலும் உள்ளது. அந்த சமயங்களில் இரண்டு, மூன்று தெருக்கள் சுற்றி தான் வீட்டிற்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இருசக்கர வாகனத்தை வீட்டிற்குள் கொண்டு செல்ல முடியாது. அந்த வாகனத்தை பக்கத்து தெருவில் நண்பர்களிடம் சொல்லி நிறுத்தி வருகிறோம். அந்தளவுக்கு சாலை மிகவும் மோசமாகி விட்டது.
மழைக்காலம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். அனைத்து வீதிகளும், சேறும், சகதியுமாக காட்சியளிக்கும். மேடு பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகிறது. மேலும் அவ்வப்போது துர்நாற்றம் வீசும் சூழ்நிலை காணப்படுகிறது.
இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்கள் மழை நீர் தேங்கி நிற்பதால் பாம்புகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் பயந்து பயந்து வாழ்க்கையை கழிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. பல ஆண்டுகளாக கவனிக்காமல் விடப்பட்டிருக்கும் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
- குருஞானாம்பிகை தனது நகைகளை பீரோவில் வைத்திருந்தார்.
- சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை சாய்பாபா காலனி 8-வது வீதியை சேர்ந்தவர் குருஞானாம்பிகை(47). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நகைகளை பீரோவில் வைத்திருந்தார். சம்பவத்தன்று இவர் தனது நகைகளை பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. இது குறித்து குருஞானாம்பிகை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் சத்யராஜ் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கோவை,
கோவை செல்லபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் கிரதிக் ஆதித்யா( வயது 30). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் செல்வபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது எல்ஐசி காலனியில் இ சேவை மையம் நடத்தி வரும் சத்யராஜ் (40 ) என்பவர் எங்களது ஆஸ்பத்திரி டாக்டர் பெயரில் போலியான இறப்பு சான்று மற்றும் போலியான முத்திரைகளை பயன்படுத்தி சான்று வழங்கி வருகிறார்.
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் சத்யராஜ் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் 4 போலீசார் விஷ்ணுலாலை பிடிப்பதற்காக காந்திபுரம் வந்தனர்.
- விஷ்ணுலால் மீது கேரள மாநிலத்தில் 15 வழக்குகள் இருப்பதாக தெரிகிறது.
பீளமேடு,
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அம்பாளப்புழாவை சேர்ந்தவர் டோல்சன் (வயது43).
இவர் அம்பலப்புழா போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அம்பலபுழா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுலால் ( 29) என்பவர் புகுந்து தாக்குதல் நடத்தி தகராறு செய்தார்.
மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களை நாசம் செய்து சூறையாடினார். இது குறித்து அம்பாலப்புழா போலீசார் வழக்குபதிவு செய்து விஷ்ணுலாலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் 4 போலீசார் விஷ்ணுலாலை பிடிப்பதற்காக காந்திபுரம் வந்தனர்.
போலீசார் வருவதை அறிந்த விஷ்ணுலால் அங்கிருந்து தப்பினார். இதையடுத்து போலீசார் அவரை அவரது செல்போன் டவர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதை அறிந்த கேரள போலீசார் அங்கு சென்றனர்.
கதவைத் தட்டி அவரை அழைத்த போது அவர் கதவை திறக்க மறுத்து விட்டார். போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணுலால் அறையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் இன்னொரு போலீஸ்காரரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் டோல்சன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பீளமேடு போலீசார் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர். விஷ்ணுலால் மீது கேரள மாநிலத்தில் 15 வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. பிரபல ரவுடியான இவர் கோவையில் தன்னை பிடிக்க வந்த போலீசாரை தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நடப்பாண்டுக்கான ஆடிகுண்டம் திருவிழா, கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
- மாவிளக்கு எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆடிகுண்டம் திருவிழா, கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்வு, நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், வெல்ஸ்புரம், கூடுதுறை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்திருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வனபத்ரகாளி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அப்போது பூ பல்லக்கில் அருள்பாலித்த அம்மனுக்கு தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகள் செய்தார். பூப்பல்லக்கு பவனி ஏற்பாடுகளை கெண்டையூர் செல்வராஜ் செய்திருந்தார்.
வனபத்ரகாளி அம்மன் கோவில் முன்பு தொடங்கிய தேர்பவனி, பக்தர்கள் புடைசூழ வளாகத்தை சுற்றிவந்து மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. அப்போது தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், வெல்ஸ்புரம், கூடுதுறை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச் சென்றனர்.
தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், கோவில் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பால்பிரவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
- மாணவி தாயிடம் கூறியும், அவர் பால்பிரவீனை கண்டிக்காமல் சிறுமியை கண்டித்தார்.
சூலூர்,
கோவை சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது தாயுடன் அந்த பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு, அவரது தாயின் கள்ளக்காதலனான சென்னையை சேர்ந்த பால்பிரவீன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இது தொடர்பாக மாணவி தாயிடம் கூறியும், அவர் பால்பிரவீனை கண்டிக்காமல் சிறுமியை கண்டித்தார். தொடர்ந்து பால்பிரவீனின் தொல்லை அதிகரிக்கவே மாணவி சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பால்பிரவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயையும் கைது செய்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவி தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து தான் படித்து வந்த பள்ளியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்கிருந்த ஆசிரியர்கள் அதனை சரியாக கையாளாமல் அவரது பாட்டியை அழைத்து தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் மாணவி படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- அரசு பஸ்சின் மீது செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்,
சூலூர் அருகே நீலம்பூரில் இருந்து வாளையார் நோக்கி எல் அண்ட் டி புறவழிச்சாலை செல்கிறது.
இந்த சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம சாலைகளும் உள்ளன. அந்த கிராமங்களில் உள்ளவர்களும் இந்த சாலைக்கு வந்து பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
நேற்று இரவு காந்திபுரத்தில் இருந்து குளத்தூர் நோக்கி அரசு பஸ் வந்தது. எதிரே புறவழிச்சாலையில் அரசம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது40) என்ற வாலிபர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.
அரசு பஸ் எல் அண்டி புறவழிச்சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த செந்தில்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த செந்தில்குமாரை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அரசு பஸ்சின் மீது செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது பார்ப்பவர்கள் நெஞ்சை பதை பதைக்கும் வகையில் உள்ளது.
- மட்டை ராஜேந்திரன் என்பவரது வீட்டில் மண்ணுளி பாம்பு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
- பிடிபட்ட 3 பேரிடம் பாம்பை யாருக்கு விற்க முயற்சி நடந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ். வீதியில் உள்ள ராஜன் என்ற மட்டை ராஜேந்திரன் என்பவரது வீட்டில் மண்ணுளி பாம்பு உள்ளதாகவும், அதனை 4 பேர் விற்க முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
வனத்துறையினர் வருவதை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 3 பேரையும் காரமடை ரோட்டில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சூலூர் பட்டணத்தை சேர்ந்த நாகராஜா (வயது 36), சரங்கர பாண்டியன் (41), திருப்பூரை சேர்ந்த அப்பாஸ் (43) என்பது தெரிய வந்தது.
தப்பி ஓடிய சேலத்தை சேர்ந்த ராஜ் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து பிடிபட்ட 3 பேரிடம் மண்ணுளி பாம்பு எங்கு உள்ளது. அதனை யாருக்கு விற்க முயற்சி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நினைவரங்கம் அமைக்க தமிழக அரசு ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை,
கோவை பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.பழனிச்சாமி, முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய முன்னோடிகளுக்கு உருவச்சிலை மற்றும் நினைவரங்கம் அமைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவர் சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கு பாடுபட்ட முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களுக்கு அரசு சார்பில் மணி மண்டபம் மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம், ரூ.4.30 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இது 2 அடுக்கு மாடிகள் உடைய கட்டிடமாக அமையும். அங்கு உள்ள கீழ்த்தளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடத்து வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மேல்த ளத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனம் குறித்து இன்றைய தலைமுறையினர் அறியும்வகையில் திட்டப்பணிகள் அடங்கிய மாதிரி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்பிறகு உருவச்சிலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறி உள்ளார்.
- ஜானல் ஜெபக்குமார் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்டேசா காலனியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் ஜானல் ஜெபக்குமார் (வயது 21). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது நண்பரின் வருகைக்காக சவுரிபாளையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 8 பேர் தகாத வார்த்தைகளால் பேசி ஜானல் ஜெபக்குமார் மற்றும் அவரது நண்பரை கல்லால் தாக்கினர்.
இதில் 2 பேரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் 2 பேரும் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 8 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜானல் ஜெபக்குமார் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்து கல்லூரி மாணவரை கல்லால் தாக்கிய 8 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.
- அவசர காலங்களில் எப்படி செயல்படுவது என்பது தொடர்பாக விளக்க கையேடுகளும் வழங்கப்பட்டன.
- 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சூலூர்,
மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இந்த நிலையில் சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாதம் 8-ந்தேதி வருவாய், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊராட்சி வளர்ச்சி துறை, மின் துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக சூலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தீயணைப்புத்துறை ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த ஒத்திகை சோதனை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஆற்றங்கரைேயோரம் வசிப்போர் எப்படி தற்காத்து கொள்வது மற்றும் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் ஆகியவை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க பயிற்சிகள் தரப்பட்டன. அவசர காலங்களில் எப்படி செயல்படுவது என்பது தொடர்பாக விளக்க கையேடுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சூலூர் தாசில்தார் நித்திலவள்ளி, தீயணைப்பு துறை அலுவலர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






