என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
    • ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதன் காரணமாக மாணவி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று காலை மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் மனவேதனை அடைந்து விஷத்தை குடித்தார். பின்னர் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். வகுப்பறையில் இருந்தபோது மாணவி வாந்தி எடுத்தார். இதனை பார்த்த ஆசிரியர் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது மாணவி விஷம் குடித்ததாக கூறினார்.

    இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தங்களது மகளை மீட்டு செக்கனூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண்டக்டர், டிரைவர் கூறினாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்வதே இல்லை.
    • பஸ்சில் படியில் தொங்கி கொண்டு வருபவர்களை பிடித்து அறிவுரைகளை வழங்க வேண்டும்

    கோவை,

    கோவை மாவட்டத்தில் காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், நகர பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை, சோமனூர், வடவள்ளி, அன்னூர் உள்ளிட்ட இடங்களில் பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதுதவிர கருமத்தம்பட்டி சந்திப்பு, தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை, ரெயில் நிலைய பகுதி, டவுன்ஹால் உள்பட பல இடங்களில் பஸ் நிறுத்தங்களும் உள்ளன.

    கோவை மாநகர் மற்றும் மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெளிமாநிலத்தவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கி வேலைக்கும், படிக்கவும் சென்று வருகின்றனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் பஸ்சில் பயணம் செய்தே வேலைக்கும், கல்லூரிகளுக்கும் செல்கிறார்கள். இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் எப்போதும் கூட்டம் அதிகம் காணப்படும்.

    மாநகர், புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் எல்லா பஸ்களிலுமே மக்கள் கூட்டத்தை காண முடியும். அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக் கடங்காத கூட்டம் இருக்கும். இருக்கைகள் முழுவதும் நிரம்பி, படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் நிலையும் இருந்து வருகிறது.

    சில இடங்களில் பஸ்சுக்குள் இடம் இருந்தாலும், கல்லூரி பள்ளி மாணவர்கள் உள்ளே செல்லாமல் படியில் தொங்கி செல்வதையே விரும்பி, படியில் தொங்கிய படியே பயணிக்கின்றனர்.

    பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வாலிபர்களில் ஒருசிலர் ரோட்டில் கால்களை உரசியபடியும், சாலைகளில் செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரை உரசியபடியும் செல்கின்றனர். இது அவர்களுக்கு ஜாலியாக தெரிந்தாலும் இதில் உள்ள பின் விளைவுகள் தெரியாமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    அவர்கள் இப்படி செய்வது பஸ்சில் பயணிப்போர் மட்டுமின்றி சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் அச்சத்தை கொடுத்து வருகிறது.சூலூர், கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் திருப்பூருக்கும், திருப்பூரில் இருந்து சூலூர் பகுதிக்கும் வேலை விஷயமாகவும், படிப்பு விஷயமாகவும், மாணவர்களும், மக்களும் தினமும் வந்து செல்கிறார்கள்.

    அவர்கள் அனைவரும் பஸ்களிலேயே பயணிக்கின்றனர். தனியார் பஸ், அரசு பஸ் என எல்லா பஸ்களிலும் இதனால் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் ஒரு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ஒரு காலை மட்டும் கடைசி படிக்கட்டில் வைத்தும், மற்றொரு காலை தொங்கவிட்ட படியும் பயணம் செய்கின்றனர். இது பஸ்சில் பயணிப்பவர்களுக்கும், சாலையில் செல்லக்கூடிய மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சமாக உள்ளது.

    கோவை தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை பகுதி மிகவும் பரபரப்பு நிறைந்த பகுதியாகும். இங்கிருந்து மாதம்பட்டி, நரசீபுரம், கெம்பனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் செல்கிறது. இதனால் இந்த பகுதி இந்த இடங்களுக்கு எல்லாம் முக்கிய சந்திப்பாக உள்ளது.

    இதுதவிர அரசு கலைக்கல்லூரி, பள்ளிகளும் இயங்கி வருவதால் எப்போதும் இங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படும். பஸ் வந்து நின்றதும் எப்படியாவது ஏறி சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் பக்கத்தில் யார் நிற்கிறார் என்பதை கூட இடம் பிடிக்க அனைவரும் முண்டியத்து கொண்டு ஓடுவார்கள். பஸ்சில் கூட்டமாக இருந்தாலும் பஸ் படிக்கட்டுகளில் பயணித்தபடியே பயணிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    நேற்று கெம்பனூர் பகுதியை சேர்ந்த லீலாவதி என்பவர், தொண்டாமுத்தூரில் உள்ள தனது மகனின் கடைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட பஸ் ஏறுவதற்காக சந்தைபேட்டை பகுதிக்கு சென்றார்.

    அப்போது காந்திபுரம் நோக்கி பஸ் ஒன்று வந்தது. பஸ்சை பார்த்ததும் அங்கிருந்த பயணிகள் அனைவரும் பஸ்சில் இடம் பிடிக்க ஓடி வந்தனர். அந்த சமயம் பஸ் ஏறுவதற்கு ஓடியவர்களில் சிலர் மூதாட்டி மீது மோதி விட்டனர். இதில் அவர் கீழே விழுந்தார்.

    எழுந்திருப்பதற்குள், பஸ் மூதாட்டியின் கால்களில் ஏறி விட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும் பஸ்சில் இருந்தவர்கள் பஸ்சை நிறுத்தி அவரை மீட்டு சிகிச்சைக்கு அழைத்தனர்.

    படிக்கட்டில் பயணம் செய்யும் போது, சில நேரங்களில் மாணவர்கள் அதில் இருந்து கீழே விழும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் அடிக்கடி சோதனைகள் மேற்கொண்டு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் மாணவர்கள் கேட்பதே இல்லை.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பதால் நிறைய ஆபத்துக்கள் உள்ளது. அது தெரியாமல் மாணவர்கள் ஜாலியாக தொங்கி கொண்டு செல்கிறார்கள். கண்டக்டர், டிரைவர் கூறினாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்வதே இல்லை. இதுபோன்ற பயணங்களை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அடிக்கடி ரோந்து மேற்கொள்ள வேண்டும். அப்போது பஸ்சில் படியில் தொங்கி கொண்டு வருபவர்களை பிடித்து அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    • அதிகாரிகள் ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர்.
    • 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் பெரிய கடைவீதி செட்டி வீதியில் உள்ள நகைக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் ஓட்டலில் பணி செய்த 3 சிறுவர்கள், நகைக்கடையில் பணியாற்றிய 4 சிறுவர்களை மீட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் லட்சுமி நாராயணன், ஓட்டல் மேலாளர் முகமத் ஹரீஸ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எங்கள் குடும்பம் 3 தலைமுறையாக தி.மு.கவில் உள்ளது.
    • ஆட்சிக்கு கெட்டப் பெயர் வரும் வகையிலும், எங்கள் மீதும் தேவையில்லாத புகார்களை பரப்பி வருகின்றனர்.

    கணபதி,

    கோவை மணியகாரன்பாளையம் கக்கன் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். தி.மு.க. நிர்வாகியான இவர் மணியகாரன்பாளையம் அம்மா உணவகம் அருகே சாலையோரத்தில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார்.

    அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கடைக்கு கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் வந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டதாகவும், அருகே இருக்கும் மாநகராட்சி கழிவறையை பராமரித்து நடத்தி மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட்டு மீதியை வைத்து கொள்ளுங்கள் என கூறியதாகவும் நேற்று முன்தினம் கோவை கலெக்டரிடம் பரபரப்பு புகார் மனு அளித்து இருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் விளக்கம் அளித்துஅறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்கள் குடும்பம் 3 தலைமுறையாக தி.மு.கவில் உள்ளது. எனது தந்தை மிசாவில் சிறைக்கு சென்றார். எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக எனது மனைவி கல்பனாவை மேயராக மக்கள் பணியாற்றிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வாய்ப்பு அளித்தார்கள்.

    அதை சரியான முறையில் செய்து வருகிறோம். தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் சிலரது தூண்டுதலின் பேரில் ஆட்சிக்கு கெட்டப் பெயர் வரும் வகையிலும், எங்கள் மீதும் தேவையில்லாத புகார்களை பரப்பி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 26-ந் தேதி என்மீது ரங்கநாதன் என்பவர் கலெக்டரிடம் மனு அளித்து உள்ளார்.

    அந்த மனுவில் என்மீது கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. ஏற்கனவே பொதுமக்கள் பொதுக் கழிப்பிடத்துக்கு இடையூறாக கடையில் சமூகவிரோத செயல்கள் நடப்பதாக மாநகராட்சியில் புகார் அளித்ததன் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . இது தொடர்பாக விசாரணை நடத்த சரவணம்பட்டி போலீஸ்நிலையத்தில் புகார் அளித்து உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புது வெள்ளத்தில் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன
    • புது வெள்ளத்தில் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன

     வடவள்ளி,

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள குளங்கள் நிரம்பின.

    நொய்யல் ஆற்றில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை. எனவே ஆறு வறண்டு காணப்பட்டது. இங்கு தற்போது வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    நொய்யல் ஆற்றின் சித்திரைசாவடி தடுப்ப ணையில் தண்ணீர் பெரு க்கெடுத்து ராஜவாய்க்கால் வழியாக பாசனத்திற்கு செல்கிறது. இதனால் தொண்டாமுத்தூரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    எனவே தொண்டா முத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆற்றுக்கு வந்து நீரில் குளித்து மகிழ்கின்றனர்.

    ஒரு சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். இதில் தற்போது பெரிய அளவில் மீன்கள் கிடைத்து வருகின்றன. எனவே பலரும் ஆர்வமிகுதியில் கூட்டம் கூட்டமாக வந்திருந்து போட்டி போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.

    தொண்டாமுத்தூரின் கிளை ஆறுகளில் இருந்தும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் செல்வதால், அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

    • சண்முகபிரியா கணவர் வேலை விஷயமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்
    • பணத்தை கொள்ளையடித்த மர்மநபரை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் காவேரி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சண்முக பிரியா (வயது 32).

    சம்பவத்தன்று இவரது கணவர் வேலை விஷயமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த சண்முக பிரியா வீட்டை பூட்டி விட்டு சிங்காநல்லூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.49 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் வீட்டிற்கு சென்ற சண்முகபிரியா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து பணத்தை கொள்ளை யடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முடியும்.
    • ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை கண்காணிக்க இயலும்.

    கோவை,

    கோவை மாநகரில் அவினாசி ரோடு, சத்தி ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய 3 சாலைகளில் தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதனை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்யவும் விபத்துக்களை தடுப்பதற்காகவும் கோவை மாநகர போலீசார் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி ரோடு, சத்தி ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய 3 பிரதான சாலைகளில் அதிநவீன 3டி ஸ்பீட் ரேடார் தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முடியும். இதற்கான உரிய ஆவணங்கள் வாகன உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    தானியங்கி வேக கண்காணிப்பு கருவியுடன் காமிராக்கள் இணைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை கண்காணிக்க இயலும். இரவு நேரங்களில் கூட வண்டியின் எண்ணை பதிவு செய்ய முடியும்.

    எனவே 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்கள் சென்றால், சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு உடனடியாக அபராத ரசீது, இ- செலான் முறையில் அனுப்பி வைக்கப்படும். எனவே கோவை மாநகருக்குள் வாகனங்களை இயக்குபவர்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது தனி நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    • பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்
    • இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு என்ற திருஞானசம்பந்தம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி கனகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் சிங், ஒன்றிய பொருளாளர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற சாந்தலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தாமரை தென்னரசு, வசந்தி ராசு, கலைக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சபரி கிரிவாசன், கன்னிகா பரமேஸ்வரி, பாலு, வலசு ரவி மற்றும் கனகராஜ், விஸ்வநாதன், ஞானவேல், சதிஷ்குமார், கனகராஜ், வலசு ரவி, சுப்பிரமணியம், வடிவேல், சக்திவேல், குணா, கோவிந்தராஜ், மாரியப்பன், சின்ன நெகமம் மயில்சாமி, சண்முகம், கருப்புச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
    • இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை அன்னூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கரூரை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் இளம்பெண்ணை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த இளம்பெண் வாலிபரை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அந்த வாலிபர் வர மறுத்து விட்டார். மேலும் அந்த பெண்ணுடன் அவர் தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடு வதாக மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக வாலிபர் மிரட்டுவதாகவும், தன்னிடம் இருந்து வாலிபர் வாங்கி 6 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டதாகவும், அதனை மீட்டுத் தர வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
    • போலீசார் சஞ்சயை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாண விக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குனியமுத்தூரை சேர்ந்த சஞ்சய் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், பல்வேறு இடங்களுக்கு சென்றும் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாணவி சஞ்சயுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சஞ்சய் அவரிடம் பேசுமாறு கூறினார். ஆனால் மாணவி பேச மறுத்து விட்டார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த வாலிபர் நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசி மாணவியின் கன்னத்தில் தாக்கினார். பின்னர் அவர் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியை நடுரோட்டில் வைத்து தாக்கிய சஞ்சயை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு செல்லுமாறு கடைக்காரர் வாலிபர்களிடம் கூறினார்.
    • பணத்தை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள பூலுவபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 54). இவர் சிறுவாணி மெயின் ரோட்டில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    தினசரி இவர் அதிகாலை 2 மணிக்கு டீ கடையை திறப்பது வழக்கம். இதேபோல சம்பவத்தன்று கடையை திறந்து வேலைகளை செய்து கொண்டு இருந்தார். 3 மணியளவில் 3 வாலிபர்கள் டீ குடிப்பதற்காக வந்தனர். அவர்களுக்கு மாரியப்பன் டீ போட்டு கொடுத்தார். பின்னர் போண்டா போட்டு கொண்டு இருந்தார்.

    டீ யை குடித்த 3 பேர் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டனர். அதற்கு மாரியப்பன் ரூ.30 என்றார். அப்போது அவர் போண்டா போட்டு கொண்டு இருந்ததால் பணத்தை நீங்களே கல்லா பெட்டியில் வைத்து விட்டு செல்லுமாறு கூறினார்.

    அவர்கள் சென்ற பின்னர் மாரியப்பன் பார்த்த போது அந்த 3 பேரும் கல்லா பெட்டியில் பொருட்கள் வாங்குவதற்காக வைத்து இருந்த ரூ.37,500 பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டீ குடிப்பது போல நடித்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.37,500 பணத்தை திருடிச் சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    • வியாபாரி அளித்த புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
    • 100 வார்டுகளிலும் ரோட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மணியகாரம்பாளையம் கக்கன் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். தி.மு.க நிர்வாகியான இவர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

    அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை 19-வது வட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருக்கிறேன். மணியகாரம்பாளையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தள்ளு வண்டியில் இரவு நேரத்தில் 2 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேயரின் கணவர் ஆனந்தகுமார் எனது கடைக்கு வந்தார். அப்போது அவர் என்னிடம், நான் கடை நடத்தி வரும் இடத்திற்கு வாடகையாக ஒரு தொகையினை கேட்டார்.

    எனது குடும்பமே இந்த கடையில் இருந்து வரும் வருமானத்தில் தான் ஓடுகிறது. அப்படி இருக்கையில் நான் எப்படி பணம் கொடுப்பது என தெரிவித்தேன்.

    அதற்கு அவர், பக்கத்தில் இருக்கும் கழிவறையை பராமரித்து, அதில் கட்டணம் வசூலித்து கொள்ளுங்கள். மாதம் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து விட்டு மீதியை நீங்கள் வருமானமாக வைத்து கொள்ளுங்கள் என கூறினார். இலவசமாக கட்டப்பட்டு உள்ள கழிப்பிடத்துக்கு பணம் வசூலித்தால் நான் மாட்டிக்கொள்வேன் என்பதால் நான் மறுத்து விட்டேன். இதனால் அவர் மாநகராட்சி ஊழியர்களை வைத்து எனது தள்ளுவண்டி கடையை எடுத்து கொண்டு போய்விட்டார். மேலும் எனக்கு மிரட்டலும் விடுக்கின்றனர். எனக்கு பாதுகாப்பு இல்லை. எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    வியாபாரி அளித்த புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

    இதற்கிடையே இன்று காலை தி.மு.க நிர்வாகியான ரங்கநாதனுக்கு ஒரு போன் வந்தது. அதில் நாங்கள் மாநகராட்சியில் இருந்து பேசுகிறோம். உங்கள் தள்ளுவண்டியை நீங்கள் வைத்திருந்த இடத்திலேயே வைத்து விட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு தள்ளுவண்டி நின்றிருந்தது. இதை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

    புகார் தொடர்பாக மேயர் கல்பனா கூறியதாவது:-

    100 வார்டுகளிலும் ரோட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி வருகிறார்கள். தொட்டதெற்கெல்லாம் எனது கணவர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

    கக்கன் வீதியில் மாநகராட்சி கழிப்பறை சிதிலமடைந்து இருந்தது. அங்கு ஒருவர் கட்டில் போட்டு படுத்து கொண்டு கட்டணம் வசூலித்தார். கழிப்பறைக்கு அருகே ஸ்டாண்ட் வைத்து கொண்டு எப்போதும் 4 பேர் நிற்கின்றனர். பெண்கள் எப்படி அங்கு வருவார்கள்.

    தள்ளுவண்டியை இரவில் நடத்தி விட்டு பகலில் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் அவர் நிரந்தரமாக அங்கு கூடாரம் அமைத்து ஆக்கிரமித்துள்ளார்.

    இது தொடர்பாக பலமுறை தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. தற்போது மாநகராட்சி அலுவலர்கள் சென்று அகற்றி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு எனது கணவரை காரணம் சொல்கிறார்கள். தவறான தகவல்களை பரப்புகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×