என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தீபக் பகுதி நேர வேலை இருப்பதாக கூறவே, அந்த லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார்.
    • தீபக் கோவை மாநகர சைபர் கிரைம்போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சிவாஜி காலனியை சேர்ந்தவர் தீபக்(22). இவர் வாட்டர் வாஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு மெசேஜ் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாக கூறவே, அந்த லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார்.

    அதில் தீபக் அவரது விவரங்களை பதிவிட்டார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் தாங்கள் கொடுக்கும் பணிகளை செய்து கொடுத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும், கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய தீபக் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு முதலில் சிறிய தொகையை அனுப்பி பணி செய்தார்.

    அப்போது அவருக்கு குறிப்பிட்ட தொகை லாபம் கிடைத்தது. பின்னர் தீபக்கை தொடர்பு கொண்ட நபர் அதிகளவில் முதலீடு செய்தால் இதனை விட அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து தீபக் சிறிது, சிறிதாக ரூ. 14,12,500 முதலீடு செய்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு எந்த விதமான கமிஷனும், லாப தொகையும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

    ஆன்லைன் வேலை என கூறி ரூ. 14 லட்சத்து 12 ஆயிரத்து 500 மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தீபக் கோவை மாநகர சைபர் கிரைம்போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுனில் 1 கிலோ தங்க கட்டியையும் எடுத்து சென்றார்
    • தியாகராஜன் பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 56). நகை வியாபாரி.

    இவர் பெங்களூரில் உள்ள நகைக்கடையை சேர்ந்த சுனில்(50) என்பவரிடம் தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தார்.

    அவரிடம் தங்க நகை மற்றும் தங்க கட்டிகளை கொடுத்து வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று கோவை வந்த சுனில் 963 கிராம் எடையிலான தங்க நகைகளை தியாகராஜனிடம் கொடுத்து விட்டு அவரிடம் இருந்து 1003 கிராம் தங்க கட்டிகளை வாங்கினார்.

    பின்னர் 963 கிராம் நகை போக மீதம் கொடுக்க வேண்டிய பணத்தை சிறிது நேரத்தில் கொண்டு வந்து தருவதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தியாகராஜன் சுனில் கொடுத்த தங்க நகைகளை சோதனை செய்தார். அப்போது அவர் கொடுத்து சென்ற 963 கிராம் தங்க நகையும் போலியானது என்பது தெரியவந்தது.

    போலி நகைகளை கொடுத்து விட்டு 1003 கிராம் தங்க கட்டிகளை வாங்கி சென்றதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜன் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தியாகராஜன் பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலி நகைகளை கொடுத்து 1 கிலோ தங்க கட்டி வாங்கி ஏமாற்றி மோசடி செய்த சுனில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    • கோவை கரும்புக்கடை கருப்பராயன் கோவில் பின்புறம் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 770 போதை மாத்திரைகள் பறிமுதல் ெசய்யப்பட்டது.

    கோவை,

    கோவையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்தும் வருகிறார்கள். கோவை கரும்புக்கடை கருப்பராயன் கோவில் பின்புறம் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கரும்புக்கடை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த கும்பலை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை கும்பல் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் (வயது 27), கணபதி விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் டேவிட் மைக்கேல்(20), கணபதி செக்கான் தோட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் எட்வின் சார்லஸ்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 670 போதை மாத்திரைகள், 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    காளப்பட்டி ரோட்டில் உள்ள கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மயிலாடு துறையை சேர்ந்த வினோத்குமார்(19) என்பவரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 போதை மாத்திரை, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல ஆர்.எஸ்.புரத்தில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற சிவானந்தாகாலனியை சேர்ந்த டிரைவர் தனசேகரன்(35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வெரைட்டிஹால் ரோடு போலீசார் சிஎம்சி காலனி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மணியதோட்டத்தை சேர்ந்த மட்டன் கடை ஊழியர் நவுசாத்(24), சலீவன் வீதியை சேர்ந்த அருள் செல்வம்(25), பொன்னையராஜபுரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராம்பிரசாத்(24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரை, 50 கிராம் கஞ்சா மற்றும் ஒரு சிரிஞ்ச், 2 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பூங்காவானது பூட்டியே கிடக்கிறது.
    • அதிவிரைவில் பூங்காவை சுத்தம் செய்து திறப்பு விழா நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பூங்காக்கள் என்பது மக்களின் பொழுது போக்கு அம்சத்தில் முக்கிய அங்கமாகும். கோவையில் சிறுவர் பூங்கா, முதியோர் பூங்கா, உயிரியல் பூங்கா என பல பூங்காக்களும் உள்ளது. இந்த பூங்காக்கள் மக்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுத்து வருகிறது.

    பரபரப்பான இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வார நாட்கள் முழுவதும் தங்கள் வேலைகளில் முழ்கி கிடப்பார்கள். வார இறுதி நாட்களில் யாராவது உறவினர்களை சந்திப்பது, பூங்காக்களில் சென்று பொழுதை கழிப்பது என தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

    அதிலும் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி, உறவினர்களை அழைத்து வந்து, அன்றைய வாரத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் உள்பட எண்ணற்ற தகவல்களை சிரித்து பேசி மகிழ்வார்கள்.

    தற்போது எல்லாம் பெரிய, பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பூங்காக்கள் உள்ளன. மக்கள் பூங்காவை தேடி அலைய வேண்டாம் என்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் போதே, அதன் அருகே இடத்தை வாங்கி அங்கு பூங்காவையும் உருவாக்கி விடுகின்றனர். அந்த பூங்காவில் குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை இடம் பெற செய்து விடுகிறார்கள்.

    இது குடியிருப்பில் வந்து வாழக்கூடிய பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து நேரத்தை போக்குவதற்கு வரபிரசாதமாக உள்ளது.

    கோவையில் ஏராளமான பூங்காக்கள் இருந்தாலும், ஒரு சில பூங்காக்கள் எந்தவித பராமரிப்பும் இன்றி புதர் மண்டி மக்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் வருத்தத்தை தான் தெரிகிறது. தாங்கள் பயன்படுத்தி வந்த பூங்கா இப்போது இப்படி ஆகி விட்டதே என நினைத்து சிலர் வருந்தி சொல்லி கொண்டு செல்வதையும் காணதான் முடிகிறது.

    கோவை சாய்பாபா காலனி கே.கே புதூர் பகுதியில் இருந்து கிரி நகர் செல்லும் வழியில் கணபதி லே-அவுட் உள்ளது. இந்த பகுதியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    அந்த பகுதி மக்களின் தேவைக்காகவும், குழந்தைகள் விளையாடுவதற்காக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த பூங்காவில் சிறுவர்களுக்கு பிடித்தமான ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, செயற்கை நிரூற்றுகள், ரெயில் வண்டிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.

    இதில் அந்த லேஅவுட்டில் வசிப்பவர்கள் மட்டுமின்றி அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் குழந்தைகளுடன் வந்து, பூங்காவை பார்வையிட்டு, அதில் சிறது நேரம் அமர்ந்து பேசி விட்டு செல்வார்கள். குழந்தைகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

    ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பூங்காவானது பூட்டியே கிடக்கிறது. அந்த பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி ஒரு காடு போல காட்சியளிக்கிறது. உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. அந்தளவுக்கு இந்த பூங்காவானது மாறி விட்டது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூங்கா எப்படி இருந்தது தெரியுமா. எங்களின் நேர போக்கே இந்த பூங்காவாக தான் இருக்கும்.

    எங்களுக்கு ஏதாவது மன கவலையோ அல்லது ஏதாவது சிறு பிரச்சினைகள் வந்தாலோ உடனே நாங்கள் தேடி செல்லும் இடம் இந்த பூங்காவாக தான் இருக்கும். ஏனென்றால் அங்கு சென்றவுடன் குழந்தைகள் துள்ளி குதித்து விளையா டுவதும், அங்கு நிலவக்கூடிய அமைதியும், நம் மனதில் இருக்கும் அனைத்தையும் அப்படியே மறைத்து நம்மை வேறு நிலைக்கு மாற்றி விடும்.

    இதனாலேயே காலை, மாலை நேரங்களில் நாங்கள் எங்கள் குழந்தைகளை பூங்காவுக்கு அழைத்து வந்துவிடுவோம். அங்கு சிறிது நேரம் உட்கார்ந்து சற்று இளைப்பாறுவதுடன், குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி எங்கள் பொழுதை கழித்து வந்தோம். இது எங்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    கை குழந்தைகளை தூக்கிக் கொண்டு வரும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நிலவை காட்டியும், அக்கம்பக்கத்தில் விளையாடி கொண்டி ருக்கும் குழந்தைகளை காண்பித்து ஏமாற்றி சாதம் ஊட்டுவோம். குழந்தைகளும் தன்னையே மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு சாதம் அனைத்தை யும் சாப்பிட்டுவிடும். ஆனால் தற்போது குழந்தை யை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் புழுதி பறக்கும் சூழ்நிலைதான் காணப்படுகிறது.

    இந்த பூங்கா பொழுதை கழிக்க மட்டும் உதவவில்லை. நல்ல தோழிகளையும், குடும்ப நண்பர்களையும் உருவாக்கி தந்தது. தோழிகள் அனை வரும் ஒருவ ருக்கொருவர் மனம்விட்டு பேசியும் வந்தோம். அந்தவுக்கு விளங்கிய இந்த பூங்கா தற்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக தினமும் நேர போக்கிற்கே பொழுதை கழிக்க முடியாமல் சிரமப்படு கிறோம்.

    பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மாலை நேரங்களில் இங்கு வந்து நிம்மதியாக அமர்ந்து நேரத்தை போக்குவது வழக்கம். ஆனால் தற்போது அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டுக்கு ள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே வயதானவர்களின் வாழ்க்கையிலும் இந்த பூங்கா ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதும் கூட ,இப்பகுதியில் நடைபயிற்சி செய்யும் வயதானவர்கள் பூங்காவை ஒரு நிமிடம் நின்று வெறித்து வெறித்து பார்த்துவிட்டு சொல்லும் சூழ்நிலையை காண முடிகிறது.

    மழையிலும், வெயிலி லும் காய்ந்த நிலையில் உள்ளதால் பூங்காவிற்குள் அமைந்துள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற உபகரணங்கள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

    மேலும் பூங்காவில் புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் வருவதுடன், நள்ளிரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் இங்கு நடந்து வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் பூங்காவை சுத்தம் செய்து வருகின்றனர். ஆனால் இங்கு பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா எப்போது சுத்தம் செய்யப் போகிறார்கள்? எப்போது திறக்கப் போகிறார்கள்? என்று தான் நாங்கள் கேட்டு கொண்டிருக்கிறோம். அதிவிரைவில் பூங்காவை சுத்தம் செய்து திறப்பு விழா நடத்த வேண்டும்.

    மீண்டும் எங்களுக்கு நேரப்போக்கு அம்சத்தை உருவாக்கி தர வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை யாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
    • மாணவியை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதன் காரணமாக மாணவி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று காலை மாணவி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அவர் மனவேதனை அடைந்து விஷத்தை குடித்தார். பின்னர் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். வகுப்பறையில் இருந்த போது மாணவி வாந்தி எடுத்தார். இதனை பார்த்த ஆசிரியர் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது மாணவி விஷம் குடித்ததாக கூறினார்.

    இது குறித்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தங்களது மகளை மீட்டு செக்கனூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மாணவியை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை வாளையாற்றில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்த இருதரப்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
    • குற்றவாளிகள் மீது ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் இருந்து வாளையாறு, வேலந்தாவளம், பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழகம், கேரள அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவை வாளையாற்றில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்த இருதரப்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரி குணசேகரன், ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி கிருஷ்ணன், வாளையாறு இன்ஸ்பெக்டர் அஜீஸ், வனத்துறை அதிகாரி ஆதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேரளாவில் இருந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளாவில் ரேஷன் அரிசி வாங்கும் வியாபாரிகள் பற்றிய விவரங்களை சேகரிப்பது, அரிசி கடத்தி தப்பிய குற்றவாளிகளை தேடுவது, ஜாமீனில் வந்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்வது, பஸ் மற்றும் ரெயில் மூலம் யார் யார் எல்லாம் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து தமிழகம், கேரளா எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது, கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • உஷாராணி தனது கணவரை பிரிந்து மாதேசை தேடி மேட்டுப்பாளையம் வந்தார்.
    • மாதேஸ் மேட்டுப்பாளையம் போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறையை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 29). கூலித் தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே சந்திரலேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் பிரிந்து விட்டனர்.

    இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு மாதேசுக்கு பேஸ்புக் மூலமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை உள்ள உஷாராணி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் இளம் பெண்ணின் கணவருக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து உஷாராணி தனது கணவரை பிரிந்து மாதேசை தேடி மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த உஷாராணி தனது கணவரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உஷா ராணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மாதேஸ் மேட்டுப்பாளையம் போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான உஷாராணியை தேடி வருகின்றனர்.

    • சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்தார்.
    • சிறுமியின் தாய் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் கண்ணன் (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கண்ணன் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த சில நாட்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை அவரது தாய் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இதனை கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார். அவர் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்தார். அப்போது சிறுமி தன்னை டிரைவர் கண்ணன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தாக கூறினார்.

    இது குறித்து சிறுமியின் தாய் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
    • கடனுதவி சலுகைகளை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.5 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

    கோவை மாவட்ட தென்னை நார் தொழிற்சாலைகளில் கொப்பரை, தென்னை நார், காகித அட்டை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பிறகு அவற்றை விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள உலர் களங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே தென்னை நார்களை வெயிலில் உலர வைக்க முடியவில்லை. இதனால் அங்கு நார் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தென்னை நார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு கொப்பரை, தென்னை நார், காகித அட்டை ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு, வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் எங்களின் தொழில் வெகுவாக முடங்கி உள்ளது. இதனால் ரூ.200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு கடனுதவி சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புகாரின்பேரில் போலீசார் சர்க்கஸ் அரங்குக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    • 2 கொண்டைக்கிளிகளும் அருவங்காடு மையத்தில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    கோவை,

    கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த மாதம் 23-ந்தேதி முதல் சர்க்கஸ் நடந்து வருகிறது. இங்கு வளர்ப்பு பறவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் கோவை சர்க்கசில் உள்ள கிளிகளுக்கு சரிவர உணவுகள் வழங்கப்படுவது இல்லை என்று கால்நடை ஆர்வலர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் போலீசார் சர்க்கஸ் அரங்குக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு உலகில் மிகவும் அரிய பறவை என்று கருதப்படும் ஆப்பிரிக்கன் எல்லோ காக்கடூ வகையை சேர்ந்த 2 கொண்டை கிளிகள் இருப்பது தெரிய வந்தது.

    ஆனால் இதற்கு சர்க்கஸ் நிர்வாகிகளிடம் உரிய பதிவுச்சான்று ஆவணங்கள் இல்லை. எனவே 2 கொண்டை கிளிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பறவைகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு கால்நடை மருத்துவ சேவை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு முதன்மை டாக்டர் சுமன் தலைமையிலான மருத்துவ குழுவினர் உரிய சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மேற்கண்ட 2 கொண்டைக்கிளிகளும் அருவங்காடு மையத்தில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ஆப்பிரிக்கன் எல்லோ காக்கடூ இனத்தை சேர்ந்த கொண்டை கிளிகள் புத்திசாலித்தனம் மிகுந்தவை. எனவே அவற்றை சர்க்கஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

    கொண்ைடக்கிளிகள் மார்க்கெட் சந்தையில் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இதனை வளர்க்க உள்ளூர் வனத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • கோவையில் 11 தாலுகாக்களில் 839 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
    • மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக்குழு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநருமான ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்கலெக்டர் பிரியங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பொது மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக கோவை மாவட்டத்தில் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கோவையில் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு செய்வதற்கு மட்டும், 11 தாலுகாக்களில் 839 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    அங்கு இதுவரை 2 லட்சத்து 78 ஆயிரத்து 856 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இரண்டாவது கட்ட முகாம் நடக்கும் நாள் மற்றும் நேரம் ஆகியவை குறித்து பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ, அங்கு நடக்கும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பபதிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

    இதேபோல கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஜெகதீஷ்வரியின் உடலை பார்வையிட்டனர்.
    • கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த கைரேகைகள் பதிவு செய்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர்.

    இவருக்கு ஜெகதீஷ்வரி (40) என்ற மனைவியும், கார்த்திகா(16) என்ற மகளும் உள்ளனர். கார்த்திகா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி சக்கரவர்த்தி வேலை விஷயமாக அன்னூருக்கு சென்று விட்டார். அங்கு வேலைகள் இருந்ததால் சில நாட்கள் அங்கேயே தங்கி விட்டார்.

    இதனால் வீட்டில் ஜெகதீஷ்வரியும், அவரது மகளும் மட்டுமே தனியாக இருந்து வந்தனர். அவ்வப்போது சக்கரவர்த்தி போன் செய்து, மனைவி மற்றும் மகளிடம் பேசி வந்தார்.

    ஜெகதீஷ்வரி தினமும் தனது மகளை பள்ளியில் கொண்டு விடுவதும், பள்ளி முடிந்த பின்னர் திரும்ப சென்று அழைத்து வருவதும் வழக்கம்.

    அதன்படி நேற்றும் மகளை காலையில் பள்ளியில் கொண்டு விட்டு வந்தார். பின்னர் வீட்டில் அவர் மட்டும் இருந்தார்.

    காலை 11.30 மணிக்கு ஜெகதீஷ்வரிக்கு, அவரது கணவர் சக்கரவர்த்தி போன் செய்து பேசினார். பின்னர் மதியமும் சக்கரவர்த்தி போன் செய்தார். ஆனால் ஜெகதீஷ்வரி எடுக்கவில்லை. அவர் வேலையாக இருக்கலாம் என நினைத்து சக்கரவர்த்தி தனது வேலையில் மூழ்கி விட்டார்.

    இந்த நிலையில் தினமும் தன்னை அழைத்து செல்ல பள்ளிக்கு வரும் தாய், நேற்று நீண்ட நேரமாகியும் வராததால் ஜெகதீஷ்வரியின் மகள் கார்த்திகா நடந்தே வீட்டிற்கு வந்து விட்டார்.

    அப்போது வீடு திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சியான கார்த்திகா வீட்டிற்குள் சென்று அம்மாவை தேடினார். எங்கும் அவர் இல்லை. கடைசியாக அவரது அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு அறையில் உள்ள கட்டிலில் ஜெகதீஷ்வரி பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்ததும் கார்த்திகா கதறி அழுதபடி வெளியில் ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் சென்று பார்த்தனர். இதற்கிடையே இந்த தகவல் அறிந்து சக்கவரத்தியும் அன்னூரில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்து மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஜெகதீஷ்வரியின் உடலை பார்வையிட்டனர்.

    அப்போது அவரது கழுத்தில் இறுக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தது. வீட்டில் இருந்த செயின் உள்பட 5 ¾ பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது.

    இதனால் இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து, ஜெகதீஷ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த கைரேகைகள் பதிவு செய்தனர். மேலும் சக்கரவர்த்தியின் வீட்டிற்கு வந்தது யார்? என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது தெரியவில்லை. மர்மநபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசாருக்கு இந்த கொலையானது நகைக்காக தான் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் இருக்கிறது. எனவே போலீசார் அந்த கோணத்திலும் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

    மேலும் இறந்த ஜெகதீஷ்வரியின் செல்போனையும் பறிமுதல் செய்து, அவர் யார், யாருடன் பேசியுள்ளார். கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்பதை பார்த்து, அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த தகவல்களையும் சேகரிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு, நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×