என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம் பதிவு"

    • கோவையில் 11 தாலுகாக்களில் 839 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
    • மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக்குழு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநருமான ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்கலெக்டர் பிரியங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பொது மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக கோவை மாவட்டத்தில் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கோவையில் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு செய்வதற்கு மட்டும், 11 தாலுகாக்களில் 839 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    அங்கு இதுவரை 2 லட்சத்து 78 ஆயிரத்து 856 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இரண்டாவது கட்ட முகாம் நடக்கும் நாள் மற்றும் நேரம் ஆகியவை குறித்து பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ, அங்கு நடக்கும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பபதிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

    இதேபோல கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    ×