search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கே.கே.புதூரில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படும் சிறுவர் பூங்கா
    X

    கோவை கே.கே.புதூரில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படும் சிறுவர் பூங்கா

    • கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பூங்காவானது பூட்டியே கிடக்கிறது.
    • அதிவிரைவில் பூங்காவை சுத்தம் செய்து திறப்பு விழா நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பூங்காக்கள் என்பது மக்களின் பொழுது போக்கு அம்சத்தில் முக்கிய அங்கமாகும். கோவையில் சிறுவர் பூங்கா, முதியோர் பூங்கா, உயிரியல் பூங்கா என பல பூங்காக்களும் உள்ளது. இந்த பூங்காக்கள் மக்களுக்கு மன நிம்மதியையும், மன அமைதியையும் கொடுத்து வருகிறது.

    பரபரப்பான இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வார நாட்கள் முழுவதும் தங்கள் வேலைகளில் முழ்கி கிடப்பார்கள். வார இறுதி நாட்களில் யாராவது உறவினர்களை சந்திப்பது, பூங்காக்களில் சென்று பொழுதை கழிப்பது என தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

    அதிலும் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி, உறவினர்களை அழைத்து வந்து, அன்றைய வாரத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் உள்பட எண்ணற்ற தகவல்களை சிரித்து பேசி மகிழ்வார்கள்.

    தற்போது எல்லாம் பெரிய, பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பூங்காக்கள் உள்ளன. மக்கள் பூங்காவை தேடி அலைய வேண்டாம் என்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் போதே, அதன் அருகே இடத்தை வாங்கி அங்கு பூங்காவையும் உருவாக்கி விடுகின்றனர். அந்த பூங்காவில் குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை இடம் பெற செய்து விடுகிறார்கள்.

    இது குடியிருப்பில் வந்து வாழக்கூடிய பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து நேரத்தை போக்குவதற்கு வரபிரசாதமாக உள்ளது.

    கோவையில் ஏராளமான பூங்காக்கள் இருந்தாலும், ஒரு சில பூங்காக்கள் எந்தவித பராமரிப்பும் இன்றி புதர் மண்டி மக்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் வருத்தத்தை தான் தெரிகிறது. தாங்கள் பயன்படுத்தி வந்த பூங்கா இப்போது இப்படி ஆகி விட்டதே என நினைத்து சிலர் வருந்தி சொல்லி கொண்டு செல்வதையும் காணதான் முடிகிறது.

    கோவை சாய்பாபா காலனி கே.கே புதூர் பகுதியில் இருந்து கிரி நகர் செல்லும் வழியில் கணபதி லே-அவுட் உள்ளது. இந்த பகுதியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    அந்த பகுதி மக்களின் தேவைக்காகவும், குழந்தைகள் விளையாடுவதற்காக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த பூங்காவில் சிறுவர்களுக்கு பிடித்தமான ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, செயற்கை நிரூற்றுகள், ரெயில் வண்டிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.

    இதில் அந்த லேஅவுட்டில் வசிப்பவர்கள் மட்டுமின்றி அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் குழந்தைகளுடன் வந்து, பூங்காவை பார்வையிட்டு, அதில் சிறது நேரம் அமர்ந்து பேசி விட்டு செல்வார்கள். குழந்தைகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

    ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பூங்காவானது பூட்டியே கிடக்கிறது. அந்த பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி ஒரு காடு போல காட்சியளிக்கிறது. உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. அந்தளவுக்கு இந்த பூங்காவானது மாறி விட்டது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூங்கா எப்படி இருந்தது தெரியுமா. எங்களின் நேர போக்கே இந்த பூங்காவாக தான் இருக்கும்.

    எங்களுக்கு ஏதாவது மன கவலையோ அல்லது ஏதாவது சிறு பிரச்சினைகள் வந்தாலோ உடனே நாங்கள் தேடி செல்லும் இடம் இந்த பூங்காவாக தான் இருக்கும். ஏனென்றால் அங்கு சென்றவுடன் குழந்தைகள் துள்ளி குதித்து விளையா டுவதும், அங்கு நிலவக்கூடிய அமைதியும், நம் மனதில் இருக்கும் அனைத்தையும் அப்படியே மறைத்து நம்மை வேறு நிலைக்கு மாற்றி விடும்.

    இதனாலேயே காலை, மாலை நேரங்களில் நாங்கள் எங்கள் குழந்தைகளை பூங்காவுக்கு அழைத்து வந்துவிடுவோம். அங்கு சிறிது நேரம் உட்கார்ந்து சற்று இளைப்பாறுவதுடன், குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி எங்கள் பொழுதை கழித்து வந்தோம். இது எங்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    கை குழந்தைகளை தூக்கிக் கொண்டு வரும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நிலவை காட்டியும், அக்கம்பக்கத்தில் விளையாடி கொண்டி ருக்கும் குழந்தைகளை காண்பித்து ஏமாற்றி சாதம் ஊட்டுவோம். குழந்தைகளும் தன்னையே மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு சாதம் அனைத்தை யும் சாப்பிட்டுவிடும். ஆனால் தற்போது குழந்தை யை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் புழுதி பறக்கும் சூழ்நிலைதான் காணப்படுகிறது.

    இந்த பூங்கா பொழுதை கழிக்க மட்டும் உதவவில்லை. நல்ல தோழிகளையும், குடும்ப நண்பர்களையும் உருவாக்கி தந்தது. தோழிகள் அனை வரும் ஒருவ ருக்கொருவர் மனம்விட்டு பேசியும் வந்தோம். அந்தவுக்கு விளங்கிய இந்த பூங்கா தற்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக தினமும் நேர போக்கிற்கே பொழுதை கழிக்க முடியாமல் சிரமப்படு கிறோம்.

    பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மாலை நேரங்களில் இங்கு வந்து நிம்மதியாக அமர்ந்து நேரத்தை போக்குவது வழக்கம். ஆனால் தற்போது அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டுக்கு ள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே வயதானவர்களின் வாழ்க்கையிலும் இந்த பூங்கா ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதும் கூட ,இப்பகுதியில் நடைபயிற்சி செய்யும் வயதானவர்கள் பூங்காவை ஒரு நிமிடம் நின்று வெறித்து வெறித்து பார்த்துவிட்டு சொல்லும் சூழ்நிலையை காண முடிகிறது.

    மழையிலும், வெயிலி லும் காய்ந்த நிலையில் உள்ளதால் பூங்காவிற்குள் அமைந்துள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற உபகரணங்கள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

    மேலும் பூங்காவில் புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் வருவதுடன், நள்ளிரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் இங்கு நடந்து வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் பூங்காவை சுத்தம் செய்து வருகின்றனர். ஆனால் இங்கு பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா எப்போது சுத்தம் செய்யப் போகிறார்கள்? எப்போது திறக்கப் போகிறார்கள்? என்று தான் நாங்கள் கேட்டு கொண்டிருக்கிறோம். அதிவிரைவில் பூங்காவை சுத்தம் செய்து திறப்பு விழா நடத்த வேண்டும்.

    மீண்டும் எங்களுக்கு நேரப்போக்கு அம்சத்தை உருவாக்கி தர வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை யாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×