search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவுக்கு பஸ், ரெயில்களில் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் கண்காணிப்பு
    X

    கேரளாவுக்கு பஸ், ரெயில்களில் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் கண்காணிப்பு

    • கோவை வாளையாற்றில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்த இருதரப்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
    • குற்றவாளிகள் மீது ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் இருந்து வாளையாறு, வேலந்தாவளம், பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழகம், கேரள அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவை வாளையாற்றில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்த இருதரப்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரி குணசேகரன், ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி கிருஷ்ணன், வாளையாறு இன்ஸ்பெக்டர் அஜீஸ், வனத்துறை அதிகாரி ஆதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேரளாவில் இருந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளாவில் ரேஷன் அரிசி வாங்கும் வியாபாரிகள் பற்றிய விவரங்களை சேகரிப்பது, அரிசி கடத்தி தப்பிய குற்றவாளிகளை தேடுவது, ஜாமீனில் வந்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்வது, பஸ் மற்றும் ரெயில் மூலம் யார் யார் எல்லாம் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து தமிழகம், கேரளா எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது, கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×