என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது
- கோவை கரும்புக்கடை கருப்பராயன் கோவில் பின்புறம் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- 770 போதை மாத்திரைகள் பறிமுதல் ெசய்யப்பட்டது.
கோவை,
கோவையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்தும் வருகிறார்கள். கோவை கரும்புக்கடை கருப்பராயன் கோவில் பின்புறம் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கரும்புக்கடை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த கும்பலை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை கும்பல் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் (வயது 27), கணபதி விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் டேவிட் மைக்கேல்(20), கணபதி செக்கான் தோட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் எட்வின் சார்லஸ்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 670 போதை மாத்திரைகள், 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
காளப்பட்டி ரோட்டில் உள்ள கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மயிலாடு துறையை சேர்ந்த வினோத்குமார்(19) என்பவரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 போதை மாத்திரை, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல ஆர்.எஸ்.புரத்தில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற சிவானந்தாகாலனியை சேர்ந்த டிரைவர் தனசேகரன்(35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
வெரைட்டிஹால் ரோடு போலீசார் சிஎம்சி காலனி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மணியதோட்டத்தை சேர்ந்த மட்டன் கடை ஊழியர் நவுசாத்(24), சலீவன் வீதியை சேர்ந்த அருள் செல்வம்(25), பொன்னையராஜபுரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராம்பிரசாத்(24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரை, 50 கிராம் கஞ்சா மற்றும் ஒரு சிரிஞ்ச், 2 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.






