என் மலர்
நீங்கள் தேடியது "பஸ்களில் ஆபத்தான பயணம்"
- கண்டக்டர், டிரைவர் கூறினாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்வதே இல்லை.
- பஸ்சில் படியில் தொங்கி கொண்டு வருபவர்களை பிடித்து அறிவுரைகளை வழங்க வேண்டும்
கோவை,
கோவை மாவட்டத்தில் காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், நகர பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை, சோமனூர், வடவள்ளி, அன்னூர் உள்ளிட்ட இடங்களில் பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதுதவிர கருமத்தம்பட்டி சந்திப்பு, தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை, ரெயில் நிலைய பகுதி, டவுன்ஹால் உள்பட பல இடங்களில் பஸ் நிறுத்தங்களும் உள்ளன.
கோவை மாநகர் மற்றும் மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெளிமாநிலத்தவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கி வேலைக்கும், படிக்கவும் சென்று வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பஸ்சில் பயணம் செய்தே வேலைக்கும், கல்லூரிகளுக்கும் செல்கிறார்கள். இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் எப்போதும் கூட்டம் அதிகம் காணப்படும்.
மாநகர், புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் எல்லா பஸ்களிலுமே மக்கள் கூட்டத்தை காண முடியும். அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக் கடங்காத கூட்டம் இருக்கும். இருக்கைகள் முழுவதும் நிரம்பி, படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் நிலையும் இருந்து வருகிறது.
சில இடங்களில் பஸ்சுக்குள் இடம் இருந்தாலும், கல்லூரி பள்ளி மாணவர்கள் உள்ளே செல்லாமல் படியில் தொங்கி செல்வதையே விரும்பி, படியில் தொங்கிய படியே பயணிக்கின்றனர்.
பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வாலிபர்களில் ஒருசிலர் ரோட்டில் கால்களை உரசியபடியும், சாலைகளில் செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரை உரசியபடியும் செல்கின்றனர். இது அவர்களுக்கு ஜாலியாக தெரிந்தாலும் இதில் உள்ள பின் விளைவுகள் தெரியாமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அவர்கள் இப்படி செய்வது பஸ்சில் பயணிப்போர் மட்டுமின்றி சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் அச்சத்தை கொடுத்து வருகிறது.சூலூர், கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் திருப்பூருக்கும், திருப்பூரில் இருந்து சூலூர் பகுதிக்கும் வேலை விஷயமாகவும், படிப்பு விஷயமாகவும், மாணவர்களும், மக்களும் தினமும் வந்து செல்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் பஸ்களிலேயே பயணிக்கின்றனர். தனியார் பஸ், அரசு பஸ் என எல்லா பஸ்களிலும் இதனால் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் ஒரு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ஒரு காலை மட்டும் கடைசி படிக்கட்டில் வைத்தும், மற்றொரு காலை தொங்கவிட்ட படியும் பயணம் செய்கின்றனர். இது பஸ்சில் பயணிப்பவர்களுக்கும், சாலையில் செல்லக்கூடிய மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சமாக உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை பகுதி மிகவும் பரபரப்பு நிறைந்த பகுதியாகும். இங்கிருந்து மாதம்பட்டி, நரசீபுரம், கெம்பனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் செல்கிறது. இதனால் இந்த பகுதி இந்த இடங்களுக்கு எல்லாம் முக்கிய சந்திப்பாக உள்ளது.
இதுதவிர அரசு கலைக்கல்லூரி, பள்ளிகளும் இயங்கி வருவதால் எப்போதும் இங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படும். பஸ் வந்து நின்றதும் எப்படியாவது ஏறி சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் பக்கத்தில் யார் நிற்கிறார் என்பதை கூட இடம் பிடிக்க அனைவரும் முண்டியத்து கொண்டு ஓடுவார்கள். பஸ்சில் கூட்டமாக இருந்தாலும் பஸ் படிக்கட்டுகளில் பயணித்தபடியே பயணிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
நேற்று கெம்பனூர் பகுதியை சேர்ந்த லீலாவதி என்பவர், தொண்டாமுத்தூரில் உள்ள தனது மகனின் கடைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட பஸ் ஏறுவதற்காக சந்தைபேட்டை பகுதிக்கு சென்றார்.
அப்போது காந்திபுரம் நோக்கி பஸ் ஒன்று வந்தது. பஸ்சை பார்த்ததும் அங்கிருந்த பயணிகள் அனைவரும் பஸ்சில் இடம் பிடிக்க ஓடி வந்தனர். அந்த சமயம் பஸ் ஏறுவதற்கு ஓடியவர்களில் சிலர் மூதாட்டி மீது மோதி விட்டனர். இதில் அவர் கீழே விழுந்தார்.
எழுந்திருப்பதற்குள், பஸ் மூதாட்டியின் கால்களில் ஏறி விட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும் பஸ்சில் இருந்தவர்கள் பஸ்சை நிறுத்தி அவரை மீட்டு சிகிச்சைக்கு அழைத்தனர்.
படிக்கட்டில் பயணம் செய்யும் போது, சில நேரங்களில் மாணவர்கள் அதில் இருந்து கீழே விழும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் அடிக்கடி சோதனைகள் மேற்கொண்டு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் மாணவர்கள் கேட்பதே இல்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பதால் நிறைய ஆபத்துக்கள் உள்ளது. அது தெரியாமல் மாணவர்கள் ஜாலியாக தொங்கி கொண்டு செல்கிறார்கள். கண்டக்டர், டிரைவர் கூறினாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்வதே இல்லை. இதுபோன்ற பயணங்களை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அடிக்கடி ரோந்து மேற்கொள்ள வேண்டும். அப்போது பஸ்சில் படியில் தொங்கி கொண்டு வருபவர்களை பிடித்து அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.






