என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாயின் கள்ளக்காதலனால் பாலியல் தொல்லை-மாணவி படித்த பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பால்பிரவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
- மாணவி தாயிடம் கூறியும், அவர் பால்பிரவீனை கண்டிக்காமல் சிறுமியை கண்டித்தார்.
சூலூர்,
கோவை சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது தாயுடன் அந்த பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு, அவரது தாயின் கள்ளக்காதலனான சென்னையை சேர்ந்த பால்பிரவீன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இது தொடர்பாக மாணவி தாயிடம் கூறியும், அவர் பால்பிரவீனை கண்டிக்காமல் சிறுமியை கண்டித்தார். தொடர்ந்து பால்பிரவீனின் தொல்லை அதிகரிக்கவே மாணவி சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பால்பிரவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயையும் கைது செய்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவி தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து தான் படித்து வந்த பள்ளியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்கிருந்த ஆசிரியர்கள் அதனை சரியாக கையாளாமல் அவரது பாட்டியை அழைத்து தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் மாணவி படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.






