என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆடிக்குண்டத்தையொட்டி பூப்பல்லக்கு தேரில் எழுந்தருளிய வனபத்ரகாளி அம்மன்
- நடப்பாண்டுக்கான ஆடிகுண்டம் திருவிழா, கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
- மாவிளக்கு எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆடிகுண்டம் திருவிழா, கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்வு, நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், வெல்ஸ்புரம், கூடுதுறை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்திருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வனபத்ரகாளி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அப்போது பூ பல்லக்கில் அருள்பாலித்த அம்மனுக்கு தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகள் செய்தார். பூப்பல்லக்கு பவனி ஏற்பாடுகளை கெண்டையூர் செல்வராஜ் செய்திருந்தார்.
வனபத்ரகாளி அம்மன் கோவில் முன்பு தொடங்கிய தேர்பவனி, பக்தர்கள் புடைசூழ வளாகத்தை சுற்றிவந்து மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. அப்போது தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், வெல்ஸ்புரம், கூடுதுறை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச் சென்றனர்.
தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், கோவில் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.






