என் மலர்
கோயம்புத்தூர்
- புதிதாக சேர்ந்தவர்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சியில் 60 வீரர்கள் பங்கேற்றனர்
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப்படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது. பயிற்சி பள்ளி முதல்வர் ஐ.ஜி.ஸ்ரீஅஜய் பரதன் உத்தரவின் பேரில் துணை கமாண்டர் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுவாசமாலா, கோஷ், நேபால் சிங் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இது குறித்து மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் கூறும்போது, மத்திய ரிசர்வ் படையில் புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, காலி பாட்டில், பிளாஸ்டிக் டிரம் ஆகியவற்றை மீட்பு கருவிகளாக கொண்டு மீட்பது, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது மற்றும் கட்டிங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, மண்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, ெரயில் விபத்து காலத்தில் பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் செயல்படும் விதம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆழியாறு அணை நீரில் படை வீரர்கள் படகில் சென்று ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
டிரம், கேன், மரத்துண்டுகளை கொண்ட படகை தயார் செய்து, அணையின் மைய பகுதிக்கு கொண்டு சென்று நீரில் தத்தளிக்கும் நபர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருவது மற்றும் அவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்று தத்ரூ பமாக செய்து காண்பித்தனர். இதில் 60 வீரர்கள் பங்கேற்றனர் என்றனர்.
- தலையில் படுகாயம் அடைந்த மாரிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கொலை செய்த வாலிபரை தேடி வந்தனர்.
கவுண்டம்பாளையம்:
ராஜபாளையத்தை சேர்ந்தவர் மாரிதுரை (வயது 45). பெயிண்டர். இவர் குடும்பத்தை பிரிந்து கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி பிரிவில் வசித்து வருகிறார். இவருக்கு வீடு இல்லாததால் அந்த பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பு படுத்து தூங்கி வந்தார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான மாரிதுரை அவரது நண்பரான ஜெரோ மியா (27) என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இவர்கள் 2 பேரும் கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு கடை முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் மாரிதுரையிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மாரிதுரையை கீழே தள்ளி அங்கு கிடந்த கல்லால் அவரது தலையில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மாரிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட மாரிதுரையின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கொலை செய்த வாலிபரை தேடி வந்தனர். அப்போது போலீசார் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு மேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து மாரிதுரையை கல்லால் தாக்கி கொலை செய்த திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (19) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
சம்பவத்தன்று நான் வேலை முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றேன். போதை தலைக்கேறிய நிலையில் கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றேன். அப்போது எனக்கு ஏற்கனவே அறிமுகமான மாரிதுரை அந்த பகுதியில் உள்ள கடை முன்பு படுத்து இருந்தார். அவரிடம் நான் மது குடிக்க பணம் கேட்டேன். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை கீழே தள்ளி அங்கு கிடந்த கல்லால் அவரது தலையில் தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் நான் தலைமறைவாக இருந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார். போலீசார் கைது செய்யப்பட்ட சக்திவேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை:
நாடு முழுவதும் நாளை (15-ந் தேதி) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.
கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு, தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பை ஏற்று கொள்கிறார். இதனை அடுத்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.
இதில் காந்திமாநகர் அரசு பள்ளி அரசூர் அரசு பள்ளி உள்பட 10 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 350 மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வ.உ.சி. மைதானத்தில் விழா மேடை அமைக்கும் பணி, மைதானத்தை சீரமைக்கும் பணியும் நடக்கிறது. மோப்ப நாய் உதவியுடன், போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் 1500 போலீசார், புறநகரில் 1500 போலீசார் என மொத்தம் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மக்கள் அதிகம் கூடக்கூடிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். பஸ் நிலைய பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நேற்று ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகையும் நடைபெற்றது. ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலைய பகுதிகளில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரெயில் நிலைய மேடை, பயணிகளின் உடமைகள், பார்சல்கள் போன்றவற்றையும் சோதனை செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரெயில் நிலைய பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிகிறார்களா என்பதையும் கண்காணித்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை மாவட்ட முழுவதும் போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
மேலும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து, அதன் பின்னரே உள்ளே அனுமதித்தனர். இன்று காலையும் வாகன சோதனையானது நடந்து வருகிறது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக இருந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.
- கேரளாவுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
- சமூக விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
நடிகர் பாக்யராஜ் நடித்த ருத்ரா திரைப்படத்தில் வங்கியில் கொள்ளையடிப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் நடிகர் பாக்கியராஜ் வங்கியில் கொள்ளையடித்து விட்டு, அந்த பணத்தை பேக்கில் எடுத்து செல்லாமல், தான் அணிந்திருக்கும் சட்டைக்கு மேல் அணியும் கோட்டுக்குள் வைத்து கடத்தி செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
சினிமாவில் தான் இப்படி கடத்த முடியும் என்று நினைத்த வேளையில், நிஜமாகவே இதுபோன்றே சட்டைக்குள் தனி பாக்கெட்டுகள் அமைத்து, பணத்தை கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை-கேரள எல்லையான வாளையாரில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கேரள கலால் துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பஸ் வந்தது. இந்த அரசு பஸ்சை கேரள கலால் துறை அதிகாரிகள் மறித்து, அதில் ஏறி அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அதில் இருந்த முதியவர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் அணிந்திருந்த சட்டையும் வித்தியாசமாக காணப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த முதியவரை மட்டும் பஸ்சை விட்டு இறக்கி அருகே உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கு வைத்து, அவரை முழுமையாக சோதனை செய்தனர். அவர் சாதாரண சட்டை, வேட்டி அணிருந்திருந்தார். ஆனால் அதற்குள் பாதுகாப்பு கவச உடை போன்று அணிந்திருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து அந்த நபரை சட்டையை கழற்ற சொல்லி, அந்த பாதுகாப்பு கவச உடையை பார்த்தனர். அப்போது, அதில் 20-க்கும் மேற்பட்ட தனித்தனி பாக்கெட்டுகள் இருந்தன.அந்த பாக்கெட்டுகளுக்குள் கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் பணம் இருந்தது.
அதிர்ச்சியான அதிகாரிகள், வேறு எங்காவது இதுபோன்று பணத்தை மறைத்து வைத்து கடத்துகிறாரா என சோதனை செய்த போது, அந்த முதியவர் தனது கால் தொடையிலும் பணத்தை மறைத்து கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முதியவரிடம் இருந்து ரூ.24¾ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் யார்? எங்கிருந்து கடத்தி வருகிறார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தானாஜி யஷ்வந்த் என்பதும், இவர் கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்கு கமிஷன் அடிப்படையில் இந்த பணத்தை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
மேலும் எர்ணாகுளத்தில் தனது அடையாளத்தை வைத்து மற்றொரு நபர் அந்த பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அதிகாரிகள், அவரை கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இவர் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டரா? அல்லது சமூக விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் ஒருவர் தனது உடல் முழுவதும் பணத்தை மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 77 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.
- சைபர் கிரைம் குறித்த புகார்களை அவசர உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
கோவை.
கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் ஈடுபடுவர்களை கண்டுபிடித்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறன்னர்.
இதன் ஒரு பகுதியாக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். பேஸ்புக், டிவிட்டர், வேலை வாங்கி தருவதாக மோசடி, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து அதில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்ட சைபர் கிரைமில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் வரையிலான 7 மாத காலத்தில் மட்டும் 3,013 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 886 வழக்குகளில் குற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கு தீர்வும் காணப்பட்டுள்ளது. 77 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் சைபர் குற்ற வழக்குகள் தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை ரூ.81 லட்சத்து 25 ஆயிரத்து 969 பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவில் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் சைபர் கிரைம் புகார்கள் பெறப்படுகின்றன.
சைபர் கிரைம் குறித்த புகார்களை அவசர உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது.
- சிறைவாசிகள் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை,
கோவை காந்திபுரத்தில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள் மூலம் ஜெயில் நுழைவுவாயில் அருகே ஏற்கனவே பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் காந்திபுரத்தில் இருந்து மகளிர் பாலிடெக்னிக் செல்லும் சாலை சந்திப்பில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது. கைதிகளால் நடத்தப்படும் இந்த பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று காலை நடந்தது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தனர். தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் தமிழக சிறைத்துறை முதலாவது இடத்தில் உள்ளது. சிறைச்சாலை என்பது தண்டிக்க கூடிய இடமாக இல்லாமல், மன்னிக்கக்கூடிய இடமாக இருக்க வேண்டும். ஓட்டல்களில் கிடைக்காத உணவு கூட சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
45 ஆண்டுகளுக்குப் பிறகு உணவு பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தண்டனை காலத்தில் கூட சிறைவாசிகள் சம்பாதித்து அவர்களது குடும்பத்திற்கு அனுப்பும் வகையில் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது.
இவர் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், கோவை ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஜெயில்கள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சிறைவாசிகளின் மறு வாழ்வுக்கான கல்வி, திறன் மேம்பாடு தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஜெயில் வளாகங்களில் அங்காடிகள் தொடங்கி சிறைவாசிகளால் தயார் செய்யப்படும் பாலி விஸ்கோஸ் துணி, தோல் காலணிகள், தோல் பெல்ட், சலவை, குளியல் சோப் கைவினைப் பொருட்கள், நோட்டுபுத்தகம், பூச்செடிகள், மண்புழு உரம், காய்கறிகள் ஓவியங்கள், மழை கோட்டு, மரசெக்கு எண்ணைகள் அடுமனை பொருட்கள், போர்வைகள், போன்றவைகள் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்பட்டு பிரீடம் என்ற பெயரில் ஜெயில் அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த செயல்பாட்டின் மூலம் சிறைவாசிகள் தினசரி ஊதியம் மற்றும் லாபத்தில் ஒரு பங்கு தொகையையும் பெற்று வருகின்றனர். ஜெயில் அங்காடிகள் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக மத்திய ஜெயில் சென்னை புழல், வேலூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் தமிழக அரசு சிறைத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுடன் இணைந்து நடத்துகிறது. தற்போது புதிதாக காந்திபுரத்தில் மற்றொரு பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டு உள்ளது.
- மாரித்துரை, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- கொலையா? என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்,
தென்காசி மாவட்டம் சிவராமபேட்டை கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரித்துரை(வயது50).
இவர் கோவை வந்து, பெரியநாயக்கன் பாளையம் வீரபாண்டி பிரிவு பகுதியில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார்.
இவர் தினமும் வேலை முடிந்ததும் குடித்து விட்டு வந்து, அந்த பகுதிகளில் தகராறில் ஈடுபடுவதும், பின்னர் அங்குள்ள கடைகள் முன்பு தூங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
இன்று காலை மாரித்துரை, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது மாரித்துரையின் முக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. மேலும் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தது.
இதையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாரித்துரை எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.
கோவை,
வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் கார் குண்டு வெடிப்பு, சமூக விரோத கும்பல் நடமாட்டம், பல்வேறு குற்றவாளிகள் பிடிபட்ட சம்பவங்களை தொடர்ந்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் நகரில் உச்சகட்ட பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகள் உடமைகள், பார்சல்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.
சோதனைக்கு பின்னரே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர், மால்கள், மார்க்கெட், வணிக வளாகம் என மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகள், கடைவீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.
அங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் தங்கி இருந்தால் அவர்களின் முழு விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
சுதந்திர தின விழா நடக்க உள்ள கோவை வ.உ.சி பூங்கா போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். மேலும் டிரோன் காமிரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
விழா நடக்கும் இடங்களிலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- 100க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்பனை செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடவள்ளி,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
13-வது நாளாக இன்று கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை முன்பு கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
அப்போது விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டியும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்பனை செய்ய வலியுறுத்தியும் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த வருடம் தேங்காய் ஒன்று ரூ.17 முதல் ரூ.18 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு தேங்காய் ரூ.6க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விட கடுமையான விலைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதே. பாமாயில் இறக்குமதி செய்வதை உடனே நிறுத்த வேண்டும்.
மேலும் அனைத்து ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள் ஆகியவற்றில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களில் கள் இறக்குமதிக்கு அனுமதி உள்ள போதிலும் தமிழகத்திலும் கள் இறக்க உள்ள தடையை நீக்க வேண்டும்.
வருகிற 31-ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், செப்டம்பர் முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று கூடி சென்னை தலைமையகம் முன்பு திரண்டு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில், மதனகோபால், ராஜ், விஸ்வநாதன், கந்தசாமி, நடராஜ், மயில்சாமி, பழனிச்சாமி உள்ளிட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- அளவரை தாக்கிய முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நிமலன் கிறிஸ்டோபர் தலைமை தாக்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட துணை தலைவர் அசோக், பொருளாளர் வேலைமுருகன், இணைச்சசெயலாளர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சதிஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
இதில் கலந்து கொண்டவர்கள் கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய முன்னாள் கவுன்சிலரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட கிளை செயலாளர் மீனாட்சி நன்றியுரையாற்றினார்.
- இளம்பெண் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க போவதாக கணவரிடம் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.
- கணவர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டிரைவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இளம்பெண் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது இளம்பெண்ணுக்கு அந்த கம்பெனியில் வேலை செய்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக இளம்பெண்ணின் கணவர் அவரிடம் கோபித்துக்கொண்டு கோவில்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் தன்னை தேட வேண்டாம் எனவும், புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். பின்னர் அவர் தனது மகனுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவி, மகனை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- நவீன் மாணவியை சினாக்ஸ் வாங்கி தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு அழைத்து சென்றார்.
- போலீசார் நவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள விளாங்குறிச்சியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு மாணவி சேரன்மாநகரில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே வசித்து வந்த கார் டிரைவர் நவீன் (வயது 21) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று மாணவி வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நவீன் மாணவியை சினாக்ஸ் வாங்கி தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு அழைத்து சென்றார். மளிகை கடை பின்புறம் வைத்து டிரைவர் மாணவியிடம் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறி கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நவீன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
அவர் தினசரி மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். நாளடைவில் தொல்லை அதிகரிக்கவே மாணவி இதுகுறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கார் டிரைவர் நவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






