என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை முன்பு விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்
- 100க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்பனை செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடவள்ளி,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
13-வது நாளாக இன்று கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை முன்பு கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
அப்போது விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டியும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்பனை செய்ய வலியுறுத்தியும் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த வருடம் தேங்காய் ஒன்று ரூ.17 முதல் ரூ.18 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு தேங்காய் ரூ.6க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விட கடுமையான விலைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதே. பாமாயில் இறக்குமதி செய்வதை உடனே நிறுத்த வேண்டும்.
மேலும் அனைத்து ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள் ஆகியவற்றில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களில் கள் இறக்குமதிக்கு அனுமதி உள்ள போதிலும் தமிழகத்திலும் கள் இறக்க உள்ள தடையை நீக்க வேண்டும்.
வருகிற 31-ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், செப்டம்பர் முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று கூடி சென்னை தலைமையகம் முன்பு திரண்டு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில், மதனகோபால், ராஜ், விஸ்வநாதன், கந்தசாமி, நடராஜ், மயில்சாமி, பழனிச்சாமி உள்ளிட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.






