search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money smuggling"

    • கேரளாவுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
    • சமூக விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நடிகர் பாக்யராஜ் நடித்த ருத்ரா திரைப்படத்தில் வங்கியில் கொள்ளையடிப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் நடிகர் பாக்கியராஜ் வங்கியில் கொள்ளையடித்து விட்டு, அந்த பணத்தை பேக்கில் எடுத்து செல்லாமல், தான் அணிந்திருக்கும் சட்டைக்கு மேல் அணியும் கோட்டுக்குள் வைத்து கடத்தி செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

    சினிமாவில் தான் இப்படி கடத்த முடியும் என்று நினைத்த வேளையில், நிஜமாகவே இதுபோன்றே சட்டைக்குள் தனி பாக்கெட்டுகள் அமைத்து, பணத்தை கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    கோவை-கேரள எல்லையான வாளையாரில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கேரள கலால் துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்கு அரசு பஸ் வந்தது. இந்த அரசு பஸ்சை கேரள கலால் துறை அதிகாரிகள் மறித்து, அதில் ஏறி அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் இருந்த முதியவர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் அணிந்திருந்த சட்டையும் வித்தியாசமாக காணப்பட்டது.

    இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த முதியவரை மட்டும் பஸ்சை விட்டு இறக்கி அருகே உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அங்கு வைத்து, அவரை முழுமையாக சோதனை செய்தனர். அவர் சாதாரண சட்டை, வேட்டி அணிருந்திருந்தார். ஆனால் அதற்குள் பாதுகாப்பு கவச உடை போன்று அணிந்திருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து அந்த நபரை சட்டையை கழற்ற சொல்லி, அந்த பாதுகாப்பு கவச உடையை பார்த்தனர். அப்போது, அதில் 20-க்கும் மேற்பட்ட தனித்தனி பாக்கெட்டுகள் இருந்தன.அந்த பாக்கெட்டுகளுக்குள் கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் பணம் இருந்தது.

    அதிர்ச்சியான அதிகாரிகள், வேறு எங்காவது இதுபோன்று பணத்தை மறைத்து வைத்து கடத்துகிறாரா என சோதனை செய்த போது, அந்த முதியவர் தனது கால் தொடையிலும் பணத்தை மறைத்து கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் முதியவரிடம் இருந்து ரூ.24¾ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் யார்? எங்கிருந்து கடத்தி வருகிறார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தானாஜி யஷ்வந்த் என்பதும், இவர் கோவையில் இருந்து எர்ணாகுளத்திற்கு கமிஷன் அடிப்படையில் இந்த பணத்தை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    மேலும் எர்ணாகுளத்தில் தனது அடையாளத்தை வைத்து மற்றொரு நபர் அந்த பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள், அவரை கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இவர் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டரா? அல்லது சமூக விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதியவர் ஒருவர் தனது உடல் முழுவதும் பணத்தை மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×