என் மலர்
கோயம்புத்தூர்
- மோட்டார் சைக்கிளில் சென்றபோது துணிகரம்
- வழிப்பறி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
பீளமேடு,
கோவை ராமநாதபுரம், பாலாஜி நகரை சேர்ந்த லோகநாதன் மனைவி அம்பிகா (வயது 54), இவர் காளப்பட்டி, நேரு நகரில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.
அப்போது சித்ரா பகுதியில் இருந்து காளப்பட்டி செல்லும் ரோட்டில் இன்னொரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
அவர்கள் காளப்பட்டி மோட்டார் கம்பனி அருகே, அம்பிகா கழுத்தில் கிடந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 1 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்மணி சுதாரித்து கொண்டு தங்க செயினை இறுக பற்றிக்கொண்டார். எனவே வழிப்பறி கும்பல் ஏமாற்றத்துடன் தப்பி சென்றது.
இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் அம்பிகாவிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை தேடிவருகின்றனர்.
- கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் மனு
- நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி நகராட்சியில் கிடைக்கும் பல்வேறு பணிகளை விரைந்து முடிக்க கோரி கருமத்தம்பட்டி அ.தி.மு.க. நகரமன்ற செயலாளர் ஆதவன் கே.பிரகாஷ் (10-வது வார்டு உறுப்பினர்) தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். அப்போது ஆணையர் இல்லாததால் நகராட்சி துணைத்தலைவர் யுவராஜிடம் மனு அளித்தனர்.
அந்தமனுவில் கூறியிருப்பதாவது:-
கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு சில வார்டுகளில் தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறாமல் உள்ளது. மேலும் பல்வேறு வார்டு பகுதிகளில் காங்கிரீட் சாலை அமைக்க சாலைகளை பெயர்த்து பல நாட்களாக சாலைகளை சீரமைக்கப்படாமல் உள்ளது.
சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளை சரிவர அல்லப்படாமல் இருப்பதாலும், தற்போது சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் உடனடியாக மழைநீர் வடிகால் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மேலும் கிடப்பில் கிடைக்கும் பணிகளை விரைந்து முடிக்கா விட்டால் அ.தி.மு.க. சார்பில் கருமத்தம்பட்டி நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக என அறிவித்தனர்.
நிகழ்ச்சியில் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சூப்பர் காட்டன் தங்கவேல், கருமத்தம்பட்டி நகராட்சி 13-வது வார்டு உறுப்பினர் லாதமணி, 24-வது வார்டு உறுப்பினர் அருணா தேவி, 14-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார், கருமத்தம்பட்டி நகராட்சி அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மதுபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்
- போலீசார் 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்தை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 38). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான மீனாங்கரை ரோட்டை சேர்ந்த அல்பாரூக் (47), இந்திரா நகர் காலனியை சேர்ந்த முருகேசன் (43),குமாரபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (48) ஆகியோருடன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக மது குடித்தனர்.
போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த அல்பாரூக், முருகேசன், செந்தில்குமார் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சாவியால் ஹக்கீமின் முகம் மற்றும் கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஹக்கீமை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஹக்கீமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை சாவியால் குத்திக்கொலை செய்த அல்பாரூக், முருகேசன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ஏழைகளின் நலன், இந்தியா உலக நாடுகளிடையே உண்மையான பொருளாதார இடத்தை பெற, மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும்.
- நீலகிரி தொகுதியில் ஊழல்வாதி ராசா எம்.பி.யை அப்புறப்படுத்த வேண்டும்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் நடந்த நடைபயண பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் தாய்மார்களும், சகோதரிகளும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்கின்றனர். பலரும் பெண் சுதந்திரம் பற்றி பேசுவார்கள். ஆனால் நாம் அதனை செய்து காட்டியுள்ளோம்.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று, மீண்டும் மோடி ஆட்சியையும், அவரை பிரதமராகவும் பாராளுமன்றத்தில் அமர வைக்க வேண்டும்.
ஏழைகளின் நலன், இந்தியா உலக நாடுகளிடையே உண்மையான பொருளாதார இடத்தை பெற, மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும்.
இங்கே கூடியுள்ள கூட்டம் சாதாரண கூட்டம் இல்லை. தொண்டர்கள் ரூ.1000 உழைத்தால் ரூ.500 கட்சிக்காக செலவு செய்கின்றனர். யாரிடமும் கமிஷனுக்காக கைக்கட்டி நிற்கவில்லை. ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜனதாவால் மட்டும் தான் தர முடியும்.
நீலகிரி தொகுதியில் ஊழல்வாதி ராசா எம்.பி.யை அப்புறப்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. ஆ. ராசா ரூ. 1.70 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார்.
கோவைக்கு பிரதமர் திட்டத்தில் 53 ஆயிரத்து 688 பேருக்கு இலவச வீடு வந்துள்ளது. குடிநீர் 66 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் வருகிறது. இப்படி பல திட்டங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். நாங்கள் அதனை சொல்லி வாக்கு கேட்போம், தி.மு.க. எதனை கூறி வாக்கு கேட்கும். அவர்கள் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.
திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து சென்று சிலர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். அப்படி அவர்கள் சென்றபோது, கண்ணீர் துளிகளோடு, திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து செல்வதாக தெரிவித்தனர்.
இதனால் பெரியார், அவர்களை தி.மு.க. தலைவர்கள் என்று அழைக்கவில்லை. கடைசி வரை கண்ணீர் துளி தலைவர்கள் என்றே அழைத்தார். பெரியார் சுத்தமாக மதிக்காத ஒரு கட்சி என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.
1965-ல் இந்தி திணிப்பு போராட்டத்தின்போது, பெரியார் இந்தி திணிப்பு போராட்டம் என்பதே தி.மு.க.வின் ஒரு நாடகம். தி.மு.க. கட்சியே ஒரு நாடக கட்சி. கண்ணீர் துளி கட்சி, பொய்யை சொல்லி ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி. இந்த கட்சியை நீங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும். தி.மு.க.வுக்கு தலைவர்கள் கிடையாது. அவர்களுக்கு கொள்கை கிடையாது. மொத்தத்தில் தி.மு.க. என்பது தலைவர்கள், கொள்கை இல்லாத கட்சியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், செயலாளர் ஜெயபால், மத்திய நலத்திட்ட மாவட்ட தலைவர் செயலாளர் ராகவன், சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் லியாகத்அலி, காரமடை நகர தலைவர் ஆனந்தகுமார் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.
கோவை:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2½ ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் தரவில்லை. எந்தவொரு திட்டமும் புதிதாக வரவில்லை.
கோவையில் சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுகிறது. பல சாலைகள் போடப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கோவையில் 500 சாலை திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வரும்.
நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சனையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. அது எங்கிருந்து வருகிறது எனவும் தெரியவில்லை.
தி.மு.க. ஐ.டி.விங் குழுவினர் ஏதாவது செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.கவின் தலைவர்.
ஏக்நாத் ஷிண்டே என்பவர் அவரது கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் முழுமையாக நிற்கிறோம். நான் என்றைக்குமே அ.தி.மு.க காரன் தான். எனது குடும்பமே அ.தி.மு.க குடும்பம் தான். எனவே எந்தவித குழப்பம் செய்தாலும் இங்கு எதுவும் நடக்காது. நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுநடை போடுவோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெல்லும். அத்தனை மக்களும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி விட்டார். அதனை இவர்களால்தாங்க முடியவில்லை. அதனால் இப்படி குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். இதுபோல் சில்மிஷம் செய்து எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வில் இருந்து என்னை மட்டுமல்ல. யாரையும் பிரிக்க முடியாது.
எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யானை ஊருக்குள் வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
- வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையிடம் போ ராசா. இது மக்கள் வாழும் பகுதி வராதே என சத்தமாக பேசி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது,
காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து மளிகை கடை, சத்துணவு மையம், வீடுகள் போன்றவைகளை உடைத்து உணவுகளை சாப்பிட்டு சென்று வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
பின்னர் வீடுகளில் அருகில் யானை சுற்றி வந்தது.
யானை ஊருக்குள் வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை விரட்டும் பணிகள் ஈடுபட்டனர்.
அப்போது வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையிடம் போ ராசா. இது மக்கள் வாழும் பகுதி வராதே என சத்தமாக பேசி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது யானை திடீரென வேட்டை தடுப்பு காவலர்களை நோக்கி விரட்டி வந்தது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்து ஓடினர். பின்பு யானையிடம் சத்தமாக பேசி வனப்பகுதிக்கு விரட்டினர். யானையும் அவர்களின் பேச்சை கேட்டு அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது.
வேட்டுத்தடுப்பு காவலர்கள் யானையிடம் பேசியே யானையை விரட்டியது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- கொடநாடு வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஐயப்பன் ஆஜரானார்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
இந்த வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள போலீசார் அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவரான ஐயப்பனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஐயப்பன் ஆஜரானார்.
அவரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் கொடநாடு பங்களா குறித்தும், பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அவரும் தனக்கு தெரிந்த பதில்களை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
முன்னதாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, என்னிடம் ஏற்கனவே தனிப்படை போலீசார் விசாரித்தனர். தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதால், விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன் என்றார்.
- தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 22). இவர் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-வது ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவர் பகுதி நேரமாக அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தும் வருகிறார். பாரதிபுரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி இருந்து வருகிறார்.
நேற்று மாலை மகேந்திரன் மற்றும் அவரது நண்பர் கிஷோர் ஆகியோர் வெளியே சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளில் ஒக்கிலிபாளையம் அருகே சென்ற போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மகேந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனை 2 பேரும் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 3 பேரும் சேர்ந்து மகேந்திரன் மற்றும் கிஷோரை மிரட்டி விட்டு அங்கு இருந்து சென்றனர்.
பின்னர் 2 பேரும் பாம்பம்பட்டியில் உள்ள அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். ஒத்தகால்மண்டபம் பாலம் அருகே சென்ற போது மழை வந்தது. இதனையடுத்து 2 பேரும் பாலத்துக்கு அடியில் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். அப்போது 10 மோட்டார் சைக்கிள்களில் பட்டா கத்தி மற்றும் பீர் பாட்டிலுடன் 15 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் மகேந்திரனை பார்த்ததும் இவன் தான் மாலையில் நம்மிடம் தகராறு செய்தவன் என்று கூறி அருகே சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 15 பேரும் சேர்ந்து மகேந்திரனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி பட்டா கத்தியால் வெட்டினர். அதில் மகேந்திரனின் வலது கையில் 2 விரல்களும், இடது கையில் ஒரு விரலும் துண்டானது. பின்னர் கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மகேந்திரனை அந்த வழியாக சென்றவர்கள் மீது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது மலுமச்சம்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த பி.டெக், ஐ.டி. 3-வது ஆண்டு படிக்கும் மாணவர் தினேஷ் உள்பட 15 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவியின் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- மாணவியின் தாயார் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் யார் என விசாரணை நடத்தினார்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு அதே பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்த சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதற்கிடையே மாணவியின் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியின் தாய் கணவரை பிரிந்து சென்றார். மாணவி அவரது தந்தையுடன் வசித்து வந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வேலைக்கு சென்றார். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிறுவன் மாணவியின் வீட்டிற்கு வந்து தங்கினார். தனியாக இருந்த மாணவியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தான். இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார்.
இதுபற்றி அறிந்த மாணவியின் தாயார் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் யார் என விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். பின்னர் அவர் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்வேறு நாட்டுப் புற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
- சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
ஈஷா நவராத்திரி கொண்டாட்டத்தின் 2-ம் நாளான நேற்று தஞ்சாவூரைச் சேர்ந்த கலைமாமணி சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2-ம் நாளான நேற்று கிராம தெய்வங்களை போற்றி வணங்கும் பல்வேறு நாட்டுப் புற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் திரு. கிட்டுசாமி, கோவை விவசாய சங்க தலைவர் திரு. சுந்தரராமசாமி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
30 வருடங்களாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கலைமாமணி சிவாஜி ராவ் அவர்களின் தலைமையில் இக்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முருக பெருமானை வணங்கி அவர் ஆடிய காவடியாட்டத்தை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்து பாராட்டினர். மேலும், தஞ்சை ராணி கோகிலா அவர்களின் கரக்காட்டம், ஜீவாராவ், பொன்னி ஆகியோரின் பொய்க்கால் குதிரையாட்டம், சித்தார்த்தன், ரியாஸ், குமார் ஆகியோரின் மாடு மற்றும் மயில் நடனங்கள், செல்வம் அவர்களின் பறையாட்டம் மற்றும் சக்கரை குழுவினரின் நையாண்டி ஆட்டம் என அடுத்தடுத்து சுமார் 2 மணி நேரம் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் விழா களைக்கட்டியது.
கலைஞர் சிவாஜி ராவ் அவர்கள் அமெரிக்கா, லண்டன், மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும், இந்தியா முழுவதும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரியை முன்னிட்டு ஈஷாவில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் வரும் 23-ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறும். இன்று உமா நந்தினி அவர்களின் தேவாரம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
- போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் பேட்டி
- வீடுகளில் திருட்டு ஏற்பட்டால் உடனே போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டுகோள்
குனியமுத்தூர்,
கோவை மாநகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துவது குறித்து மாநகர போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் கூறியதாவது:-
வீட்டின் வாசலில் இரும்பு கதவு அமைத்து வெளியே செல்லும்போது பூட்டிவிட்டு செல்கிறோம். அப்போது வீட்டு வாசலில் தொங்கும் பூட்டு திருடர்களின் கண்களை உருத்துகிறது. எனவே அவர்கள் வீட்டில் ஆள் இல்லை என்பதை எளிதாக அறிந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து விடுகின்றனர். எனவே உள்தாழ்ப்பாள் மூலம் கதவை பூட்டிவிட்டு செல்லும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் வீட்டில் ஆள் உள்ளனரா? இல்லையா? என்று தெரியாத நிலை ஏற்படும். இதனால் பெரும்பாலான திருட்டுகள் தவிர்க்கப்படும்.
எனவே புதிதாக வீடு கட்டுபவர்கள் மேற்கண்ட முறையை பயன்படுத்தினால் நல்லது. ஏற்கனவே பூட்டு தொங்கும் முறையை பயன்படுத்துபவர்கள் கூட, இந்த நிலைக்கு மாறினால் தங்களின் உடைமைகளை பாதுகாக்க இயலும். ஒரு இழப்பு ஏற்பட்ட பிறகு கூச்சலிட்டு அழுது பயனில்லை. அதற்கு முன்பாகவே வருமுன் காப்போம் அடிப்படையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் வாசலில் சி.சி.டி.வி கேமரா அமைக்க வேண்டும். அப்படி செய்தால் திருட்டு சம்பவங்களை பெரியளவில் தவிர்த்து விடலாம்.எத்தனையோ இடங்களில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போகிறது. அங்கு சி.சி.டி.வி கேமரா பொருத்தினால் அத்தகைய திருட்டு சம்பவங்களை தவிர்த்து விடலாம். அப்படியே திருட்டு ஏற்பட்டால் கூட குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடலாம்.
குடியிருப்பு பகுதிக்குள் சம்பந்தமில்லாத நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் ஏதாவது பிரச்சினை அல்லது திருட்டு ஏற்பட்டால், உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பிறருக்கு ஏற்படும் துன்பம் நமக்கு என்று எண்ணி செயல்பட வேண்டும். அப்படியாக ஒவ்வொருவரும் செயல்பட்டால் திருட்டு மட்டுமின்றி குற்ற சம்பவங்களையும் எளிதில் தடுத்து விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது
- 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்மனுக்கு பூஜைகள், அன்னதானம் நடைபெறுகிறது
சங்கனூர்,
கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவை சங்கனூரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் வழியில் அன்னியப்பன் வீதியில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ் வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலில் தசரா திருவிழா நேற்று காலை 11.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக தூத்துக்–குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று காலையில் தொடங்கிய பிறகு இந்த கோவிலில் தசரா திருவிழா தொடங்கியது.
இதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தசரா திருவிழா தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மாலைகளை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து விட்டு பூசாரி மூலம் கழுத்தில் அணிந்து கொண்டனர்.
இதையொட்ட ஞானமூர்த்தீஸ்வரர்-சமேத முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. நேற்று திருவிழா தொடங்கியதையொட்டி தசராக்குழுவினர் பல்வேறு வேடங்கள் அணிந்து கோவை மாநகர பகுதியில் உலா வர ஆரம்பித்து உள்ளனர்.
தொடர்ந்து குலசையில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.






