search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrible Conflict"

    • தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 22). இவர் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-வது ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவர் பகுதி நேரமாக அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தும் வருகிறார். பாரதிபுரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி இருந்து வருகிறார்.

    நேற்று மாலை மகேந்திரன் மற்றும் அவரது நண்பர் கிஷோர் ஆகியோர் வெளியே சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளில் ஒக்கிலிபாளையம் அருகே சென்ற போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மகேந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனை 2 பேரும் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 3 பேரும் சேர்ந்து மகேந்திரன் மற்றும் கிஷோரை மிரட்டி விட்டு அங்கு இருந்து சென்றனர்.

    பின்னர் 2 பேரும் பாம்பம்பட்டியில் உள்ள அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். ஒத்தகால்மண்டபம் பாலம் அருகே சென்ற போது மழை வந்தது. இதனையடுத்து 2 பேரும் பாலத்துக்கு அடியில் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். அப்போது 10 மோட்டார் சைக்கிள்களில் பட்டா கத்தி மற்றும் பீர் பாட்டிலுடன் 15 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் மகேந்திரனை பார்த்ததும் இவன் தான் மாலையில் நம்மிடம் தகராறு செய்தவன் என்று கூறி அருகே சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 15 பேரும் சேர்ந்து மகேந்திரனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி பட்டா கத்தியால் வெட்டினர். அதில் மகேந்திரனின் வலது கையில் 2 விரல்களும், இடது கையில் ஒரு விரலும் துண்டானது. பின்னர் கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மகேந்திரனை அந்த வழியாக சென்றவர்கள் மீது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது மலுமச்சம்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

    போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த பி.டெக், ஐ.டி. 3-வது ஆண்டு படிக்கும் மாணவர் தினேஷ் உள்பட 15 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×