என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    குழந்தைகளுக்கு சத்துணவு நல்ல முறையில் வழங்குகிறார்களா என்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.


    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது. வால்பாறை அருகே 11 வது வார்டு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2ஆசிரியர்களும், 23 பள்ளி குழந்தைகளும் படித்து வருகின்றனர்.

    இதில் வட மாநில மாணவர்களும் படித்து வருகின்றனர். 11-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் அப்பகுதிக்கு சென்று பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி குழந்தைகளின் சத்துணவு மையத்தை ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு சத்துணவு நல்ல முறையில் வழங்குகிறார்களா என்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    ராஜேஷ்வரி கொடுத்த புகாரின் பேரின் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    பீளமேடு,

    கோவை பீளமேடு கோபால் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(55). இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு நஞ்சப்பா ரோட்டில் உள்ளது.

    நஞ்சப்பா ரோட்டில் உள்ள வீட்டை லாவண்யா என்பவர் மாதத்தில் 2 முறை சென்று சுத்தம் செய்வது வழக்கம். சம்பவத்தன்று லாவண்யா வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உடனே லாவண்யா ராஜேஷ்வரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இது குறித்து ராஜேஷ்வரி கொடுத்த புகாரின் பேரின் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட செங்கல்பட்டை சேர்ந்த புகழேந்தி(22), வால்பாறையை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(31), கேரளா மலப்புரத்தை சேர்ந்த பூக்கயா(47), கோவை தடாகம் ரோடு வெங்கிடாபுரத்தை சேர்ந்த முருகன்(63) ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
    • சேலத்தில் நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும்.

    கோவை,

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த மாதம் 2-ந் தேதி கோவை வருகிறார்.

    பீளமேடு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார். சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டை விளக்கும் விதமாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் கொடிசியா மைதானத்தில் தொடங்கி உள்ளது. அந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் டிசம்பர் 2-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 20 ஆயிரம் இளைஞர் அணியினர் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணியினர் தொடங்கி உள்ளனர்.

    இந்த கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும். சேலத்தில் நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும். சேலத்தில் நடைபெறும் மாநாடு இதுவரை நடந்திராத மாநாடாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இளம்பெண் தன்னை யாரும் கடத்தவில்லை என போலீசில் தெரிவித்துள்ளார்.
    • வாலிபர் போலீஸ்நிலையத்தில் கண்கலங்கியபடி நின்றார்.

    கோவை,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இந்தநிலையில் அவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடியினர் கடந்த 20-ந் தேதி அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாலிபரின் வீட்டுக்கு புதுமண தம்பதி சென்றனர்.

    மறுநாள் வாலிபர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வாலிபரின் தாயாரும், புதுப்பெண்ணும் இருந்தனர். அப்போது பெண்ணின் பெற்றோர் வந்துள்ளனர். அவர்களிடம் அந்த பெண் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வாலிபரின் தாயார் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பெண்ணும், அவரது பெற்றோரும் மாயமாகி இருந்தனர்.

    வேலை முடிந்து வீட்டுக்கு வந்த வாலிபர், இளம்பெண் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கோட்டூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் திருமணம் ஆன மறுநாளே எனது மனைவியை அவரது பெற்றோர் கடத்திச் சென்று விட்டதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இளம்பெண்ணையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், தன்னை திருமணம் செய்த வாலிபருடன் வாழ இஷ்டமில்லை என்றும், பெற்றோருடன் செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.

    இளம்பெண்ணின் முடிவை கேட்டு அவரை திருமணம் செய்த வாலிபர் போலீஸ்நிலையத்தில் கண்கலங்கியபடி நின்றார்.

    • போலீசார் சாக்கடை கால்வாயில் இறங்கி, அடைப்புகளை அகற்றி நீர் செல்வதற்கு வழிவகை செய்தனர்.
    • போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

    பீளமேடு,

    கோவையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ராமநாதபுரம் சிக்னல் அருகே ரோட்டில் மழை நீர் குளம் போல தேங்கி இருந்தது.

    அப்போது அங்கு பணியில் இருந்த ராமநாதபுரம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் முருகசாமி ஆகிய 2 பேரும் சேர்ந்து ரோட்டில் தேங்கியிருந்த நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் சாக்கடை கால்வாயில் இறங்கி, அதில் இருந்த அடைப்புகளை அகற்றி நீர் செல்வதற்கு வழிவகை செய்தனர். இதனால் தேங்கிய மழைநீர் வழிந்தோடியது.

    போலீசாரின் இந்த செயலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

    • தாழ்வான இடங்களிலும், குட்டைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்,

    கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏராளமான குளங்கள் நிரம்பி உள்ளன. தாழ்வான இடங்களிலும், குட்டைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இந்தநிலையில் கோவையில் குட்டையில் குளிக்கச் சென்ற மாணவர் ஒருவர் பலியானார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெரிஜோஸ்வான் (வயது 11). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று அந்த பகுதியில் மழை பெய்ததால் ஜெரி ஜோஸ்வான் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்கள் சிலர் அங்குள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றனர். அவர்களுடன் ஜெரிஜோஸ்வானும் சென்றார்.

    குட்டையில் இறங்கி அவர் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தார். ஆழமான பகுதிக்கு சென்ற ஜெரிஜோஸ்வான் நீரில் மூழ்கினார். அவரை மீட்க நண்பர்கள் போராடினர். பின்னர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி தேடினர். அதற்குள் ெஜரிஜோஸ்வான் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாணவரின் உடலை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு அழுதது உருக்குவதாக இருந்தது.

    இதற்கிடையே மழை வெள்ளத்தில் சிக்கிய மற்றொரு நபரை தீயணைப்பு வீரர்கள் 3-வது நாளாக தேடி வருகிறார்கள். கோத்தகிரி சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 18). டிப்ளமோ பட்டதாரி. கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    பெரியநாயக்கன்பாளை யம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம்பாளைம் பகுதியில் வசிக்கும் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதாப் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

    அங்கு ரெயில்வே பாலத்தின் அடியில் சென்ற மழை வெள்ளத்தை கடக்க முயன்றார். அப்போது வெள்ளம் அவரை இழுத்துச் சென்றது. அவரது கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தீயணைப்பு வீரர்கள் இன்று 3-வது நாளாக தேடினர்.

    • யாராவது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டனரா? என போலீசார் விசாரணை.
    • இந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு தினந்தோறும் பல்வேறு குறைகளை தெரிவிப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் வசதிக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ, சிட்டி யூனியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். சென்டர்கள் உள்ளது.

    இந்த ஏ.டி.எம்.களில் பொதுமக்களும், ஊழியர்களும் பணம் எடுத்து சென்று வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல பொதுமக்கள் சிலர் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றனர். அப்போது, ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அருகே இருந்த சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து காணப்பட்டது.

    இதையடுத்து போலீசார், அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிரா மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து 2 ஏ.டி.எம்.களில் கற்களை கொண்டு வீசி கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. யாராவது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டனரா? அல்லது கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கண்ணாடி உடைக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில், ஏ.டி.எம் எந்திரம் பாதுகாப்பாக உள்ளது. அங்கு பணம் கொள்ளை போகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழையின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    இதன் காரணமாக நொய்ய லாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பேரூர் படித்துறையை மூழ்கடித்தபடியும், அங்குள்ள தரைப்பாலத்தை தொட்டபடியும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கோவை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. இதில் நொய்யல் ஆற்றின் மூலம் 25 குளங்கள் தண்ணீரை பெற்று வருகின்றன.

    தற்போது பெய்து வரும் மழையால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக நொய்யல் ஆற்றின் வழியோரம் உள்ள உக்குளம், பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், குறிச்சிக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதில் 23 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதிலும் உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன்குளம், செல்வசிந்தா மணிகுளம் முழுவதும் நிரம்பி விட்டது. அதில் இருந்து உபரி நீர் கால்வா ய்களில் வழிந்தோடியது.

    இதுதவிர சொட்டை யாண்டி குட்டை குளம் 70 சதவீதமும், குறிச்சிக்குளம் 40 சதவீதமும், பேரூர் பெரியகுளம், 15 சதவீதமும், நரசாம்பதி குளம் 90 சதவீதமும் நிரம்பின.

    இதே அளவுக்கு வரும் நாட்களிலும் மழை தொடர்ந்தால் அனைத்து குளங்களும் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கனமழையால் கணுவாய்-பன்னிமடையில் உள்ள தாளியூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் சென்றது.

    இப்பகுதியில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. தடுப்பணை யில் இருந்து சின்னவே டம்பட்டி ஏரிக்கு மழைநீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

    குளங்களையொட்டியும், தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்ல மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நீர்நிலை ஆர்வலர்கள் கூறும்போது, கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் படித்துறையை ஒட்டியவாறு மழைநீர் சென்றது.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தஅளவுக்கு பெய்யவில்லை. தற்போ தைய வடகிழக்கு பருவமழை காலத்தில் நொய்யலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

    தொடர் மழையால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வருவது விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 28-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முகாம் நடக்கிறது.
    • தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கலாம்.

    கோவை,

    கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சுரேந்தர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் குறைதீர்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடக்கிறது.

    கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், பாரதி பார்க் சாலை, வனக்கல்லூரி வளாகம் அருகில், சாய்பாபா காலனி, கோவை.

    திருப்பூரில் சி.ஆர். கார்மெண்ட்ஸ், ஸ்ரீகோகுல கிருஷ்ணா நகர், டி.கே.டி. மில்ஸ் பல்லடம் சாலை, திருப்பூர்.

    நீலகிரியில் ஜே.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோஸ் கார்டன் அருகில் ஊட்டி.

    மேற்கண்ட இடங்களில் நடைபெற உள்ள இம்முகாமில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள். ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கலாம். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கோவை.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

    விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிரு–ப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் பார்த்தீனிய செடி அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொது–மக்களும், கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

    விவசாய நிலத்தில் பார்த்தீனிய செடி வளர்வதால் மஞ்சள், தக்காளி, வாழை, தென்னை போன்ற செடிகள் பாதிக்கப்படுவதோடு, அதனை சாப்பிடும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.

    இதுதவிர பொது–மக்களும் நோய்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவசாய நிலங்களில் நச்சுத்தன்மையுடன் வளரக்கூடிய பார்த்தீனியச் செடியை முழுவதுமாக அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, மாவட்ட விவசாய துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக பருவமழை பெய்து வருகிறது.

    இதனிடையே பில்லூர் அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது. தண்ணீர் வரத்து அதிக ரிப்பால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.

    பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியாகும். மழைக்கு முன்பு பில்லூர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிநீர் வந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்து 89 அடிக்கு தண்ணீர் இருந்தது.

    இன்று மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    பாதுகாப்பு கருதி 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது.

    இதனிடயே மேட்டுப்பாளையம் நகராட்சிட்குட்பட்ட நரிப்பள்ளம் பகுதியில் பவானி ஆற்றில் திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பணியின் போது அங்கிருந்த 3 டிப்பர் லாரிகள் வெள்ள நீரில் சிக்கியது.

    இதனை பொக்கலைன் உதவியுடன் பணியாளர்கள் அப்புறப்படுத்தப்படுத்தினர்.

    • மலைரெயில் பாதையில் 10-க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
    • மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி, கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    கடந்த 3-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழைக்கு அடர்லி, ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மண்சரிவும், மரங்கள் முறிந்ததால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் கடந்த 8-ந் தேதி மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மீண்டும் ரெயில்சேவை தொடங்கியது. ஆனால் அன்று இரவு கொட்டிய கனமழையால் மீண்டும் மண் சரிவு ஏற்படவே கடந்த 9-ந் தேதி முதல்18-ந் தேதி வரை மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மலை ெரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டது.

    கடந்த 21-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் குன்னூர் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மலைரெயில் பாதையில் 10க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவும், பாறைகளும் உருண்டு விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் டிசம்பர் 7-ந் தேதி வரையும், குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் வருகிற 31-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ×