என் மலர்
சென்னை
- அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன.
- 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, புதன், வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன. வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு போட்டால் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாளை (30-ந் தேதி) சென்னையில் இருந்து திருவனந்தபுரம், செங்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.15 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. மறுநாள் பகல் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்றடைகிறது.
அதேபோல 5-ந்தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. விழுப்புரம், அரியலூர், திருச்சி வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு வழி மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை சென்றடைகிறது.
இந்த ரெயில் மயிலாடு துறை, சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.
- கரூர் பெருந்துயரம் இன்னும் என்னை வாட்டுகிறது.
- எந்த அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
* கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
* கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து உடனடியாக வழங்கி உள்ளோம்.
* அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
* பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
* அரசியல் நிலைப்பாடுகளை விலக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும்.
* கரூர் பெருந்துயரம் இன்னும் என்னை வாட்டுகிறது.
* உயிரிழந்தோர் எந்த கட்சியை சார்ந்தவராயினும் என்னை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் உறவுகள்.
* சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் நிலையில் பொறுப்பற்ற முறையில் விஷமமான செய்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
* எந்த அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.
* பெரிய கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
- நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.
- எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உயிரிழந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
கரூர் மாநகரில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. குறிப்பாக உயிர் இழப்புக்கு காரணமான வேலுச்சாமிபுரம் பகுதி ஆறாத சுவடுகளுடன் போர்க்களம் போல் இன்னமும் காட்சியளிக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருவதால், வேலுச்சாமி புரத்தில் தடயங்கள் சேதப்படாமல் இருக்க 60க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார். அதில்,
* கரூர் நிகழ்வைப் போன்ற துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
* இதில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.
* எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன்.
* எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
* அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஒன்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது.
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜயிடம் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார்.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
ஒன்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது. கரூர் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி த.வெ.க. தலைவர் விஜயிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜயிடம் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார். இருவரும் சுமார் 15 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
- பிரசார கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட ரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று மாநிலம் தழுவிய கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
இதேபோல் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
பிரசார கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் செல்கிறார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் கூற உள்ளார்.
- கடந்த 26-ந்தேதி முதல் தங்கம் விலை எகிறத் தொடங்கியுள்ளது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்து உள்ளது.
சென்னை:
தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து இருந்தது. அதன் பின்னர் சற்று விலை குறைய தொடங்கியது. இதனால் மீண்டும் தங்கம் விலை ரூ.84 ஆயிரத்துக்கு வந்தது.
மீண்டும் கடந்த 26-ந்தேதி முதல் தங்கம் விலை எகிறத் தொடங்கியுள்ளது. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,700-க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்து உள்ளது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 160 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400
25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080
24-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-09-2025- ஒரு கிராம் ரூ.159
27-09-2025- ஒரு கிராம் ரூ.159
26-09-2025- ஒரு கிராம் ரூ.153
25-09-2025- ஒரு கிராம் ரூ.150
24-09-2025- ஒரு கிராம் ரூ.150
- சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்மநபர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார்.
- விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு நிபணர்கள் விரைந்து சோதனை நடத்தினர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்மநபர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு வெடிகுண்டு நிபணர்கள் விரைந்து சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதலில் வெடிகுண்டு மிரட்டல் என தெரியவந்துள்ளது.
கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று காலை, தெற்கு ஒரிசாவின் உள் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு திசையில் நகர்ந்து,
இன்று காலை, 08.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேற்கு விதர்பா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், அடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழக்கக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
30-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
28-ந்தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
- மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூரில் நேற்று இரவு நடந்த சம்பவம், மிகவும் வருந்தத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இந்த சம்பவம் நடந்துவிட்டது.
அந்தக் கூட்ட நெரிசலில் பல பேர், தங்களது இன்னுயிரை இழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்.
அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, இந்த கரூர் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் ஒன்று கேட்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும். அவ்வாறு பதில் கொடுத்த பிறகு, அதைப்பற்றி விவரமாக பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
- எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறுவதற்கும், நிதி உதவி வழங்குவதற்கும் எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் அடிப்படையில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீடு வழங்குவதற்காகவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போலீசில் மனு கொடுக்க உள்ளனர்.
- முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது
- அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார்.
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார்.
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.
- சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு தமிழக வெற்றிக்கழகத்தினர் முறையீடு செய்துள்ளனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.
இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி தண்டபாணி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.






