என் மலர்
சென்னை
- மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.
- மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-ஆம் பிறந்தநாளையொட்டி நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் நாள் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும். அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின் ஆசிகளுடன் செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.
மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற வீடியோக்கள் மட்டுமின்றி முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்று கருத்துகளை பதிவிடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையினரை குற்றம் சாட்டியும், குறிப்பிட்ட கட்சி மீது களங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படி அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தலைமை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தியான பதிவுகளை வெளியிட்ட 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியான சகாயம், மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் கட்சி உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான சரத்குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெலிக்சை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர மேலும் 22 பேர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர். இதை மீறி, செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கென்று ஏற்கனவே தனிப்பிரிவு உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
- தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
- வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ஒரு சவரன் ரூ.77 ஆயிரம் என்ற நிலையில் விற்பனையானது. அதன்பிறகு விலை 'கிடுகிடு'வென உயரத் தொடங்கியது. கடந்த 6-ந் தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரம் என்றும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்றும் அதிகரித்து, அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அதுவும் நின்றபாடில்லை. மேலும் விலை அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. அதன்படி கடந்த 9-ந் தேதி ரூ.81 ஆயிரத்தையும், 16-ந் தேதி ரூ.82 ஆயிரத்தையும், 22-ந் தேதி ரூ.83 ஆயிரத்தையும், அதற்கு மறுநாளே ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரத்தையும் கடந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்ற வகையிலேயே பயணித்தது. அதன்பின்னர், அவ்வப்போது லேசான சரிவு இருந்தாலும், ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரம் என்ற இடைப்பட்ட அளவிலேயே ஆட்டம் காட்டியது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் விறுவிறுவென விலை ஏற்றம் கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்தது. அப்படியாக நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது. இந்த மாதத்தில் மட்டும், அதாவது கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.1,065-ம், சவரனுக்கு ரூ.8,520-ம் உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மாத இறுதி நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160
28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400
25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-09-2025- ஒரு கிராம் ரூ.160
28-09-2025- ஒரு கிராம் ரூ.159
27-09-2025- ஒரு கிராம் ரூ.159
26-09-2025- ஒரு கிராம் ரூ.153
25-09-2025- ஒரு கிராம் ரூ.150
- செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த பருவமழை முற்றிலும் நீங்க, அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை காலம் எடுத்துக் கொண்டாலும், செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய மொத்த மழை என்பது 32.8 செ.மீ. ஆகும். இது இயல்பான மழை அளவு. அதன்படி, கடந்த ஜூன் 1-ந்தேதியில் இருந்து நேற்று வரையிலான (செப்டம்பர் 29-ந்தேதி) நிலவரப்படி, 32.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதாவது இயல்பைவிட ஒரு சதவீதம் அதிகமாக மழை கிடைத்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 250 சதவீதம் அதிகம் மழை பெய்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் அங்கு 8.9 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் 31.3 செ.மீ. மழை பெய்திருந்தது. கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்தபடியாக, தென்காசி மாவட்டத்தில் 55 சதவீதமும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 79 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 46 சதவீதமும், கோவை மாவட்டத்தில் 39 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர, அரியலூர் (+6 சதவீதம்), சென்னை (+30 சதவீதம்), கடலூர் (+14 சதவீதம்), நீலகிரி (+13 சதவீதம்), சிவகங்கை (+4 சதவீதம்), தஞ்சாவூர் (+7 சதவீதம்), தேனி (+10 சதவீதம்),
திருப்பத்தூர் (+21 சதவீதம்), திருவள்ளூர் (+33 சதவீதம்), திருவண்ணாமலை (+9 சதவீதம்), திருவாரூர் (+9 சதவீதம்), வேலூர் (+36 சதவீதம்), விழுப்புரம் (+18 சதவீதம்) மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பெய்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு (-7 சதவீதம்), தர்மபுரி (-21 சதவீதம்), திண்டுக்கல் (-41 சதவீதம்), ஈரோடு (-26 சதவீதம்), கள்ளக்குறிச்சி (-31 சதவீதம்), காஞ்சீபுரம் (-3 சதவீதம்), கன்னியாகுமரி (-1 சதவீதம்), கரூர் (-35 சதவீதம்), கிருஷ்ணகிரி (-17 சதவீதம்), மதுரை (-24 சதவீதம்), நாகப்பட்டினம் (-22 சதவீதம்), நாமக்கல் (-31 சதவீதம்), பெரம்பலூர் (-2 சதவீதம்), புதுக்கோட்டை (-6 சதவீதம்), ராமநாதபுரம் (-48 சதவீதம்), சேலம் (-15 சதவீதம்),
திருப்பூர் (-59 சதவீதம்), தூத்துக்குடி (-62 சதவீதம்), திருச்சி (-26 சதவீதம்), விருதுநகர் (-46 சதவீதம்) ஆகிய 20 மாவட்டங்களில் குறைவான மழை பதிவாகியிருக்கிறது. தமிழ்நாட்டைத் தவிர, புதுச்சேரியில் 51 சதவீதமும், காரைக்காலில் 32 சதவீதமும் அதிகமாக இந்த பருவமழையில் மழை பெய்துள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழையை காட்டிலும், வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழையை பெறும். அடுத்த மாதம் (அக்டோபர்) 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
- இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
- அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும்.
சென்னை:
மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் வீணாகாது என்பார்கள். அதனை மெய்யாக்கும் வகையில் தங்கத்தின் விலை விண்ணை முட்டி சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் தற்போது 890 டன் அளவு தங்கம் கையிருப்பு இருக்கிறது. அதேபோல இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும். உலகிலேயே அதிக மக்கள் தங்கம் வைத்திருக்கும் நாடுகள் எது என்றால் அது இந்தியாதான். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஐசிஇ-360 என்ற சர்வேயில் இந்தியாவில் 87 சதவீத வீடுகளில் தங்கம் இருக்கிறது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த சமயத்தில் ஒரு வீட்டில் 10 கிராமம் 22 காரட் தங்கம் இருந்திருந்தால், அதன் அன்றைய மதிப்பு வெறும் ரூ.28 ஆயிரத்து 560 தான். ஆனால் இன்றைய அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 700 ஆகும்.
இதுகுறித்து தங்க கவுன்சில் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்தியாவில் 2021-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 62 சதவீத குடும்பங்கள் தொடக்கநிலை நடுத்தர குடும்பங்கள். அதாவது ஏழைகளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். எனவே இவர்களது வீடுகளில் குறைந்தது ஒரு பவுன் தங்கம் என்ற அளவிலாவது இருக்கும்.
அந்த அடிப்படையில் இந்த 62 சதவீத குடும்பங்களும் லட்சாதிபதி என்ற நிலையை எட்டி உள்ளனர். அதேபோல் 125 பவுன், அதாவது 1,000 கிராம் தங்கம் வைத்திருந்த லட்சாதிபதி குடும்பங்கள் எல்லாம் இப்போது கோடீஸ்வர குடும்பங்களாக உயர்ந்துள்ளனர். மேலும் ஏழை குடும்பங்களில் காதில் போட்டிருக்கும் கம்மல், தோடு என்ற சிறிய தங்க நகை ஆபரணமாக இருந்தாலும், அவர்களுக்கு அதன் மூலம் நல்ல லாபம் கிடைத்து இருக்கிறது. தங்கம் விலை உயர்வு ஏழைகளை லட்சாதிபதிகள் ஆகவும், லட்சாதிபதிகளை கோடீசுவரர்களாகவும் மாற்றி இருக்கிறது என்றனர்.
தங்கம் என்பது வெறும் உலோகம் மட்டுமல்ல. அது இந்திய குடும்பங்களின் உறுதியான நம்பிக்கை, மரபின் அடையாளம், எதிர்கால பாதுகாப்பு ஆகும். எனவே எவ்வளவு விலை தங்கம் வந்தாலும், நமது கலாசார நிகழ்வுகளுடன் அது தொடர்பில் இருப்பதால் விற்பனை குறையாது என்பது மட்டும் உறுதி.
- கைதானவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
- போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணி ஒருவர், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் சாதாரண உடையில் வந்திருந்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்து கொண்டு இருந்தனர்.
அப்போது 35 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு சென்றுவிட்டு, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அந்த வாலிபரை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். அவரது உடைமைகளையும் பரிசோதித்தனர். அதில் 3.5 கிலோ கொகைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என கூறப்படுகிறது.
போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
கைதான அவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் கடத்தி வந்த போதைப்பொருளை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்ததும் தெரிந்தது.
இதுபற்றி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மக்கள் துயரத்தில் இருக்கும்போது உங்கள் போட்டோஷூட்டால் மேலும் துன்புறுத்தாதீர்கள்.
- மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி!
நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.
அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே...
என்ன அவதூறு பரவியது?
-உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா?
-உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா?
பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன?
உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா?
அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா?
கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா?
சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டுகளித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் அவர்களே?
எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது!
இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது.
மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்!
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று காலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்தது.
- மாலை 560 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,700-க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வழக்கமாக காலையில் ஒருமுறை தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். ஆனால் இன்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
காலையில் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் 70 ரூபாய் உயர்ந்தது. இன்று ஒரேநாளில் கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 1040 ரூபாய் உயர்ந்து 86,160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 10770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுறது.
முன்னதாக,
தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து இருந்தது. அதன் பின்னர் சற்று விலை குறைய தொடங்கியது. இதனால் தங்கம் விலை ரூ.84 ஆயிரத்துக்கு சரிந்தது.
ஆனால், மீண்டும் கடந்த 26-ந்தேதி முதல் தங்கம் விலை எகிறத் தொடங்கியுள்ளது. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம்.
- தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் தரலாம். அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன் என கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மரியாதைக்குரிய அண்ணன் ராமதாஸ் அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல "எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!". தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.
வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன் என கூறினார்.
- ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- சுற்றுப்பயணத் திட்டம் அக்.2, 3, மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில், 29, 30, மற்றும் 4-ந்தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே அக்.2, 3, மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
வரும் 2-ந்தேதி தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தருமபுரி அரூர்,
3-ந்தேதி தருமபுரி, பாலக்கோடு பென்னாகரம்,
6 -ந்தேதி நாமக்கல், நாமக்கல் பரமத்தி வேலூர்.
ஏற்கெனவே 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் நடைபெறுவதாக அறிவித்திருந்த பிரசாரக் கூட்டம், அதே தேதியில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன.
- 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, புதன், வியாழக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன. வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு போட்டால் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாளை (30-ந் தேதி) சென்னையில் இருந்து திருவனந்தபுரம், செங்கோட்டை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.15 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. மறுநாள் பகல் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்றடைகிறது.
அதேபோல 5-ந்தேதி திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் எழும்பூர் வந்தடைகிறது. இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. விழுப்புரம், அரியலூர், திருச்சி வழியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு வழி மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை சென்றடைகிறது.
இந்த ரெயில் மயிலாடு துறை, சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த 3 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.
- கரூர் பெருந்துயரம் இன்னும் என்னை வாட்டுகிறது.
- எந்த அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
* கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
* கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து உடனடியாக வழங்கி உள்ளோம்.
* அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
* பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
* அரசியல் நிலைப்பாடுகளை விலக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும்.
* கரூர் பெருந்துயரம் இன்னும் என்னை வாட்டுகிறது.
* உயிரிழந்தோர் எந்த கட்சியை சார்ந்தவராயினும் என்னை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் உறவுகள்.
* சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கும் நிலையில் பொறுப்பற்ற முறையில் விஷமமான செய்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
* எந்த அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.
* பெரிய கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.






