என் மலர்
செங்கல்பட்டு
+2
- குடிநீருக்காக விநாயகபுரம் பகுதியில் உள்ள சுடுகாடு ஒட்டியபடி போர்வெல் அமைக்கப்பட்டது.
- பலர் மெயின் பைப் லைனில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்கின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 4-வது வார்டுக்கு உட்பட்ட விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு மற்றும் ஊமை மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்வதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விநாயகபுரம் பகுதியில் உள்ள சுடுகாடு ஒட்டியபடி போர்வெல் அமைக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் மின் மீட்டர் அமைப்பதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் குடிநீர் நீரேற்றப்படும் செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள குடிநீர் கிணற்றிலிருந்து விநாயகபுரம் பகுதி வழியாக வரும் வழியில் பலர் மெயின் பைப் லைனில் மின் மோட்டார் பொருத்தி அவரவர் வீடுகளில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி, சம்ப் மற்றும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் விநாயகபுரம் பகுதியில் உள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் சரிவர நீர் ஏற்ற முடிவதில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம், வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது.
- விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் என்பது தெரிந்தது.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்குள்ள பாதிரியாரின் அறையில் இருந்த மாதா சிலை கண்ணாடி பெட்டியை உடைத்து தங்க சிலுவை, நகை திருடு போனது. இது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது தேவாலயத்துக்கு வந்த வாலிபர் ஒருவர் காணிக்கை செலுத்திவிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் (23) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
- கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.
- முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர்:
சித்தாலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர், மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து விட்டு காரில் வந்து கொண்டு இருந்தார்.
கேளம்பாக்கம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண்ணை இடித்து விட்டதாக கூறி ராஜ லிங்கத்தை தாக்கி காரின் சாவியை பறித்தனர். மேலும் கார் சாவியை போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் செய்வது அறியாமல் திகைத்த ராஜலிங்கம் அங்கிருந்து சென்றார்.
சிறிது நேரத்தில் அங்கு மீண்டும் வந்த தம்பதியினர் காரை திருடி தப்பி சென்றுவிட்டனர். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜலிங்கம் இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில் கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.
முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓட முயன்றபோது வலது கைமுறிந்தது. சங்கீதாவையும் போலீசார் கைது செய்தனர். திருடிய காரை அவர்கள் குறைந்த விலைக்கு விற்று இருப்பதும் தெரியவந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஊரப்பாக்கம் ஊராட்சி தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கொண்டாடப்பட்டது.
- மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேட் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.
வண்டலூர்:
ஊரப்பாக்கம் ஊராட்சி தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கொண்டாடப்பட்டது. கிளாம்பாக்கம் தி.மு.க. கிளை செயலாளர் சி.ஜே.கார்த்தி தலைமையில் நடந்த விழாவுக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வன், மோகனாகண்ணன், பி.எஸ்.மலைராஜா, ஜே.கே.தினேஷ், ஒன்றிய துணை செயலாளர் பிரதீபாஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேட் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். பின்னர் 1000 பெண்களுக்கு சேலை மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.
இதில் கிளை செயலாளர்கள் மெய்யழகன், சாய்ராம், முருகன், வாசு, கமலநாதன், புஷ்பராஜ், சண்முகம், ரமாதேவி, எஸ்.எம்.சேகர், இன்பசேகர், டெக்ஸ்பாபு, கிறிஸ்டோபர், தமிழ்ச்செல்வன், வார்டு உறுப்பி னர்கள் மலர்தனசேகரன், மஞ்சுளா புஷ்பராஜ், தமிழ்செல்வம், தேவிநேரு, சாந்திகார்த்தி, பார்த்திபன், கலைவாணி வினோத் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் 3-வது சேதுமாதவன், விளம்பர செய்தி இளைஞரணி அமைப்பாளர் சி.ஜெ.ராஜா நன்றி கூறினார்.
- பல இடங்களில் போலியாக செல்போன் எண்ணும், முகவரியும் கொடுத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்து உள்ளது.
- மோசடியில் ஈடுபட்டவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு வந்த டிப்-டாப் வாலிபர் ஒருவர் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான டி.வி. வாங்கினார். பின்னர் பணத்தை கூகுள் பே மூலம் ஆன்லைனில் செலுத்துவதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து கடை ஊழியர்கள் தங்களது கடையின் கியூ ஆர் கோடை காண்பித்து பணம் செலுத்த கூறினர். அப்போது ரூ.45 ஆயிரம் செலுத்திவிட்டதாக கடை ஊழியர்களிடம் செல்போனில் உள்ள குறுஞ்செய்தியை காண்பித்து டி.வி.யை அங்கிருந்து வாங்கிச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து கடையின் வங்கி கணக்கை சரிபார்த்த போது டிப்-டாப் வாலிபர் பணத்தை அனுப்பாமல் நூதன முறையில் மோசடி செய்து டி.வி.யை எடுத்து சென்று இருப்பது தெரிந்தது.
கடையில் அவர் கொடுத்த தகவலில் நங்கநல்லூரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்று முகவரி கொடுத்து இருந்தார். மேலும்அவர் கொடுத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது வேறு ஒரு பெண் பேசினார். அந்த வாலிபர் வேறு ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்து சென்று இருப்பதும் தெரிந்தது.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வுசெய்து விசாரித்து வருகிறார்கள். அந்த வாலிபர் இதேபோல் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ. 26 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை சுருட்டி சென்று உள்ளார். அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று ஏ.சி வாங்க முயன்றபோது வங்கி கணக்கில் பணம் வந்த பின்னர் பொருளை கொடுப்போம் என்று ஊழியர்கள் கூறியதால் அங்கிருந்து தப்பி உள்ளார்.
அந்த வாலிபர் இதேபோல் பல இடங்களில் போலியாக செல்போன் எண்ணும், முகவரியும் கொடுத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்து உள்ளது. அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிறந்தநாள் விழாவிற்கு கிளாம்பாக்கம் திமுக கிளை செயலாளர் சி.ஜே.கார்த்தி தலைமை தாங்கினார்.
- 70 கிலோ எடைகொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயன்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊரப்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிளாம்பாக்கம் திமுக கிளை செயலாளர் சி.ஜே.கார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான் தினகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வன், மோகனாகண்ணன், பி.எஸ்.மலைராஜா, ஜே.கே.தினேஷ், ஒன்றிய துணை செயலாளர் பிரதீபா ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 70 கிலோ எடைகொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். பின்னர் 700-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் 1000 பேருக்கு புடவை மற்றும் பிரியாணி ஆகியவற்றை வழங்கினர்.
இதில் கிளை செயலாளர்கள் மெய்யழகன், சாய்ராம், முருகன், வாசு, கமலநாதன், புஷ்பராஜ், சண்முகம், ரமாதேவி, எஸ்.எம்.சேகர், இன்பசேகர், டெக்ஸ்பாபு, கிறிஸ்டோபர், தமிழ்ச்செல்வன், வார்டு உறுப்பினர்கள் மலர் தனசேகரன், மஞ்சுளா புஷ்பராஜ், தமிழ்செல்வம், தேவி நேரு, சாந்தி கார்த்தி, பார்த்திபன், கலைவாணி வினோத் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் 3-வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் சி.ஜெ.ராஜா நன்றி கூறினார்.
- இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.
- முன்னாள் எம்.எல்.ஏ தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பொது சேவை மையம் இணைந்து மத்திய அரசின் "ஸ்வச்தா பக்கவாடா" திட்டத்தின்கீழ் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 500லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநிர் சுத்திகரிப்பு இயந்திரங்களை அமைத்து அதன் மூலம் சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வகையில் புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் மீனவர் பகுதியில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் கலந்துகொண்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ தனபால், முன்னாள் ஊராட்சி தலைவர் கலியபெருமாள், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த பருவமழையின் போது நவம்பர், டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
- விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வண்டலூர்:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
சுமார் 90 ஏக்கர் நிலத்தில் ரூ.394 கோடி செலவில் பிரமாண்டமாக இந்த பஸ் நிலையம் அமைகிறது. வெளியூர்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் என 300 பஸ்களை இயக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம், கடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தை இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய பஸ்நிலையம் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் கடந்த மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகள் இன்னும் முடியாததால் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறப்பு தாமதமாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
கடந்த பருவமழையின் போது நவம்பர், டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. எனவே விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பஸ்நிலைய முக்கிய கட்டிடத்தில் உள்ள குவிமாட பணிகள் 80 சதவீதம் முடிந்து இருந்தது. தற்போது இது முடியும் தருவாயில் உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் மட்டும் விரைவில் தொடங்கும்.
பஸ் நிலையத்தில் தொலைதூர பஸ்கள், மாநகர பஸ்கள் வந்து செல்ல தனித்தனி நுழைவு வாயில்கள் இருக்கும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.
- வழக்கு விசாரணை செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
செங்கல்பட்டு:
மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது27). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானது.
இதையடுத்து நீதிபதி தமிழரசி அளித்த தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலாஜிக்கு 10ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிகிதா மீது மோதியது.
- ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மாணவி நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாம்பரம்:
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிகிதா (வயது19).கிழக்கு தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நிகிதாவுக்கு மழலையர் பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி கிடைத்தது. இதையடுத்து அவர் முதல் நாளான இன்று காலை பணிக்காக இரும்புலியூர் அருகே செல்போன் பேசியபடி, ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நிகிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மாணவி நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30 வருடங்களுக்கு மேலாக மனோகரன் மதுவுக்கு அடிமையாகி இருந்தார்.
- அனைவரும் மதுப்பழக்கத்தில் இருந்து திருந்த வேண்டும்.
செங்கல்பட்டு :
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி 4 மகன்கள் உள்ளனர். அவர் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகி்றார்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மனோகரன் மதுவுக்கு அடிமையாகி இருந்ததும், அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே அழித்தார். இந்த நிலையில் கடந்த வருடம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவலைப்பட்ட மனோகரன் குடியை நிறுத்த முடிவு எடுத்தார்.
மனோகரன் டைரி ஒன்றை எடுத்து அதில் தான் இறுதியாக குடித்த நாளை குறித்து வைத்துள்ளார். தொடர்ச்சியாக குடிக்காமல் சுமார் ஒரு வருட காலம் வரை இருந்து வந்துள்ளார். அவ்வப்போது மது குடிக்கும் எண்ணம் தோன்றினால் டீ குடிப்பது, விரும்பிய உணவை சாப்பிடுவது உள்ளிட்டவற்றை செய்ததாக தெரிவித்து இருக்கிறார்.
தான் திருந்தியது போல் அனைவரும் மதுப்பழக்கத்தில் இருந்து திருந்த வேண்டும் என்கிற நோக்கத்தில் குடியை மறந்து முதலாம் ஆண்டு தினம் என போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி இருக்கிறார்.
அவரது இந்த செயல் அந்த பகுதியில் மட்டும் அல்லாது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
- வாலிபர் ஒருவர், மூதாட்டி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சரோஜா (வயது 60). இவர் மதுராந்தகம் அடுத்த சிறுகளத்தூர் பகுதியில், உறவினரின், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து சோத்துப்பாக்கம் செல்வதற்காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் பகுதி அய்யனார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு செல்போனில் பேசிக் கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க, வாலிபர் ஒருவர், மூதாட்டி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இது குறித்து சரோஜா அளித்த புகாரின் அடிப்படையில், மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மதுராந்தகம் உட்கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.






