என் மலர்
உள்ளூர் செய்திகள்

டி.வி.விற்பனை கடையில் வாலிபர் நூதன மோசடி- ஆன்லைனில் பணம் அனுப்பியதாக ஏமாற்றி எடுத்து சென்றார்
- பல இடங்களில் போலியாக செல்போன் எண்ணும், முகவரியும் கொடுத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்து உள்ளது.
- மோசடியில் ஈடுபட்டவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு வந்த டிப்-டாப் வாலிபர் ஒருவர் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான டி.வி. வாங்கினார். பின்னர் பணத்தை கூகுள் பே மூலம் ஆன்லைனில் செலுத்துவதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து கடை ஊழியர்கள் தங்களது கடையின் கியூ ஆர் கோடை காண்பித்து பணம் செலுத்த கூறினர். அப்போது ரூ.45 ஆயிரம் செலுத்திவிட்டதாக கடை ஊழியர்களிடம் செல்போனில் உள்ள குறுஞ்செய்தியை காண்பித்து டி.வி.யை அங்கிருந்து வாங்கிச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து கடையின் வங்கி கணக்கை சரிபார்த்த போது டிப்-டாப் வாலிபர் பணத்தை அனுப்பாமல் நூதன முறையில் மோசடி செய்து டி.வி.யை எடுத்து சென்று இருப்பது தெரிந்தது.
கடையில் அவர் கொடுத்த தகவலில் நங்கநல்லூரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்று முகவரி கொடுத்து இருந்தார். மேலும்அவர் கொடுத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது வேறு ஒரு பெண் பேசினார். அந்த வாலிபர் வேறு ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்து சென்று இருப்பதும் தெரிந்தது.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வுசெய்து விசாரித்து வருகிறார்கள். அந்த வாலிபர் இதேபோல் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ. 26 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை சுருட்டி சென்று உள்ளார். அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று ஏ.சி வாங்க முயன்றபோது வங்கி கணக்கில் பணம் வந்த பின்னர் பொருளை கொடுப்போம் என்று ஊழியர்கள் கூறியதால் அங்கிருந்து தப்பி உள்ளார்.
அந்த வாலிபர் இதேபோல் பல இடங்களில் போலியாக செல்போன் எண்ணும், முகவரியும் கொடுத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்து உள்ளது. அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






