என் மலர்
செங்கல்பட்டு
- சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு சாலை ஓரத்தில் மண் குவியல் காணப்படுகிறது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் சாலையே தெரியாத அளவுக்கு மணல் படர்ந்து உள்ளது.
வண்டலூர்:
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி ஓ.எம்.ஆர் சாலையான கேளம்பாக்கம் சாலை வரை 18 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையில் வண்டலூர் அருகே உள்ள நல்லம்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் சாலையில் அதிக அளவில் மணல் குவிந்து காணப்படுகிறது.
சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு சாலை ஓரத்தில் மண் குவியல் காணப்படுகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் சாலையே தெரியாத அளவுக்கு மணல் படர்ந்து உள்ளது. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்களால் மணல் தூசி சாலையே தெரியாத அளவுக்கு எழுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஒருவர் டில்லி. மற்றொருவர் டில்லிபாபு என பெயர் மட்டுமே வித்தியாசம்.
- ஒரே பெயர், பிறந்த தேதியால் இந்த குளறுபடி நடந்திருக்கலாம் என தெரிகிறது.
மாமல்லபுரம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் டில்லி (வயது 41). இவர், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை செய்து வருகிறார். இவர், 2019-ம் ஆண்டு தன்னுடைய மாத சம்பளம் மற்றும் வங்கி தேவைக்காக பான் கார்டுக்கு விண்ணப்பித்து பான் எண் பெற்றார். இவர் திருக்கழுக்குன்றம் ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். வங்கி கணக்குடன் ஏற்கனவே பான் எண்ணை இணைத்துள்ளார்.
இந்த நிலையில் டில்லி ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் போன்றவற்றில் உள்ள எழுத்து வித்தியாசத்தை சரி செய்யவும், வங்கி கணக்கு எண்ணில் செல்போன் எண்ணை மாற்றவும், தற்போது வங்கியில் கடிதம் மூலம் விண்ணப்பித்து இருந்தார். அவரது பான் எண் பிழையாக உள்ளதாக வங்கி இணையதள சர்வர் காட்டுவதாக வங்கி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பிழை குறித்து மேலும் விசாரித்தபோது அவரது பெயரையே கொண்டுள்ள வேறு நபருக்கும் அதே பான் எண் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவித்துள்ளனர். வங்கி தரப்பினர் வேறு நபரின் செல்போன் எண்ணை தெரிந்து அவரிடம் இது குறித்து விசாரித்தனர்.
இதில் அவர் திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தபால் துறை ஊழியரான டில்லிபாபு (21) என்பது தெரிய வந்தது. ஒருவர் டில்லி. மற்றொருவர் டில்லிபாபு என பெயர் மட்டுமே வித்தியாசம். இருவரது தந்தை பெயரும் ஒரே பெயர், இருவரும் ஒரே நாளில் பிறந்துள்ளனர். கல்வித்துறை ஊழியர் டில்லி பான் எண் பெறும் முன்பே, கடந்த 2008-ம் ஆண்டு டில்லிபாபுவுக்கு பான் எண் வழங்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகள் கடந்து டில்லிக்கும் அதே பான் எண் அளிக்கப்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.
இதையடுத்து கல்வித்துறை பணியாளர் டில்லி, வருமான வரித்துறை பணியாளர்களின் அலட்சியபோக்கால் இப்படி ஒரே பான் எண் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு உடனடியாக வேறு பான் எண் வழங்கக்கோரி இ.மெயில் மூலம் வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கற்பகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராஜீ தெருவை சேர்ந்தவர் கற்பகவள்ளி (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவரது வயிற்றில் கட்டி இருந்ததாகவும், இதனால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கற்பகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- டிரான்ஸ்பார்மருக்கு வரும் கேபிள் வயர்கள் வெடித்து சிதறின.
- செம்மஞ்சேரி மின்வாரிய அலுவலக ஊழியர்கள் விரைந்து வந்து மின் வினியோகத்தை துண்டித்தனர்.
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஜவகர் நகர், எழில்முக நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள எழில்முக நகர் பகுதி 4-வது தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. டிரான்ஸ்பார்மருக்கு வரும் கேபிள் வயர்கள் வெடித்து சிதறின. இதனால அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செம்மஞ்சேரி மின்வாரிய அலுவலக ஊழியர்கள் விரைந்து வந்து மின் வினியோகத்தை துண்டித்தனர். நேற்று காலை 11 மணிக்கு மேல் டிரான்ஸ்பார்மர் மற்றும் எரிந்த மின்வயர்கள் சரிசெய்யப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று பகல் 1 மணி வரை ஜவகர் நகர் 5 தெருக்கள் மற்றும் எழில் முகநகரில் 4 தெருக்களில் மின் வினியோகம் வழங்கப்படாததால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
- கோபிநாத் தற்கொலை செய்து இருப்பது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோபிநாத்தின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மடிப்பாக்கம் அடுத்து கீழ்கட்டளை, திருவள்ளுவர் நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் பண்டரிநாதன். இவரது மனைவி பிரேமலதா.இவர் தாம்பரம் மாநகராட்சியில் 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் கோபிநாத்(வயது28) பி.இ. பட்டதாரி.
நேற்று இரவு செல்போனில் நண்பர்களிடம் பேசி விட்டு வருவதாக கூறிவிட்டு கோபிநாத் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் கீழே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பிரேமலதா மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள மின் விசிறியில் மகன் கோபிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு குரோம்பேடடை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கோபிநாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோபிநாத்தின் அறையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை என எழுதி வைத்து உள்ளார்.
கோபிநாத்திற்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கோபிநாத் தற்கொலை செய்து இருப்பது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோபிநாத்தின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என கத்தியை காட்டியும் மிரட்டியுள்ளார்.
- தப்பி ஓடிய மணிகண்டன் அப்பகுதி சவுக்கு காட்டில் பதுங்கி இருந்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த காதர் மனைவி சரளா, வயது 55. நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தர்காவில் தங்கியிருந்தபோது மாமல்லபுரம் அடுத்த புது கல்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் வயது 21, இவர் சரளாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என கத்தியை காட்டியும் மிரட்டியுள்ளார்.
சரளாவின் சத்தம் கேட்டு தர்காவில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். தப்பி ஓடிய மணிகண்டன் அப்பகுதி சவுக்கு காட்டில் பதுங்கி இருந்தார். அவரை பிடித்து மாமல்லபுரம் போலீசாரிடம் ஒப்படைந்தனர். போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் மங்கலம் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரின் மனைவி நிஷா, வயது.33, கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயது மகன் உள்ளார். திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வினோத் குமாருக்கு ஆன்லைன் மூலம் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
- சூதாட்டத்துக்காகவும் மற்றும் குடும்ப செலவுக்காகவும் வினோத் குமார் இணையதளங்களில் உள்ள ஆப்கள் மூலம் சுமார் 20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.
தாம்பரம்:
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதால் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வந்தனர்.
இதையடுத்து தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த கணபதிபுரம் கோபால் தெரு மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 37). இவர் பி.பார்ம் படித்துவிட்டு மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், பிரணவ், தர்ஷன் என 2 மகன்களும் உள்ளனர். மேலும் வீட்டில் தாயார் தமிழ்செல்வியும் வசித்து வருகிறார். வினோத்குமாரின் மனைவி லதா தாம்பரத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
வினோத் குமாருக்கு ஆன்லைன் மூலம் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சூதாட்டத்துக்காகவும் மற்றும் குடும்ப செலவுக்காகவும் இணைய தளங்களில் உள்ள ஆப்கள் மூலம் சுமார் 20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடன் கொடுத்த தனியார் ஆப் நிறுவனங்கள் தொடர்ந்து கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தி நெருக்கடி கொடுத்து வந்தது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே வினோத்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை வீட்டில் இருந்த வினோத்குமார் தனது தாயார் தமிழ்செல்வியை அழைத்து தனக்கு தூக்கம் வருவதாகவும், அதனால் தான் தூங்கச் செல்வதாகவும் குழந்தைகளை கடைக்கு அழைத்து சென்று தின்பண்டம் வாங்கி கொடுக்கும்படி கூறினார்.
குழந்தைகளுடன் தாயார் வெளியே சென்ற போது வினோத்குமார் அறைக்கு சென்று புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த லதா தனது கணவர் இருந்த அறைக்கு செல்வதற்காக திறந்த போது மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது
இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார் பிணத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 300 இருளர்களில் ஒருவர் கூட மாநில, மத்திய அரசு பணியில் இல்லை என தெரிகிறது.
- படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பிரதிநிதிகளை என்னிடம் பேச சொல்லுங்கள்.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பாக பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரின் வீட்டுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று அவர்களுக்கு வாழ்த்து கூறினார். அவர்கள் இருவரும் அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் போது எடுத்த புகைப்படங்களை அவர் பார்வையிட்டார்.
பின்னர் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
நான் இங்கு வந்தது உங்களை புரிந்து கொள்ளவும், உங்கள் பிரசனைகளை தெரிந்து கொள்வதற்காகவும்தான், இருவருக்கும் வெகு விரைவில் ஜனாதிபதி பத்மஸ்ரீ விருதை வழங்க உள்ளார்.
பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. இருளர் பழங்குடியின மக்கள் தொன்று தொட்டு பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இருளர் பழங்குடியின மக்களை பற்றி ஒருவரும் பேசுவதில்லை. இது வருந்தத்தக்க விஷயம். இந்தியாவில் பல இடங்களில் பாம்பு கடி பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்களால்தான் அந்த மருந்து தயாரிக்கப்படுகிறது என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அது வருந்தத்தக்கது. இதனை ஒரு தொழிலாக பாவித்து அதனை அங்கீகரிக்க வேண்டும். இருளர்கள் பாம்பு பிடித்து மனித உயிர்களை காப்பாற்றுகின்றனர்.
நாம் இவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவித்தால் போதாது. அவர்களுக்கான மரியாதையை பெற்று தர வேண்டும். இருளர்களுக்கு டாக்டர்களுக்கு தரும் மரியாதையை வழங்க வேண்டும். சில தொழில்நுட்பங்களை பாம்பு பிடி தொழிலில் கொண்டு வர வேண்டும். டாக்டர்கள் பல்வேறு அங்கீகாரத்துடன் வசதியாக வாழ்கின்றனர். ஆனால் இருளர் இன மக்கள் வறுமையில் வாடுகின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் பல திட்டங்களை இருளர் இன மக்களுக்காக செய்துள்ளன. அவர்களில் ஒரு சிலர் முன்னேறி இருந்தாலும், பலர் வறுமையில் வாடுகின்றனர்.
ஒரு இருளர் காலனி என்பது மற்ற இடங்களை போல தார் சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற வேண்டும்.
இங்குள்ள 300 இருளர்களில் ஒருவர் கூட மாநில, மத்திய அரசு பணியில் இல்லை என தெரிகிறது. படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பிரதிநிதிகளை என்னிடம் பேச சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்து தருகிறேன். மாசி சடையன், வடிவேல் கோபால் அவர்களின் வீட்டுக்கு சென்றேன். என்னை மிகுந்த அன்போடு வரவேற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சி முடிந்த பின்பு, சென்னேரி அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்று அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் மாணவர்கள் படித்து எதிர்காலத்தில் எந்த வேலைக்கு போக போகிறீர்கள் எனவும் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+2
- வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை திருமணம் செய்து மாடம்பாக்கம் பகுதியில் குடியமர்த்தி வைத்தார்.
- நண்பரின் வீட்டில் குழந்தை இல்லாததால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வருண் (20). இவரும் மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (20). என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆனதால் வருண் தனது வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை திருமணம் செய்து மாடம்பாக்கம் பகுதியில் குடியமர்த்தி வைத்தார். இவர்களுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுவரை வீட்டிற்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் விஜயலட்சுமி வருணின் வீட்டிற்கு தன்னையும், குழந்தையையும் அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து வருண் பெற்றோரிடம் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், 4 மாதத்தில் ஆண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வருணிடம், விஜயலட்சுமியையும் குழந்தையையும் எங்கேயாவது விட்டுவிட்டு வருமாறு கூறியுள்ளனர். இதனால் விஜயலட்சுமியிடம் இருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தையை வாங்கிய வருண், தனது நண்பருக்கு குழந்தை இல்லாததால் அவரது வீட்டில் குழந்தை வளரட்டும் என கூறியுள்ளார்.
ஆனால், குழந்தையை கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூர் சுடுகாட்டிற்கு எடுத்து வந்த வருண், குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று புதைந்துள்ளார்.
நீண்ட நாட்களாக குழந்தையை பார்க்க வேண்டும் என விஜயலட்சுமி கூறிய நிலையில் வருணின் நண்பர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு குழந்தை இல்லாததால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வருணை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையை கொன்று புதைத்தது தெரிய வந்தது.
தொடர்ந்து பெருமாட்டு நல்லூர் சுடுகாடு அருகே புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் எலும்புக் கூடுகளை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை மணலியில் இருந்து ஈரோட்டுக்கு தின்னர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது.
- பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு:
வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் வினோபாரதி (வயது 37) திருமணமானவர். இவர் தலைவாசலில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மணிரத்தினம் (31) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று இரவு அவர்கள் இருவரும் தொழில் சம்பந்தமாக சென்னைக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை மணிரத்தினம் ஓட்டினார்.
இரவு 10 மணியளவில் கார், படாளம் தபால்மேடு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர்திசையில் சென்றது.
அந்த நேரத்தில் சென்னை மணலியில் இருந்து ஈரோட்டுக்கு தின்னர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய வினோ பாரதியும் மணிரத்தினமும் இருக்கையில் அமர்ந்த நிலையில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாகனம் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன சட்டப்படி பதிவுசான்று ரத்து செய்யப்படும்.
- சொந்த பயன்பாட்டு வாகனம் வாடகைக்காக இயக்கப்படுவதாக பல புகார்கள் வருகின்றன.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அதிகாரி விடுத்துள்ள செய்தி குறிப்பில், 'சொந்த பயன்பாட்டு வாகனம் வாடகைக்காக இயக்கப்படுவதாக பல புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் மற்றும் சாலை வரியாக ரூ.13,000 வசூலிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் மேற்கண்ட புகார்கள் தொடர்பாக சொந்த பயன்பாட்டு வாகனம் வாடகைக்காக அனுமதிக்கு புறம்பாக வாகனம் இயக்கப்படுவதாக தெரியவந்தால், வாகனம் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன சட்டப்படி பதிவுசான்று ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார்.






