search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு தாமதமாகிறது
    X

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு தாமதமாகிறது

    • கடந்த பருவமழையின் போது நவம்பர், டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
    • விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வண்டலூர்:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    சுமார் 90 ஏக்கர் நிலத்தில் ரூ.394 கோடி செலவில் பிரமாண்டமாக இந்த பஸ் நிலையம் அமைகிறது. வெளியூர்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் என 300 பஸ்களை இயக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம், கடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தை இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    புதிய பஸ்நிலையம் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் கடந்த மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகள் இன்னும் முடியாததால் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறப்பு தாமதமாகி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    கடந்த பருவமழையின் போது நவம்பர், டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. எனவே விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பஸ்நிலைய முக்கிய கட்டிடத்தில் உள்ள குவிமாட பணிகள் 80 சதவீதம் முடிந்து இருந்தது. தற்போது இது முடியும் தருவாயில் உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் மட்டும் விரைவில் தொடங்கும்.

    பஸ் நிலையத்தில் தொலைதூர பஸ்கள், மாநகர பஸ்கள் வந்து செல்ல தனித்தனி நுழைவு வாயில்கள் இருக்கும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×