என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கால் கடும் குடிநீர் தட்டுப்பாடு: கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

    • குடிநீருக்காக விநாயகபுரம் பகுதியில் உள்ள சுடுகாடு ஒட்டியபடி போர்வெல் அமைக்கப்பட்டது.
    • பலர் மெயின் பைப் லைனில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்கின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 4-வது வார்டுக்கு உட்பட்ட விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு மற்றும் ஊமை மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்வதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விநாயகபுரம் பகுதியில் உள்ள சுடுகாடு ஒட்டியபடி போர்வெல் அமைக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் மின் மீட்டர் அமைப்பதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மேலும் குடிநீர் நீரேற்றப்படும் செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள குடிநீர் கிணற்றிலிருந்து விநாயகபுரம் பகுதி வழியாக வரும் வழியில் பலர் மெயின் பைப் லைனில் மின் மோட்டார் பொருத்தி அவரவர் வீடுகளில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி, சம்ப் மற்றும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் விநாயகபுரம் பகுதியில் உள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் சரிவர நீர் ஏற்ற முடிவதில்லை.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம், வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×