என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் முடியவில்லை.
    • பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி.எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் காட்டூர் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிநடந்து வருகிறது. ரூ.55 கோடி மதிப்பில் கடந்த 2018-ம்ஆண்டு இந்த பணி தொடங்கப்பட்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் முடியவில்லை.

    இது தொடர்பாக காட்டூர் சாலை அரியன்வாயில் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் 20-க்கும் மேற்பட்ட கடைகள், 17 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்படவில்லை.

    இந்நிலையில் உதவி பொறியாளர் ஜெயமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் வீடு, கடைகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர். அவர்களிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி.எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திர சேகர், பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன் ராஜ், பொன்னேரி தாசில்தார் மதிவாணன், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, கவுன்சிலர் அபூபக்கர் ஆகியோர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வருகிற 5-ந் தேதிக்குள் தாங்களே ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்றி கொடுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வீடு, கடைகளை இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    • நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தாங்கி அருகே அரிசி ஆலையில் வேலை செய்து வந்த இனர்ஜூட் முகியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செங்கல்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 49 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏரிக்கரையில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அவரை பீகார் மாநிலத்தை சேர்ந்த இனர்ஜூட் முகியா (வயது 28) தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

    அதே நாளில் நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் கத்தி கூச்சலிட இனர்ஜூட் முகியா அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாங்கி அருகே அரிசி ஆலையில் வேலை செய்து வந்த இனர்ஜூட் முகியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் இனர்ஜூட் முகியாவின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீலாக சசிரேகா ஆஜரானார்.

    • விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புக், ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார்.
    • ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கம்பாக்கம், முள்ளி கொளத்தூர், ஈகை ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புக், ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார்.

    மேலும் குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு? சொந்த நிலம் இருக்கிறதா? என்ன வேலை செய்கிறீர்கள்? குடும்பத்தில் உள்ள நபர்கள் எத்தனை பேர்? எந்தெந்த பணியில் உள்ளனர்? அரசு பணியில் உள்ளனரா? சொந்தமாக கார், டிராக்டர் உள்ளிட்ட ஏதேனும் வாகனங்கள் உள்ளதா? என கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கம்பாக்கம் ஊராட்சி தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டன.

    • பள்ளியில் உள்ள வளாகத்தில் வகுப்பறை கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது.
    • பள்ளியில் நடைபெற்ற கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு பாதியில் நிற்கிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள வல்லம் ஊராட்சியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஊராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர்கள் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்படிப்புக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள செங்கல்பட்டு பகுதிக்கு சென்று வருகிறார்கள். இந்த பள்ளி அருகே மலைஈஸ்வரன் கோவில் உள்ளது. இது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    இந்த நிலையில் இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.31லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து பள்ளியில் உள்ள வளாகத்தில் வகுப்பறை கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது. பணிகள் முடியும் நிலையில் பள்ளி கட்டுமான பணியை தொல்லியல் துறை திடீரென நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தொல்லியல் துறையின் உரிய அனுமதி இல்லாமல் கட்டிட பணி நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு பாதியில் நிற்கிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டும் உரிய பதில் இல்லாததால் பள்ளி கட்டுமான பணி முடிக்கப்படாமல் காட்சி அளிக்கிறது.

    இதுகுறித்து வல்லம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது:-

    வல்லத்தில் உள்ள மலை ஈஸ்வரன் கோவிலை சுற்றி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா உள்ளது. இதுவரை இப்பகுதி தொல்பொருள் ஆராய்ச்சிக்கு சொந்தமான இடம் என்று மலையை ஒட்டிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் போது எந்த அதிகாரிகளும் பணிகளை நிறுத்தியது இல்லை. ஆனால் இப்போது மலை அடிவாரத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி நடுநிலை பள்ளிக்கு கட்டிடம் கட்டும் போது தொல்லியல் துறையினர் அனுமதியின்றி கட்டுவதாக பணியை நிறுத்தி உள்ளனர். மாணவர்களின் படிப்பு சம்பந்தமான விஷயத்தில் அதிகாரிகள் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். எனவே பாதியில் நிற்கும் பள்ளி கட்டிட பணியை முழுவதும் முடிக்கவும், மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் கல்வித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அஞ்சன்தவா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சன்தவா (வயது 34). இவர் கல்பாக்கத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக இருந்தார். இவர் அணுபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த ஆண்டு பட்டப்படிப்பு படிக்க சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டார்.

    இதனால் அஞ்சன்தவா மட்டும் தனியாக தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் விஞ்ஞானி அஞ்சன்தவா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தங்கவேல். தொழில் அதிபரான இவர் மறைந்த பழம் பெரும் நடிகர் பாலையாவின் பேரன் ஆவார்.

    பா.ஜனதா கட்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் மனைவி மற்றும் 2½ வயது மகனுடன் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நீச்சல் குளம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீச்சல் குளத்தில் தண்ணீர் அசுத்தம் ஆனது.

    இதையடுத்து பாலாஜி தங்கவேல் இன்று காலை நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்பு அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் கூடையில் அடைத்து வைத்தார். இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து அந்த முதலைகுட்டியை மீட்டு பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர்.

    வண்டலூர் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை உணவுக்காக பறவைகள் தூக்கி செல்லும் போது கீழே விழுவது வழக்கம். இதேபோல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இதற்கு முன்பும் தவறி விழுந்த முதலைகள் சிக்கி உள்ளது.

    சாலையில் முதலை நடந்து சென்ற சம்பவமும் நடந்து உள்ளது. பறவைகள் தூக்கி சென்ற போது இந்த முதலை குட்டியும் நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    • விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் மாமல்லபுரம் சுற்றுலாவருபவர்கள் மாமல்லபுரம், கல்பாக்கம், உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்று அங்குள்ள கடற்கரையில் பொழுதை கழிப்பது வழக்கம். அப்போது பலர் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்து வருகிறார்கள். இதனால் கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த கடற்கரை பகுதி மணல் திட்டு நிறைந்த ஆழமான பகுதியாகும். கடலில் இறங்கினால் மேடாக இருக்கும் மணல் திட்டானது, திடீரென ஆழமாகும். இதனால் கடலில் மூழ்கி பலர் உயிர் இழப்புக்கும் சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்த எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக கடற்கரையோரத்தில் எச்சரிக்கை பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    • பணிகளை பேரூராட்சி தலைவர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
    • நிர்வாகிகள் இளங்கோ, சரவணன் சுரேஷ் கவுன்சிலர்கள் விஜயகுமார், தனசேகர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

    மாமல்லபுரம்:-

    திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 16வது வார்டு எம்.என் குப்பம் பகுதியில் பொது நிதி ரூ.12.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சிமெண்ட் சாலை, 15வது வார்டு பரமசிவம் நகர் பொதுநிதி ரூ.8 லட்சம் மதிப்பில் சாஸ்திரி தெரு மழைநீர் வடிகால்வாய், 4வது வார்டு அன்னை சத்யா நகர் பொது நிதி ரூ.12.75 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் நமக்கு நாமே திட்டத்தில் அன்னை சத்யா நகரில் ரூ.12.5 லட்சம் மதிப்பில் சிறுபாலமும், சாலையும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பணிகளை பேரூராட்சி தலைவர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்தார். நிர்வாகிகள் இளங்கோ, சரவணன் சுரேஷ் கவுன்சிலர்கள் விஜயகுமார், தனசேகர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆதிபராசக்தி அம்மனை வணங்கி விட்டு ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றனர்.
    • ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரிக்குச் சென்று வகுப்பறைகளை பார்வையிட்டு பழைய நினைவுகளையும் சந்திரயான்-3 விண்கல திட்டங்களையும் கல்லூரி ஆசிரியர்களுடனும் மாணவர்களிடமும் பகிர்ந்து கொண்டனர்.

    மேல்மருவத்தூர்:

    சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி அன்று உலக வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி நிலவை தொட்டது.

    இதனால் இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். உலகமே இந்தியாவை வியந்து பார்த்தது.

    இந்த சந்திரயான்-3 திட்டத்தில் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் தாமோதரன், குணசேகரன், ரகுபதி, சத்தியமூர்த்தி, ஜெயக்குமார், குமார், சுப்பிரமணி, சுதாகர் உள்ளிட்டோர் இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.

    சந்திரயான்-3 வெற்றி பெற்றதை அடுத்து இந்தத் திட்டத்தில் பெங்களூருவில் பணியாற்றி வரும் விஞ்ஞானிகள் குழு இயக்குனர் ரகுபதி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவில் பணியாற்றி வருகின்ற ரேடியோ கிராபி மற்றும் ஆய்வு மைய தலைவர் குணசேகரன் ஆகியோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு நேற்று வந்தனர்.

    அங்கு ஆதிபராசக்தி அம்மனை வணங்கி விட்டு ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றனர். இதனைத் தொடர்ந்து தியான மண்டபம் சென்று தியானம் செய்தனர். மேலும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில் குமார் ஆகியோரை சந்தித்து கல்லூரியில் படித்த பழைய காலங்களை நினைவு கூர்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரிக்குச் சென்று வகுப்பறைகளை பார்வையிட்டு பழைய நினைவுகளையும் சந்திரயான்-3 விண்கல திட்டங்களையும் கல்லூரி ஆசிரியர்களுடனும் மாணவர்களிடமும் பகிர்ந்து கொண்டனர்.

    • ரெயில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • பயணிகள் போராட்டம் காரணமாக மதுராந்தகம் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    மதுராந்தகம்:

    புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு பயணிகள் விரைவு ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வேலை பார்த்து வரும் மதுராந்தகம், செய்யூர், சூனாம் பேடு, பவுஞ்சூர், கூவத்தூர், தச்சூர், பெரும்பாக்கம், எண்டத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தினந்தோறும் பயணம் செய்வது வழக்கம்.

    மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து காலையில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டியில் கூட்டம் அதிகம் இருக்கும்போது பயணிகள் சிலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துவந்தனர்.

    இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 7.20 மணிக்கு வழக்கம்போல் புதுச்சேரி-சென்னை பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஏற்கனவே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்ததால் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளால் அதில் ஏறமுடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏற முயன்றனர். ஆனால் அதில் ஏற்கனவே இருந்த பயணிகள் ரெயில் பெட்டியின் கதவுகளை மூடி இருந்ததாக தெரிகிறது. இதனால் பயணிகளால் ரெயிலில் ஏறமுடியாத சூழல் ஏற்பட்டது. ரெயிலும் புறப்பட தயாரானது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் மற்றும் சிக்னல் இயக்கும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ரெயில் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பின்னால் தென்மாவட்டங்களில் இருந்து வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மேல்மருவத்தூர், திண்டிவனம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் சமாதானம் பேசி அதில் பயணிகளை ஏற அனுமதித்தனர். பயணிகள் அனைவரும் ரெயிலில் ஏறியதும் சுமார் 30 நிமிடம் தாமதமாக சென்னை நோக்கி புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

    பயணிகள் போராட்டம் காரணமாக மதுராந்தகம் ரெயில் நிலையம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • மின்வயர்கள் எரிந்ததால் பரவிய புகையால் அவர்கள் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • பெரிய அளவில் வீட்டில் தீப்பற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை அடுத்த துர்கா நகர் தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று இரவு இப்பகுதியில் திடீரென உயர் மின்அழுத்தம் ஏற்பட்டது. இதன்காரணமாக வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து தீப்பிடித்தன. அடுத்தடுத்து சுமார் 20- க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அப்பகுதியில் உள்ள கோலாகியம்மாள் (53) என்பவரது வீட்டிலும் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்தன. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த கோலாகியம்மாள், ஏழு மாத கர்பிணியான சித்ரா(30), இரண்டு மாத குழந்தையான அஜய்குமார், 4 வயது சிறுவன் ரோஹித் ஆகியோர் மீது மின்வயரில் இருந்து சிதறிய தீப்பொறி பட்டு உடல் லேசாக கருகியது. மேலும் மின்வயர்கள் எரிந்ததால் பரவிய புகையால் அவர்கள் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் வீட்டில் தீப்பற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் குரோம்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். மின்ஊழியர்கள் உயர்மின் அழுத்தத்தை சரிசெய்தனர். வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விமான நிலைய மாதிரியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புற நகர் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடி செலவில் பிரமாண்டமாக நவீன வசதிகளுடன் அமைகிறது.

    தினந்தோறும் 1½ லட்சம் பயணிகளை கையாளும் வகையில் ஒரே நேரத்தில் 200 பஸ்கள், 270 கார்கள், 3500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் புதிய பஸ் நிலைய பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை முதல் முறையாக தனியாரிடம் வழங்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்து உள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளதாக தெரிகிறது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விமான நிலைய மாதிரியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    தூய்மை பணிகளை தினந்தோறும் மேற்கொள்ளவும், பஸ் நிலையத்தை பராமரித்து செயல்படுத்தும் பணிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும். சரியான நிறுவனம் தேர்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "பஸ் நிலைய பராமரிப்பை தனியாருக்கு விடும்போது சி.எம்.டி.ஏ. கண்காணிக்க வேண்டும். பயணிகள் மற்றும் பொது மக்களிடம், வாகனங்கள் நுழைவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், கடைகள், ஓட்டல்களில் தரமான உணவு பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

    சமீபத்தில் பெய்த மழையின் போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் முன்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் தேங்குவதை தடுக்க ஜி.எஸ்.டி. சாலையை தாண்டி கால்வாய் மூலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 'கல்வெட்டு' அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    இந்த பணி முடிந்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு இருக்கும் என்று தெரிகிறது.

    ×