கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேன் மோதி அண்ணன்-தம்பி பலி

அண்ணன்-தம்பியான தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.அரசு பஸ்- வேன் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிய தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேன் மோதி அண்ணன்-தம்பி பலி
Published on

வண்டலூர்:

கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி, சிவாஜி நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன்கள் தங்கராஜ்(வயது35), அருண்ராஜ்(27). இருவரும் தாய் மாமாவுடன் சேர்ந்து கூடுவாஞ்சேரியில் லேத் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தனர்.

இந்தநிலையில் ஊரப்பாக்கத்தில் உள்ள ஆய்வகத்தில் தாயின் மெடிக்கல் பரிசோதனை முடிவுகளை வாங்குவதற்காக அண்ணன்-தம்பியான தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி.சாலையில் வந்தபோது முன்னாள் சென்ற அரசு பஸ் ஒன்று பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றது. அதன்பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தங்கராஜூம், அருண்ராஜூம் காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் அவர்களது பின்னால் அதிவேகமாக வந்த வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அரசு பஸ்- வேன் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிய தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்ததும் வேனுடன் டிரைவர் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். விபத்தில் அண்ணன்-தம்பி பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com