search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் சிற்பங்களை பாழாக்கும் கடல் காற்று, உப்பு படிமம், எச்சங்கள்
    X

    மாமல்லபுரம் சிற்பங்களை பாழாக்கும் கடல் காற்று, உப்பு படிமம், எச்சங்கள்

    • மாமல்லபுரம் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.
    • நவீன தொழில்நுட்ப காலத்தில் சிற்பங்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

    சென்னையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது மாமல்லபுரம். தமிழ்நாட்டின் சிற்பக்களஞ்சியம் எனப்படும் மாமல்லபுரத்துக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இங்கு குகை கோவில்கள், சிற்பங்கள் அமைந்துள்ளன. இவை உலக பிரசித்திபெற்று திகழ்கிறது. பல்லவர் கால சிற்பங்கள் பார்க்க பரவச மூட்டும் வகையில் அமைந்து உள்ளன.

    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கிருஷ்ண மண்டபம் என அழைக்கப்படும் பாறை குடை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இந்த சிற்பம் பெரிய பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.

    இந்த குடைவரை சிற்ப வளாகத்தில் உள்ளே இருக்கும் பாறையில் கிருஷ்ணர் பசுவின் மடியில் பால்கறப்பது போன்றும், அவரது குறும்புத்தனம், லீலைகள் குறித்து சிற்பங்களாக செதுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

    சுற்றுலா பயணிகளை கவரும் கிருஷ்ணரின் வெண்ணை பந்து எனப்படும் கருங்கல் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அர்ஜூனன் தபசு பகுதியில் 2 யானைகள் உள்பட பல சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நிலையில் உள்ளன. அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், ஐந்து ரதம், கடற்கரை கோவில் என மாமல்லபுரத்தில் ஒருநாள் முழுவதும் இருந்து பார்த்து ரசிக்கும் இடங்கள் உள்ளன.

    கடற்கரையில் இருக்கும் இந்த சிற்பங்கள் கடல் காற்றினால் சேதம் அடைகின்றன. காற்றின் மூலம் உப்புத்துகள்கள் பரவி சிற்பங்களின் மேல் பட்டு அரிப்பதால் சிற்பங்களின் நுட்பமான வேலைப்பாடுகள் வெளியில் தெரியாமல் பாதிக்கின்றன. உப்பு அரித்த இடங்களில் சிறு சிறு துளைகள் ஏற்பட்டு மழைநீர் மற்றும் அசுத்தங்கள் சேர்ந்து பாதிப்பை அதிகமாக்குகின்றன.

    தூசிகள் சிற்பங்கள் முழுவதும் பரவி சிற்ப வளாக பகுதிகளை பாதிப்படைய செய்கிறது. அதேபோல் காக்கை, குருவி, குரங்கு போன்றவற்றின் எச்சங்கள் மூலமாகவும் ஒருபுறம் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை கலந்த தண்ணீர் மூலம் சுத்தம் செய்து உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. என்றாலும் பாதிப்புகளை முழுமையாக சரிசெய்ய இயலாத நிலைதான் உள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் சிற்பங்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இதுபற்றி தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

    கடல் உப்புகள் மற்றும் மணல் நிறைந்த காற்று ஆகியவை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்று கட்டிடங்களுக்கு இயற்கை மாசுபாட்டிற்கான நிரந்தர காரணங்களாகும். மாமல்லபுரம் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.

    நம் முன்னோர் விட்டுச்சென்ற வரலாற்று பொக்கிஷங்களான இவற்றை நம் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைக்க வேண்டியது நமது கடமை. எனவே இன்னும் கூடுதல் அக்கறை எடுத்து சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×