என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • பெரிய இரும்பு கம்பியால் ஷட்டரின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து பணம், பொருட்களை அள்ளி செல்கிறார்கள்.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பால் கடை நடத்தி வருபவர் ஜெயபிரகாஷ். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று அதிகாலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது பணப்பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதேபால் அதேபகுதியில் உள்ள சந்திரசேகரன் என்பவரின் நாட்டு மருத்து கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரத்தை சுருட்டினர். அருகில் உள்ள செல்போன் கடையின் பூட்டையும் உடைத்தனர். அதில் இருந்த மேலும் சில பூட்டுக்களை உடைக்க முடியாததால் கொள்ளையர்களால் கடைக்குள் செல்ல முடியவில்லை. இதனால் கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பு உள்ள செல்போன்கள் தப்பியது.

    கொள்ளையர்கள் கடைகளின் பூட்டை உடைக்கும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 3 பேர் பெரிய இரும்பு கம்பியால் ஷட்டரின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து பணம், பொருட்களை அள்ளி செல்கிறார்கள்.

    கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • மாமல்லபுரம் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.
    • நவீன தொழில்நுட்ப காலத்தில் சிற்பங்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

    சென்னையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது மாமல்லபுரம். தமிழ்நாட்டின் சிற்பக்களஞ்சியம் எனப்படும் மாமல்லபுரத்துக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இங்கு குகை கோவில்கள், சிற்பங்கள் அமைந்துள்ளன. இவை உலக பிரசித்திபெற்று திகழ்கிறது. பல்லவர் கால சிற்பங்கள் பார்க்க பரவச மூட்டும் வகையில் அமைந்து உள்ளன.

    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கிருஷ்ண மண்டபம் என அழைக்கப்படும் பாறை குடை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இந்த சிற்பம் பெரிய பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.

    இந்த குடைவரை சிற்ப வளாகத்தில் உள்ளே இருக்கும் பாறையில் கிருஷ்ணர் பசுவின் மடியில் பால்கறப்பது போன்றும், அவரது குறும்புத்தனம், லீலைகள் குறித்து சிற்பங்களாக செதுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

    சுற்றுலா பயணிகளை கவரும் கிருஷ்ணரின் வெண்ணை பந்து எனப்படும் கருங்கல் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அர்ஜூனன் தபசு பகுதியில் 2 யானைகள் உள்பட பல சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நிலையில் உள்ளன. அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், ஐந்து ரதம், கடற்கரை கோவில் என மாமல்லபுரத்தில் ஒருநாள் முழுவதும் இருந்து பார்த்து ரசிக்கும் இடங்கள் உள்ளன.

    கடற்கரையில் இருக்கும் இந்த சிற்பங்கள் கடல் காற்றினால் சேதம் அடைகின்றன. காற்றின் மூலம் உப்புத்துகள்கள் பரவி சிற்பங்களின் மேல் பட்டு அரிப்பதால் சிற்பங்களின் நுட்பமான வேலைப்பாடுகள் வெளியில் தெரியாமல் பாதிக்கின்றன. உப்பு அரித்த இடங்களில் சிறு சிறு துளைகள் ஏற்பட்டு மழைநீர் மற்றும் அசுத்தங்கள் சேர்ந்து பாதிப்பை அதிகமாக்குகின்றன.

    தூசிகள் சிற்பங்கள் முழுவதும் பரவி சிற்ப வளாக பகுதிகளை பாதிப்படைய செய்கிறது. அதேபோல் காக்கை, குருவி, குரங்கு போன்றவற்றின் எச்சங்கள் மூலமாகவும் ஒருபுறம் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை கலந்த தண்ணீர் மூலம் சுத்தம் செய்து உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. என்றாலும் பாதிப்புகளை முழுமையாக சரிசெய்ய இயலாத நிலைதான் உள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் சிற்பங்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இதுபற்றி தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

    கடல் உப்புகள் மற்றும் மணல் நிறைந்த காற்று ஆகியவை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்று கட்டிடங்களுக்கு இயற்கை மாசுபாட்டிற்கான நிரந்தர காரணங்களாகும். மாமல்லபுரம் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.

    நம் முன்னோர் விட்டுச்சென்ற வரலாற்று பொக்கிஷங்களான இவற்றை நம் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைக்க வேண்டியது நமது கடமை. எனவே இன்னும் கூடுதல் அக்கறை எடுத்து சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 24 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் இந்திய அளவில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர் முதலிடம்.
    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள கிங்ஸ் மெடிக்கல் அகாடமியில் பயிற்சி பெற்று அதன் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ மெடிக்கல் கல்லூரியில் படித்த மாணவர்கள், 2023ம் ஆண்டிற்கான எப்.எம்.ஜி தேர்வை இந்தியாவில் எழுதினர்.

    24 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் இந்திய அளவில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர் கரீம் ஜாஃபர் சவுகர் முதலிடம் பிடித்து டாக்டர் ஆனார்.

    அவர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அகாடமி நிறுவனர் டேவிட் கே.பிள்ளை, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இயக்குனர் சி.கே.சி.பால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கடலோர மாவட்டங்களில் புயல் அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • ஒத்திகை பயிற்சியில் மத்திய, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 6000 பேர் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு. கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 6 கடலோர மாவட்டங்களில் புயல் அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    வடகிழக்கு பருவ மழையை திறம்பட எதிர் கொள்வதற்கு இந்த புயல் அபாய ஒத்திகை பயிற்சி பேருதவியாக இருக்கும். இந்த பயிற்சியின் மூலம் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் பணியில் இணைந்து செயல்படும் துறைகள் சரிவர இயங்குகின்றனவா என்பதை அறிய முடிந்தது. புயல் அபாய காலத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மீட்பு மற்றும் நிவாரணம் போன்ற பணிகளையும் திறம்பட செயல்படுத்துவதற்கு தேவையான அனுபவம் இந்த ஒத்திகைப் பயிற்சியின் மூலம் கிடைத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொத்தேரி ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, முடிச்சூர் ஏரி, படூர் ஏரி, மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் ஆகிய 5 இடங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது.

    இந்த ஒத்திகை பயிற்சியில் மத்திய, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 6000 பேர் பங்கேற்றனர்.

    • திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி மேம்பாலம் அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு உள்ள முள்புதரில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ரகு (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மு.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர் ஜெயராமன் ஆகியோர் கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் செயலாட்சியராக நியமிக்கப்பட்டுள்ள கூட்டுறவு துறை பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ம.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மு.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பயிற்சியில் செங்கல்பட்டு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ம.சுடர்விழி, மதுராந்தகம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதி வாளர் பா.ஐஸ்வர்யா, கூட்டுறவு சார்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர்கள் மற்றும் இளநிலை ஆய்வாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். ஓய்வு பெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் மாணிக்கவேல், ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர் ஜெயராமன் ஆகியோர் கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    • பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ.35.83 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • மக்கள் தங்கள் கோரிக்கைகளை குறைகளை மனுக்கள் மூலமாகத் தான் தெரிவிப்பார்கள்.

    சென்னை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

    அப்போது பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ.35.83 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    முதல்வரின் முகவரியில் தரப்படும் மனுக்களுக்கு தரமான பதில்கள் தருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை குறைகளை மனுக்கள் மூலமாகத் தான் தெரிவிப்பார்கள். இந்த மனுக்களின் மீது குறித்த காலத்திற்குள் பதில் அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மனுக்களுக்கு பதில் தந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இல்லாமல் உங்கள் துறைக்கானது அல்ல என்று தெரிந்தாலும் அந்த நபருக்கு வேறு ஏதேனும் வகையிலாவது உதவலாம் என்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் மனுதாரருக்கு உதவுங்கள்.

    குறிப்பாக ஏழை எளிய மக்கள், மாற்றுத் திறனாளிகள் பெண்கள் ஆகியோர் தரும் மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் தாரேஷ் அகமது, மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், ஜெகத் ரட்சகன் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர், போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சந்திரன், சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராஜன், கணபதி, துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜ் குமார், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, ஆவடி மாநக ராட்சி ஆணையர் தர்பக ராஜ், பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராம நாதன், துணை கமிஷனர் ஜெயலட்சுமி இளங்கோ கலந்து கொண்டனர்.

    • ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த மாதம் ஆனந்த் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
    • மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் ரங்கன் தெருவை சேர்ந்தவர் பதம்சந்த் (60).அதே பகுதியில் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் மதுராந்தகம் மண்டபத் தெரு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் நடத்திய ஏலச்சீட்டில் பணம் கட்டிவந்தார்.

    ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த மாதம் ஆனந்த் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பலர் பணம் சரிவரி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதில் நகைக் கடை உரிமையாளர் பதம்சந்த்தும் ஏலச்சீட்டு பாக்கித்தொகை செலுத்த வேண்டும் என்று ஆனந்தின் சகோதரர் பாபு, தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறி வந்தனர். ஆனால் பதம்சந்த் ஏலச்சீட்டு பணம் முழுவதும் தான் கட்டிவிட்டதாக கூறினார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பாபு ஆகியோர் ஏலச்சீட்டு பணம் தொடர்பாக நகைக்கடையில் இருந்த பதம்சந்தை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். நகைக்கடை உரிமையாளரை தாக்கும் காட்சி கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பாபுவை தேடிவருகிறார்கள்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விபத்து ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். சோமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி வினோதா. இவர்களது மகன்கள் நித்தின், ருத்ரேஷ் (வயது 3½).

    நேற்று முன்தினம் மாலை ராமகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் நடுவீரப்பட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற நடிகர்கள் ஷாருக்கான்-விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இரவு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அனைவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நித்தின் மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்திலும், பின்பக்க இருக்கையில் வினோதா மகன் ருத்தரேசை கையில் பிடித்தபடி இருந்தனர்.

    இரவு 10 மணியளவில் சோமங்கலம்-தாம்பரம் சாலையை கடக்க முயன்றபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு புகுந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதி நிலை தடுமாறியது. அந்த நேரத்தில் எதிரே வந்த லாரியின் மீதும் மோட்டார் சைக்கிள் மோதி சரிந்தது. இதில் ராமகிருஷ்ணன் குடும்பத்தோடு சாலையில் விழுந்தார். சாலையில் விழுந்த வேகத்தில் சிறுவன் ருத்ரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமகிருஷ்ணன், அவரது மனைவி வினோதா, மற்றொரு மகன் நித்தின் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தலையில் பலத்த காயம் அடைந்து இருந்த ருத்ரேஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி திருமுடிவாக்கம் பகுதியில் நாகம்மாள் என்பவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் திடீரென புகுந்த மாடு மீது மோதியதில் கீழே விழுந்து பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து தாயுடன் வந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

    விபத்து ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சுமார் 1 1/2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மின்வினியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மின்தடை ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக இரவு நேரத்தில் விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் மழை வெளுத்துவாங்கி வருகிறது.

    இந்தநிலையில் செங்கல்பட்டு பகுதியில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை கொட்டியது. பலத்தகாற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை வெளுத்துவாங்கியது.

    சுமார் 1 1/2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கின. பலத்த மழை காரணமாக சின்ன நத்தம், பெரிய நத்தம், காத்தான் தெரு, தூக்குமரக்குட்டை, நத்தம் மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மழைவிட்ட பிறகும் மின்சாரம் சப்ளை சீராகவில்லை. இரவு 11 மணிவரை செங்கல்பட்டு நகரத்தில் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கி இருந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மின்வினியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மின்தடை ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இரவு 11 மணிக்கு பின்னர் மின்சாரம் சப்ளை சீரானது.

    • லாரியின் சக்கரத்தில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த திருமணி, கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது45).தொழிலாளி. இவர் இன்று அதிகாலை செங்கல்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி அருகே வந்து கொண்டு இருந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.
    • மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்தனர்.

    திருப்போரூர்:

    தாழம்பூர், ஓ.எம்.ஆர். சாலையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது தாழம்பூர் அருகே இருதரப்பு மாணவர்களிடையே திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை மடக்கி

    பிடித்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுபோன்று மீண்டும் மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினர்.

    ×