என் மலர்
செங்கல்பட்டு
- கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் ஊரப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- வீரமுத்து நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் ஊரப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வீரமுத்து என்பதும் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக செல்பவர்களை குறிவைத்து நகை, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து வீரமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- சாலையானது கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது.
- மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 55-வது வார்டு, தாம்பரம்-சோமங்கலம் சாலையில் சமத்துவ பெரியார் நகர் உள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி அடையாறு மற்றும் பாப்பன்கால்வாய் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள ராகவேந்திரா பிரதான சாலை சுமார் 740 மீட்டர் தூரத்துக்கு படு மோசமடைந்து மண்பாதையாக காட்சி அளிக்கிறது. தார்சாலை அமைக்கப்பட்ட தற்கான எந்த சுவடுகளும் அங்கு இல்லை. அப்பகுதி மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் சாலையே தெரியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாலை கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது. இதன்பின்னர் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சேதம் அடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால் பொதுமக்களே ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தற்காலிகமாக கற்களை கொண்டு சமன் செய்து வருகிறார்கள்.
மேலும்பருவ மழை காலத்தில் தாழ்வான இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்படும். அந்த நேரத்தில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் இந்த பகுதிக்கு வந்து அடையாறு ஆற்றங்கரைமற்றும் பாப்பன்கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம். ஆனாலும் இங்கு சாலை அமைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமத்துவ பெரியார் நகர் பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த பெரியார் நகர் பகுதி , அரசு பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் போது பொது மக்களுக்கு வழங்கப்பட்ட இடமாகும்.. கடந்த 2009-ம் ஆண்டு இந்தசாலை அப்போதைய பெருங்களத்தூர் பேரூராட்சியிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது 2015-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் நிதியில் 740 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை அமைத்து கொடுத்தனர். இதன் பின்னர் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்தது. எனினும் இதுவரை இந்த சாலை சீரமைக்கப்படாமல் மண்பாதையாக மாறி காட்சி அளிக்கிறது. 8 ஆண்டாக மிகவும் மோசமான நிலையில் காணப்படும் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பலமுறை தாம்பரம் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை மேலும் சேதம் அடைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அடையாறு ஆற்றங்கரையில் உள்ள இப்பகுதியை பலமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது சிறு மழைக்கே சாலை சேறும் சகதியுமாக மாறி பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. பருவ மழைக்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 13 பேரை போலீசார் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- இதுகுறித்து ஒட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி:
தாம்பரம் மாநகர போலீஸ் கூடுவாஞ்சேரி சரகத்திற்கு உட்பட்ட ஒட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீஸ் நிலைய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 13 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஒட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
- எக்ஸ்பிரஸ்ரெயில் சுரை முர்மு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தாம்பரம்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுரை முர்மு (வயது24). இவர் பள்ளிகரணையில் உள்ள தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரெயில்வே நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ்ரெயில் சுரை முர்மு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- ஐயப்பன் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- இன்று அதிகாலை கோவில் வளாகத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது.
திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மூலவர் ஐம்பொன் சிலை மற்றும் செப்பு வெண்கல சிலைகள் கோவில் வளாகத்திலேயே ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோவில் வளாகத்தில் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கோவில் வளாகத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் சென்றதும் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
- மாணவர்களின் பயன்பாட்டிற்கு நிலைய இயக்குநர் ஷெல்கே திறந்து வைத்தார்.
- விழாவில் அணுமின் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் தனது சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் 1.3கோடி ரூபாய் செலவில் திருக்கழுக்குன்றம் அடுத்த குண்ணவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடமும் அதற்கு தேவையான நாற்காலிகள், மேஜைகள் வழங்கவும் முடிவு செய்தது. அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், மாணவர்களின் பயன்பாட்டிற்கு நிலைய இயக்குநர் ஷெல்கே திறந்து வைத்தார்.
விழாவில் அணுமின் நிலைய அதிகாரிகள் சுபா மூர்த்தி, வாசுதேவன், ஜெகன், ரவிச்சந்திரன், சின்ன கோவிந்தன், குண்ணவாக்கம் ஊராட்சி தலைவர் நித்தியானந்தம், தலைமை ஆசிரியை தங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
- பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது.
- பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி.சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின்போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது. இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 4 கல்வெட்டுகளும் குறுகலாக மற்றும் சிதலமடைந்து உள்ளதாலும், மழைநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் எதிரில் உள்ள ரெயில்வே தடங்களை கடந்து அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதம் உள்ள பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளுதல், வெள்ளத்தடுப்பு நடவடிக்கை, சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைசெயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தலைமைசெயலாளர் சிவ்தாஸ்மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது,கிளாம்பாக்கம் பஸ்நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி.சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இதனால் தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, 'கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.
பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனை சரிசெய்து பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையெனில் புறநகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்ததற்காக நோக்கம் நிறை வேறாமல் போய்விடும். பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை எப்படி கையாள வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்' என்றனர்.
- தொடர்மழை காரணமாக தண்ணீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு:
தமிழக பகுதியில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது.
இதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன.
கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வடகால் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 60 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தொடர்மழை காரணமாக தண்ணீர் வடியாமல் உள்ளதால் பயிர்கள் அனைத்தும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- விவசாய கிணற்றில் தீபிகா பிணமாக கிடந்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் முள்ளேரி பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பத்மா. இவர்களது மூத்த மகள் தீபிகா (வயது18).இவர் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் தீபிகா அடிக்கடி ஆண் நண்பருடன் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை கண்ட தாய் அவரை கண்டித்தார். இதில் தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த தீபிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிவந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தீபிகா பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
- முதல் கட்ட உற்பத்தியாக தற்போது 125 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் உள்ள இரண்டாம் அணு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்தது சோதனை ஓட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீண்டும் மின்உற்பத்தியை துவங்கியது.
இதன் முதல் கட்ட உற்பத்தியாக தற்போது 125 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இது படிப்படியாக உயர்ந்து ஓரிரு வாரங்களுக்குள் மீண்டும் சராசரியான 220 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யும் என அனுமின் நிலைய மின்சார உற்பத்தி தொழில்நுட்ப பிரிவு வட்டாரம் தெரிவிக்கிறது.
- மாணவியிடம் வேல்முருகன் அடிக்கடி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.
வண்டலூர்:
மறைமலை நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த என்ஜினீயரான வேல்முருகன்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் பேசி காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் செல்போனில் பிரீபயர் கேம் விளையாடுவது வழக்கம். இந்த விளையாட்டுக்காக பணம் தேவைப்படுகிறது என்று கூறி மாணவியிடம் வேல்முருகன் அடிக்கடி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பெற்றோருக்கு தெரியாமல் வேல்முருகனுடன் பழகி வந்து உள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். மகளிடம் விசாரித்த போது அவர், காதலன் வேல்முருகனுக்கு பணம் தேவைப்பட்டதால் நகையை கூரியர் மூலம் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் மகளின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் வேல்முருகனுக்கு அனுப்பி இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் திசையன்விளை சென்று மாணவியை ஏமாற்றி நகை-பணம் பறித்த வேல்முருகனை கைது செய்தனர். அவர் இதுபோல் வேறு பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா? என்று அவரது செல்போனை கைப்பற்றி மேலும் விசாரித்து வருகிறார்கள்.
- அண்ணன்-தம்பியான தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
- அரசு பஸ்- வேன் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிய தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி, சிவாஜி நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன்கள் தங்கராஜ்(வயது35), அருண்ராஜ்(27). இருவரும் தாய் மாமாவுடன் சேர்ந்து கூடுவாஞ்சேரியில் லேத் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தனர்.
இந்தநிலையில் ஊரப்பாக்கத்தில் உள்ள ஆய்வகத்தில் தாயின் மெடிக்கல் பரிசோதனை முடிவுகளை வாங்குவதற்காக அண்ணன்-தம்பியான தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி.சாலையில் வந்தபோது முன்னாள் சென்ற அரசு பஸ் ஒன்று பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றது. அதன்பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தங்கராஜூம், அருண்ராஜூம் காத்திருந்தனர்.
அந்த நேரத்தில் அவர்களது பின்னால் அதிவேகமாக வந்த வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அரசு பஸ்- வேன் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிய தங்கராஜ், அருண்ராஜ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் வேனுடன் டிரைவர் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். விபத்தில் அண்ணன்-தம்பி பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






