search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரட்டைமலை சீனிவாசனின் மணிமண்டபம் திறக்கப்படுமா ? பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்குமேல் ஆகிறது
    X

    இரட்டைமலை சீனிவாசனின் மணிமண்டபம் திறக்கப்படுமா ? பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்குமேல் ஆகிறது

    • அண்ணாநகர் பகுதியில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • பல்வேறு பிரச்சினைகளால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு கடந்த ஆண்டு நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

    அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோழியாளம் கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இவர் விடுதலைக்கு முன்பே ஆங்கிலேயர் காலத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். இவரின் பிறந்த நாளான ஜூலை 7 -ந் தேதி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இரட்டைமலை சீனிவாசனுக்கு அவர் பிறந்த மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    பின்னர் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

    இதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு கடந்த ஆண்டு நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

    தற்போது மணி மண்டப கட்டுமானப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் புதர் மண்டி காட்சி அளிக்கிறது. மேலும் அங்கிருந்த கழிவறையை மர்ம நபர்கள் உடைத்தும் சேதப்படுத்தி உள்ளனர்.

    இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் திறக்கப்படாமல் உள்ளதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறத்தொடங்கி இருக்கிறது.

    எனவே இரட்டைமலை சீனிவாசனின் மணிமண்டபத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டை மலை சீனிவாசனுக்கு எங்கள் பகுதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. ஆனால் மணி மண்டபம் பணிகள் முடிந்து அதனை திறப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு மேல் மணிமண்டபம் புதர் மண்டி காணப்படுகிறது. இரவு நேரங்களில் அப்பகுதி சமூக விரோதிகளின் கூடாராமாக மாறி வருகிறது. மணிமண்டபத்தை சுற்றியுள்ள முட்பதர்களை அகற்றி இயற்கையான சுற்றுச்சூழலில் இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×