என் மலர்
செங்கல்பட்டு
- அனகாபுத்தூரில் ரூ.18.88 கோடி செலவில் புதிதாக உயர்நிலை மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது.
- செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வினியோகம் 3.40 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் தற்போது குடியிருப்புகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளது. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் இருந்தது. இதனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் கிணற்று நீர் மற்றும் போர்வெல் தண்ணீரையே நம்பி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அனகாபுத்தூர் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து அனகாபுத்தூரில் ரூ.18.88 கோடி செலவில் புதிதாக உயர்நிலை மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி. பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் இனி அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு 3 முறை தண்ணீர் வழங்க முடியும். இதற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மார்க்கெட் தெரு மற்றும் விநாயகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு மேல்நிலைத் தொட்டிகளையும் ஒரு மாதத்தில் தாம்பரம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பம்மல் மண்டலத்தில் 15 ஆயிரத்து 973 வீடுகளில் வசிக்கும் 60 ஆயிரத்து 697 பேர் பயன் அடைவார்கள். தினமும் 8.19 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வினியோகம் 3.40 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என்றார்.
- போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
செங்கல்பட்டு:
பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் பள்ளி பருவத்திலேயே சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்யவும், பள்ளிகளில் மருத்துவ பரிசோதனையின் போது மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பழக்கம் உள்ளதா? என்பதை சோதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். போதைப்பழக்கத்துக்கு தேவையான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- தண்ணீரில் மூழ்கி பாலசுப்பிரமணியன் பலியானார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
பாண்டிச்சேரி, பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 54). கட்டிட தொழிலாளி. இவர் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரி கால்வாயில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி பாலசுப்பிரமணியன் பலியானார். இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
- பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.
வண்டலூர்:
சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
ரூ.394 கோடி செலவில் ரூ.88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. இங்கு 90 சதவீதத்துக்குமேல் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது.
கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது.
இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தின் முன்பகுதியில் ஜி.எஸ்.டி.சாலையைஒட்டி மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் தண்ணீர் அதிக அளவு செல்லும் வகையில் பெரிய கான்கிரீட் குழாய் அமைக்கப்பட இருக்கிறது. இதன்காரணமாக பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.
தற்போது பஸ்நிலையத்தின் மேற்கு பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பகுதியில் சாலையை ஒட்டி நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 3 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த இடத்தில் பணி முடிந்ததும் அடுத்ததாக சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் சாலையில் கிழக்கு பக்கம் பணிகள் தொடங்க உள்ளது. கால்வாய் அமைக்கும் பணியை 4 வாரத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும் கிளா ம்பாக்கம் பஸ்நிலையத்தை தீபாவளிக்கு முன்னதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கால்வாய் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாராக உள்ளது. ஆனால் மழையின் போது பஸ்நிலையத்தின் முன்பு தண்ணீர் தேங்கியதாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும், மழைநீர் வடிகால் ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் பஸ் நிலையத்தை திறக்க அரசு முடிவு செய்தது. தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்றார்.
- கடையின் உள்ளே இருந்த லாக்கரில் 2 நாட்கள் விற்பனை பணம் ரூ.3 லட்சம் இருந்து உள்ளது.
- சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
சித்தாமூர் அருகே உள்ள பழவூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிச்சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மதுக்கடையின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மதுபாட்டில்களும் உடைக்கப்பட்டு சிதறி கிடந்தன. பெட்டியுடன் மதுபாட்டில்களும் கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் சித்தாமூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு வந்த மர்ம கும்பல் மதுக்கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டு புகுந்து பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை அள்ளிச்சென்று இருப்பது தெரியவந்தது. வெளியே எடுத்து வந்த சில மதுபாட்டில்களை கொண்டு செல்ல முடியாததால் கொள்ளை கும்பல் அதனை அங்கேயே உடைத்தும் பெட்டியுடன் மதுபாட்டிலை விட்டும் சென்று உள்ளனர்.
கடையின் உள்ளே இருந்த லாக்கரில் 2 நாட்கள் விற்பனை பணம் ரூ.3 லட்சம் இருந்து உள்ளது. அந்த லாக்கரை கொள்ளை கும்பலால் உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை மட்டும் அள்ளிச்சென்று உள்ளனர். இதனால் அங்கிருந்த ரூ.3 லட்சம் தப்பியது.
இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாம்பரம் வரை செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
- உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் இல்லை.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த நந்திமா நகரை சேர்ந்த ஏழுமலையின் மனைவி கலையரசி (வயது.35), திருப்போரூர் அருகே உள்ள ஆலத்தூர் தொழில்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகி 15ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தாம்பரம் வரை செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் இல்லை. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.
மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கலையரசியை தேடி வருகின்றனர்.
- சுங்கவரி கட்டணத்தால் ஏழை எளிய வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
- தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பரனூர் டோல்கேட் முன்பு நடைபெற்றது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த பரனூர் டோல்கேட் 2005-ம் ஆண்டு சுங்கவரி கட்டண வசூலை தொடங்கும்போது காருக்கு ரூபாய் 20, பஸ் மற்றும் லாரிகளுக்கு ரூபாய் 55, கனரக வாகனங்களுக்கு ரூபாய் 75 என்று சுங்க கட்டணம் வசூலித்தது. தற்போது படிப்படியாக உயர்ந்து 2023-ம் ஆண்டு காருக்கு ரூபாய் 70, பஸ் மற்றும் லாரிகளுக்கு ரூபாய் 230, கனரக வாகனங்களுக்கு ரூபாய் 375 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை விலை உயருகிறது. சுங்கவரி கட்டணத்தால் ஏழை எளிய வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். பரனூர் டோல்கேட் 2019-ம் ஆண்டு காலாவதி ஆகி விட்டதாக கூறுகின்றனர்.
தற்போது வரை பரனூர் டோல்கேட்டில் சுங்கவரி கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் மற்றும் 2019 -ம் ஆண்டு காலாவதியான டோல்கேட்டை இழுத்து மூட வலியுறுத்தியும் செங்கல்பட்டு மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பரனூர் டோல்கேட் முன்பு நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் எத்திராஜ், மாவட்ட துணை செயலாளர் லயன் நாகராஜ், நகர செயலாளர்கள் முருகன், விஜயக்குமார், ஜெயபால், மாவட்ட பொருளாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் செழியன், ஒன்றிய நிர்வாகிகள் கோபிநாத், கஸ்தூரி, சக்திவேல், பாண்டியன், ராஜ்குமாரன், எம்.ஜி.மூர்த்தி, ரமேஷ் பிரபாகரன், பொன்னுசாமி, சந்திரகாந்தன், சேஷாத்ரி, பம்மல் ராஜ், யுவராஜ், பன்ரொட்டி சுரேஷ், ஞானப்பால் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஜெகஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஈரோடு மாவட்டம், களியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகஸ்ரீ (வயது 25) பணி புரிந்து வந்தார். நேற்று மாலை 3 மணியளவில் பணிக்கு வந்த ஜெகஸ்ரீ வேலையில் இருக்கும்போதே முதல் தளத்தில் இருந்து இரவு சுமார் 8.30 மணியளவில் 7-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து உயிருக்கு போராடினார்.
இது பற்றி தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார்.
இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுராந்தகம் அருகே கார், வேன் நேர் நேருக்கு மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 4 தொழிலாளிகள் பரிதாபமாக பலியானார்கள்.
மதுராந்தகம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று நேற்று இரவு மதுராந்தகம் நோக்கிச் சென்றது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த மதுராந்தகத்தை சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் காரில் பயணம் செய்த சக்திவேல், அணைக்கட்டு கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடேசன், பூவரசன் ஆகியோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் பூவரசன் பரிதாபமாக இறந்தார்.
வேனை ஓட்டி வந்த பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இந்து முன்னனி அமைப்பாளர்கள், பி.ஜே.பி கட்சியினர் தனியாக சிலை வைப்போர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து கேட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறினர்.
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு வைக்கப்படும் சிலைகள் மற்றும் அதை கடலில் கரைக்கும் இடத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, இன்று மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பகுதி காவல் ஆய்வாளர்கள், இந்து முன்னனி அமைப்பாளர்கள், பி.ஜே.பி கட்சியினர் தனியாக சிலை வைப்போர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்கும் நபர்கள் அதை வாங்க செல்லும்போது ஊர்வலமாக செல்லக்கூடாது, சிலைகளை வைக்கும் பகுதி பாதுகாப்பாக இருக்க வேண்டும், பிற மதத்தினர் பகுதியில் இடையூறு செய்ய கூடாது, உயர்நீதிமன்ற உத்தரவின் படி பதாகைகள் வைக்க கூடாது, பிளாஸ்டிக், ரசாயனம் கலந்த சிலைகள் வைக்க கூடாது, நன்கொடை என்ற பெயரில் அடாவடி செய்யக்கூடாது, சிலைகளை கரைப்பதற்கு கடற்கரை வரும்போது மது அருந்தி விட்டு கோஷங்கள் போடக்கூடாது, போலீசார் கூறும் பாதை வழியாக மட்டுமே சிலைகளை எடுத்து வரவேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
சிலைகள் வைக்கும் பக்தர்கள் அந்த சிலைகளை கரைக்க மாமல்லபுரம் கடற்கரை வரும்போது தங்களுக்கு குடிநீர், கழிப்பறை, கிரேன், மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட வசதிகள் தேவை என போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.
போலீசார் அவர்களிடம் வருவாய்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை உள்ளிட்டோரிடம் ஆலோசித்து கேட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறினர்.
- ஒரு மாணவியை அழைத்து எண்களின் கூட்டல் குறித்து விளக்கினார்.
- திருக்கழுக்குன்றம் அடுத்த மகாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோகண்டி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டார். அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்கள் வருகை மற்றும் காலை உணவுத்திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் வகுப்பறை ஒன்றுக்கு சென்று அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். ஒரு மாணவியை அழைத்து எண்களின் கூட்டல் குறித்து விளக்கினார். கலெக்டர் ராகுல்நாத்தின் இந்த செயல்முறையை மாணவ-மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அரவிந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதேபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த மகாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் ராகுல்நாத் பாராட்டினார். அப்போது மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பவானி உடன் இருந்தார்.
- செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் நுழைவு வாயிலில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய கலர் மாக்கோலம் போடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் அங்கன்வாடி பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.






