என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • ராஜம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் கொள்ளை போனது தெரிய வந்தது.
    • ராஜம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் வேல்நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது70). தனியாக வசித்து வந்த இவர் டெய்லரிங் வேலை செய்து வந்தார்.

    மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கச் சென்றார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் இவரது வீடு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ராஜம்மாளின் வீட்டில் சென்று பார்த்தனர். அங்கு ராஜம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பீர்க்கங்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜம்மாள் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது ராஜம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் கொள்ளை போனது தெரிய வந்தது.

    ராஜம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரை கொலை செய்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் பீர்க்கங்கரணை ஏரிக்கரை தெருவில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்திலும் கொள்ளை நடந்தது. கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் கருவறையில் இருந்த ஐம்பொன் சிலையை திருடி சென்றார். இதே கோவிலில் 4-வது முறையாக திருட்டு நடந்து உள்ளது.

    இந்த இரு வேறு சம்பவங்களில் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • வீட்டில் சுரேஷ் குமார் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மதுராந்தகம்:

    சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். இதையடுத்து சுரேஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தை அடுத்த சிறுபேர்பாண்டி அருகே அல்லனூர் கிராமத்தில் விவசாய வேலைகள் செய்து வருகிறார்.

    இதற்காக அங்கு குடிசை கட்டி வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் சுரேஷ் குமார் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த ஒரத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர் வீட்டில் மின் இணைப்பு இல்லை. இதனால் தற்காலிகமாக ஜெனரேட்டர் கொண்டு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்.

    மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல கோணங்களில் ஒரத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு ஓ.எம்.ஆர் சாலையோரத்தில் உயிரிழந்த நிலையில் பைக்கின் அருகே பிணமாக கிடந்தார்.
    • மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (வயது 60). இவர் கல்பாக்கம் அருகே உள்ள லத்தூரில் ஆலோபிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி வேலைக்கு சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    அதனால் அவரது குடும்பத்தார் சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு ஓ.எம்.ஆர் சாலையோரத்தில் உயிரிழந்த நிலையில் பைக்கின் அருகே பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன தனுஷ், 2 நாட்களாக எங்கே இருந்தார்? குடிபோதையில் விழுந்து இறந்தாரா? விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது எவரேனும் கொலை செய்து சாலையோரம் கொண்டு வந்து போட்டார்களா? என மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர் சுத்திகரிப்பு நிலையம், அணுசக்தி துறையின் தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டது.
    • திருக்கழுக்குன்றம் பி.ஜே.பி பிரமுகர் தனசேகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில், மத்திய அரசின் "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ், 15லட்சம் ரூபாய் செலவில், சதுரங்கபட்டினம் மீனவர் குடியிருப்பு, காவாக்கரை, கல்பாக்கம் கே.வி-2 ஸ்கூல், திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை ஆகிய நான்கு இடங்களில் மக்கள் பயன்படுத்த சுத்தமான குடிநீர் வசதிக்காக தலா 500லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், அணுசக்தி துறையின் தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டது.

    அவைகளை மக்களின் பயன்பாட்டிற்கு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார். சதுரங்கபட்டினம் ஊராட்சி தலைவர் ரேவதி சாமிநாதன், திருக்கழுக்குன்றம் பி.ஜே.பி பிரமுகர் தனசேகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    • வருகிற 24-ந்தேதி மாலை நடைபெற உள்ள வேஷ்டி அணியும் விழாவுக்கு தனியாக மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தடபுடல் விருந்துடன் அன்று தாய்மாமன் முறைப்படி சடங்குகளுடன் விழா நடைபெறுகிறது.

    பெண் குழந்தைகளுக்கு காது குத்தும் விழா, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தாய்மாமன் முறையை முன்னிலைபடுத்தி நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் சிறுவன் ஒருவனுக்கு அவரது தந்தை வேஷ்டி அணியும் விழா ஒன்றை நடத்த முடிவு செய்து உள்ளார்.

    மாமல்லபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் தனது ஒரே மகனுக்கு வேஷ்டி அணியும் விழா நடத்த தனியாக அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு குடும்பத்துடன் சென்று கொடுத்து அழைத்து வருகிறார்.

    இந்த அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வருகிற 24-ந்தேதி மாலை நடைபெற உள்ள இந்த வேஷ்டி அணியும் விழாவுக்கு தனியாக மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அன்று தடபுடல் விருந்துடன் தாய்மாமன் முறைப்படி சடங்குகளுடன் விழா நடைபெறுகிறது.

    இதுகுறித்து வெங்கடேஷ் கூறும்போது, எனது சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் ஒங்கோல் ஆகும். அங்கு இது போன்று ஆண் குழந்தைகளுக்கு விழா எடுப்பது சகஜம். தமிழ்நாட்டில் இதை யாரும் விரும்புவதில்லை, நான் எங்கள் ஊர் வழக்கப்படி பாரம்பரிய விழாவாக இதை செய்கிறேன் என்றார்.

    • 175 கேன்களில் இருந்த மொத்த 6105 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போபாலில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து விற்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் அருகே உள்ள அய்யனார் கோவில் சந்திப்பில் கடந்த மாதம் எரிசாராயம் கடத்தி வந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 175 கேன்க ளில் இருந்த மொத்த 6105 லிட்டர் எரிசா ராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக லாரி டிரைவரான மேகவண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில் எரிசாராயம் கடத்தல் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி என மிகப்பெரிய அளவில் நடைபெறுவது தெரிந்தது.

    மேகவண்ணன் கொடுத்த தகவலின்படி பட்டாபிராமை சேர்ந்த கிஷோர், சைதாப்பேட்டையை சேர்ந்த தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போபாலில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து விற்பது தெரிந்தது. இதையடுத்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை போலீசார் போபால் விரைந்து சென்று எரி சாராயம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட குர்மீட்சிங் சாசன் என்பவரை பிடித்தனர்.

    போபாலில் இருந்து ஐதராபாத் வழியாக எரிசாராயத்தை கொண்டு வந்து தமிழகம், கேரளா முழுவதும் சப்ளை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எரிசாராயம் வழக்கில் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ், செங்கல்பட்டை சேர்ந்த தனசேகரன் உள்பட மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

    எரிசாராயம் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை மொத்தமாக போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள், 2 கார்கள், வேன், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15 ஆயிரத்து 911 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது. எரிசாராயம் கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்த தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    • உண்டியல் பணம் 3.91லட்சம் ரூபாய் என மட்டுமே தெரிவித்தனர்.
    • மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிகரித்து வரும் இந்த நேரத்தில் உண்டியல் பணம் குறைந்துள்ளது.

    மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு இதுவரை அறங்காவலர் குழு கிடையாது.

    தெப்பத் திருவிழா நடத்துவதற்காக அந்த நேரத்தில் மட்டும் தெப்ப உச்சவ கமிட்டி என ஒரு குழு அமைக்கப்படும். ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோயில் உண்டியல் பணம் என்னும்போது இவர்களை அழைப்பதில்லை என்ற சர்ச்சை ஏற்கனவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பாஸ்கரன், கோயில் செயல் அலுவலர் சரவணன் முன்னிலையில் வெளியூரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற பேங்க் ஊழியர்களை வைத்து உண்டியல் காணிக்கை என்னப்பட்டது.

    இதில் கோயில் தெப்ப உச்சவ கமிட்டியினரையோ, போலீசாரேயோ, வருவாய் அலுவலரையோ, ஆன்மீக நபர்களையோ நிர்வாகம் கூப்பிடவில்லை. உண்டியல் பணம் 3.91லட்சம் ரூபாய் என மட்டுமே தெரிவித்தனர்.

    தற்போது சிசிடிவி கேமரா இல்லாமல் கோயிலில் பணம் எண்ணியதும், யாரையும் அழைக்காமல் தன்னிச்சையாக கோயில் நிர்வாகம் செயல்பட்டதும், கடந்த எண்ணிக்கை காலத்தில் தங்கம், வெள்ளி உட்பட 5 லட்சம் குறையாமல் காணிக்கை இருந்து வந்த நிலையில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிகரித்து வரும் இந்த நேரத்தில் உண்டியல் பணம் குறைந்தது சந்தேகத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

    • அண்ணாநகர் பகுதியில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • பல்வேறு பிரச்சினைகளால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு கடந்த ஆண்டு நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

    அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோழியாளம் கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இவர் விடுதலைக்கு முன்பே ஆங்கிலேயர் காலத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். இவரின் பிறந்த நாளான ஜூலை 7 -ந் தேதி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இரட்டைமலை சீனிவாசனுக்கு அவர் பிறந்த மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    பின்னர் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

    இதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு கடந்த ஆண்டு நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

    தற்போது மணி மண்டப கட்டுமானப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் புதர் மண்டி காட்சி அளிக்கிறது. மேலும் அங்கிருந்த கழிவறையை மர்ம நபர்கள் உடைத்தும் சேதப்படுத்தி உள்ளனர்.

    இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் திறக்கப்படாமல் உள்ளதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறத்தொடங்கி இருக்கிறது.

    எனவே இரட்டைமலை சீனிவாசனின் மணிமண்டபத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டை மலை சீனிவாசனுக்கு எங்கள் பகுதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. ஆனால் மணி மண்டபம் பணிகள் முடிந்து அதனை திறப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு மேல் மணிமண்டபம் புதர் மண்டி காணப்படுகிறது. இரவு நேரங்களில் அப்பகுதி சமூக விரோதிகளின் கூடாராமாக மாறி வருகிறது. மணிமண்டபத்தை சுற்றியுள்ள முட்பதர்களை அகற்றி இயற்கையான சுற்றுச்சூழலில் இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.
    • பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் உள்ளிட்ட சேவைகளுக்கு கியூ.ஆர். கோடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதனை செல்போனில் ஸ்கேன் செய்து பொதுமக்கள் தங்களது குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த செயலி தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டில் சோதனை முறையில் அறிமுகம் செய்து உள்ளனர். இந்த வார்டில் உள்ள 2976 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1500 குடியிருப்புகளில் கியூ.ஆர். கோடு குறியீடு அட்டை ஒட்டப்பட்டு இருக்கிறது. இதனை முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

    துப்புரவு ஊழியர்கள் ஒரு கட்டிடத்தில் ஒட்டப்பட்டு உள்ள கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து அங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டதா? இல்லையா? என்பதையும் பதிவிட முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு அன்றாடம் கிடைக்கக்கூடிய சேவை சரியாக செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க முடியும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புகார் அளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கு தனித்தனியாக கியூ.ஆர். கோடு உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம். மேலும் இந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் புகாராக தெரிவிக்க முடியும்.

    பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது. இதன் பின்னர் மாநகராட்சி முழுவதும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பொதுமக்களின் வீண் அலைச்சல், நேர விரயம் தவிர்க்கப்படும் என்றார்.

    • கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வண்டலூர்:

    ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் கிராமம், கவின் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி புவனேஸ்வரியுடன் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார். மேல் தளத்தில் அவர்களது ஒரு மகன் குடும்பத்துடன் உள்ளார்.

    இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், பூஜை பொருட்கள், இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.

    வீட்டின் மேல் தளத்தில் உள்ள சீனிவாசனின் மகன் தங்கி இருந்த அறைக்கு கொள்ளையர்கள் செல்லாததால் அங்கிருந்த 30 பவுன் நகை தப்பியது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • நெருப்புகோழிகள் குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன.
    • இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்லும் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    பூங்காவில் மொத்தம் 17 நெருப்புக்கோழிகள் உள்ளன. இதில் 2 ஆண், 5 பெண் நெருப்புக்கோழிகள் ஆகும். மேலும் 10 நெருப்புக்கோழிகள் இன்னும் வளரவேண்டி உள்ளதால் அவற்றின் இனம் இன்னும் அறியப்படாமல் உள்ளது.

    இந்தநிலையில் தற்போது பூங்காவில் உள்ள நெருப்புக்கோழிகள் மொத்தம் 33 முட்டையிட்டுள்ளது. அதனை நெருப்புகோழிகள் குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன.

    பொதுவாக நெருப்புக்கோழிகளின் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வர சுமார் 42 நாட்கள் ஆகும். அதிக அளவில் முட்டைகள் இருந்தாலும் அதில் 6 அல்லது 8 முட்டைகளில் இருந்து மட்டுமே நெருப்புக்கோழி குஞ்சு பொரிக்கும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவை வீணாகிவிடும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நெருப்புகோழியின் முட்டை மற்றும் நெருப்புகோழிகளின் செயல்பாடுகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா உதவி இயக்குனர் மணிகண்டபிரபு கூறும்போது, நெருப்புகோழிகளின் இனப்பெருக்கத்திற்கு சென்னையில் உள்ள தட்பவெப்ப நிலையே முக்கிய காரணம். சென்னையில் ஆண்டின் பெரும்பகுதி நிலவும் வறண்ட தட்பவெப்ப நிலைகள் இவற்றிற்கு மிகவும் ஏற்றது. நெருப்புக்கோழி பராமரிப்புகள் அதிகம் உள்ள ஒரு பறவை. இவை ஈரப்பதத்தை விரும்பாது. இதற்கு நல்ல காய்ந்த மணல் பரப்பைக் கொண்டு இருக்க வேண்டும்.

    இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை. நெருப்புகோழிகள் பறக்க முடியாத பறவை என்பதால் அவை சுதந்திரமாக ஓடுவதற்கு போதுமான இடம் தேவை.

    தற்போது மழையும் குளிருமாய் இருப்பதால் அதன் முட்டைகள் பொரிக்க தாமதம் ஆகிறது. எனவே அதற்கான வெப்பம் குறையாத வகையில் முட்டைகளை பாதுகாத்து வருகிறோம் என்றார்.

    • அனகாபுத்தூரில் ரூ.18.88 கோடி செலவில் புதிதாக உயர்நிலை மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வினியோகம் 3.40 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் தற்போது குடியிருப்புகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளது. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் இருந்தது. இதனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் கிணற்று நீர் மற்றும் போர்வெல் தண்ணீரையே நம்பி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து அனகாபுத்தூர் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து அனகாபுத்தூரில் ரூ.18.88 கோடி செலவில் புதிதாக உயர்நிலை மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி. பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நீண்டகாலமாக நிலுவையில் இருந்த குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் இனி அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு 3 முறை தண்ணீர் வழங்க முடியும். இதற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மார்க்கெட் தெரு மற்றும் விநாயகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு மேல்நிலைத் தொட்டிகளையும் ஒரு மாதத்தில் தாம்பரம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பம்மல் மண்டலத்தில் 15 ஆயிரத்து 973 வீடுகளில் வசிக்கும் 60 ஆயிரத்து 697 பேர் பயன் அடைவார்கள். தினமும் 8.19 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வினியோகம் 3.40 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என்றார்.

    ×