search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1456 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு- போலீஸ் கடும் கட்டுப்பாடு
    X

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1456 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு- போலீஸ் கடும் கட்டுப்பாடு

    • அனைத்து இடங்களிலும் பல வண்ண விநாயகர் சிலைகள் வைத்து விழா விமரிசையாக நடந்து வருகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமானோர் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைவைத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் பொது இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 1456 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து இடங்களிலும் பல வண்ண விநாயகர் சிலைகள் வைத்து விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 313இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏகாம்பரநாதர் கோயில், குமரகோட்டம் முருகன் கோவில், காமாட்சி அம்மன் கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் 13 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

    காமாட்சியம்மன் சன்னதி தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் ரூ.15 லட்சத்தில் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதேபோல் காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயக பெருமானுக்கு பலவிதமான நறுமண பொருட்களால் கலச அபிஷேகமும். சிறப்பு அலங்காரமும், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு, கேது, சனீஸ்வர பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து லட்சர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், நேரு மார்க்கெட் மற்றும் தேரடி பகுதிகளில் விநாயகர் சிலை, பூ, பழங்கள், எருக்கம்பூ மாலை, அருகம்புல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியது.

    வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை 5 நாட்களில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, சர்வதீர்த்த குளம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம் செல்லவேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

    திருவள்ளூரில் கடந்த ஆண்டைவிட குறைவான இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். திருவள்ளூரில் 111, திருத்தணியில் 121, ஊத்துக்கோட்டையில் 209, பொன்னேரியில் 46, கும்மிடிப்பூண்டியில் 153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர்.

    சிலைகளுக்கு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வீடுகளில் வைத்து வழிபட சிறிய வகை விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    விநயாகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி மா.பொ.சி. சாலை மார்க்கெட் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது. ஏராளமான பொதுமக்கள் பூ, மாலை, பழங்கள் உள்ளிட்ட விநாயகருக்கு படையலிடும் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று காலை கூட்டம் அதிகாமாக காணப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் விற்பனை அதிகம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் வழபட்டு சென்றனர்.

    மாமல்லபுரம் கடலில் வருகிற 24-ந் தேதி விநாயர் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் சிலைகளை கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும். அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக் ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×