search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilambakkam new bus station"

    • தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு திட்டமிட்டப்படி புதிய பஸ்நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது. ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைகிறது.

    திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தண்ணீர் செல்ல வழியில்லாமல் பஸ்நிலையம் முன்பு குளம்போல் தேங்கியது. இதைத்தொடர்ந்து மழைநீர் கால்வாய் புதிதாக அமைத்த பின்னர் பஸ்நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இணைப்புச் சாலை மற்றும் வடிகால் அமைப்புகள் முடியாததால் தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு திட்டமிட்டப்படி புதிய பஸ்நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பஸ்நிலையம் அருகே மழைநீர் வடிகால்வாய் மற்றும் இணைப்பு சாலை பணிகளை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு கெடு விதித்து உள்ளனர். ஏற்கனவே பஸ்நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. மீதி உள்ள பணிகள் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    எனினும் கிளாம்பாக்கம் பஸ்நிலைய முகப்பில் ஜி.எஸ்.டி.சாலையில் குறுக்காக மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி 90 சதவீதம் மட்டுமே முடிந்து உள்ளன. இதேபோல் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து பின்புறம் உள்ள அய்யஞ்சேரி வழியாக பஸ் வெளியேறி ஊரப்பாக்கம் வழியாக வரும் பாதையும் குறுகலாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பஸ்நிலையம் முன்பு கால்வாய் அமைக்கும் பணி இன்னும் 10 சதவீதம் மட்டுமே முடிக்க வேண்டும். இது விரைவில் முடிக்கப்படும். அய்யஞ்சேரி இணைப்பு சாலை பணிகளும் 90 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்)15-ந்தேதிக்குள் பணிகளை முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இறுதிகட்ட பணிகளை கண்காணித்து வருகிறோம். அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும். பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றார். இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் போது வெளியூர் செல்வோர் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
    • பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.

    வண்டலூர்:

    சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ரூ.394 கோடி செலவில் ரூ.88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. இங்கு 90 சதவீதத்துக்குமேல் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தின் முன்பகுதியில் ஜி.எஸ்.டி.சாலையைஒட்டி மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் தண்ணீர் அதிக அளவு செல்லும் வகையில் பெரிய கான்கிரீட் குழாய் அமைக்கப்பட இருக்கிறது. இதன்காரணமாக பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.

    தற்போது பஸ்நிலையத்தின் மேற்கு பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பகுதியில் சாலையை ஒட்டி நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 3 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட இருக்கிறது.

    இந்த இடத்தில் பணி முடிந்ததும் அடுத்ததாக சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் சாலையில் கிழக்கு பக்கம் பணிகள் தொடங்க உள்ளது. கால்வாய் அமைக்கும் பணியை 4 வாரத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும் கிளா ம்பாக்கம் பஸ்நிலையத்தை தீபாவளிக்கு முன்னதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கால்வாய் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாராக உள்ளது. ஆனால் மழையின் போது பஸ்நிலையத்தின் முன்பு தண்ணீர் தேங்கியதாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும், மழைநீர் வடிகால் ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் பஸ் நிலையத்தை திறக்க அரசு முடிவு செய்தது. தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்றார்.

    • பணிகள் சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் நடந்து வருகிறது.
    • தினந்தோறும் 1½ லட்சம் பயணிகளை கையாளும் வகையில் புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான பணி சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் நடந்து வருகிறது. புதிய பஸ்நிலைய பணி திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவலால் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது.

    தற்போது புதிய பஸ்நிலைய பணி வேகமாக நடந்து வருகின்றன. தினந்தோறும் 1½ லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் 200 பஸ்கள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சூரிய மின் தகடுகள் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் முழுவதும் முடியும் நிலையில் உள்ளது. கடைசிகட்ட பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. இந்த பணியில் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்று தெரிகிறது. மேலும் பயணிகள் காத்திருப்பு கூடத்தில் தரைதளம் அமைக்கும் பணியும் நாற்காலிகள் அமைக்கும் பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்கள் உள்ளே நுழைய 2 வழிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்தின் முன்பக்கமும், மாநகர பஸ்கள் பின்புறம் வழியாக செல்ல தனி நுழைவு வாயில்கள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக பஸ்நிலையத்தின் பின்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அய்யஞ்சேரி சாலை சீரமைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. சாலையுடன் இணைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கிளாம்பாக்கம் பஸ்நிலைய பின்புறம் உள்ள அய்யஞ்சேரி, மீனாதிபுரம் பகுதியில் குறுகிய சாலையில் குடியிருப்புகளும், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி 20 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் புதிய பஸ் நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கு தனி பஸ்நிறுத்தம் கிடையாது. எனவே ஆம்னி பஸ்களுக்கு தனியாக பஸ்நிலையம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.இதற்காக வண்டலூர் வெளிவட்ட சாலையில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரதராஜபுரம் ஏற்றஇடமாக இருக்கும் என்று அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர். அடுத்தகட்டமாக இங்கு ஆம்னி பஸ்நிலையம் கட்டும் பணி நடைபெறும் என்று தெரிகிறது.

    கிளாம்பாக்கம் பஸ்நிலையம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களையும் இணைக்கும் புதிய பஸ் நிலையமாக இருக்கும் என்பதால் சென்னை மற்றும் புறநகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ரெயில் இணைப்பை ஏற்படுத்த, அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. திருவள்ளூருக்கு நகர பஸ்களை படப்பை மேம்பாலம் மற்றும் மதுரவாயல் வழியாக இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இதேபோல் ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் மின்சார ரெயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக சி.எம்.டி.ஏ. மற்றும் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இது தவிர மீனம்பாக்கம் விமான நிலையம்- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை இணைக்க மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையம்- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இடையே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.4080 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையம் கட்ட பஸ்நிலையத்தின் எதிரே இடம் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய கட்டுமான பணி முடியும் நிலையில் உள்ளதால் விரைவில் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×