search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் தீபாவளிக்கு முன்பு திறக்கப்படுகிறது- கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது
    X

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் தீபாவளிக்கு முன்பு திறக்கப்படுகிறது- கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது

    • ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
    • பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.

    வண்டலூர்:

    சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ரூ.394 கோடி செலவில் ரூ.88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. இங்கு 90 சதவீதத்துக்குமேல் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தின் முன்பகுதியில் ஜி.எஸ்.டி.சாலையைஒட்டி மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் தண்ணீர் அதிக அளவு செல்லும் வகையில் பெரிய கான்கிரீட் குழாய் அமைக்கப்பட இருக்கிறது. இதன்காரணமாக பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.

    தற்போது பஸ்நிலையத்தின் மேற்கு பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பகுதியில் சாலையை ஒட்டி நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 3 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட இருக்கிறது.

    இந்த இடத்தில் பணி முடிந்ததும் அடுத்ததாக சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் சாலையில் கிழக்கு பக்கம் பணிகள் தொடங்க உள்ளது. கால்வாய் அமைக்கும் பணியை 4 வாரத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும் கிளா ம்பாக்கம் பஸ்நிலையத்தை தீபாவளிக்கு முன்னதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கால்வாய் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாராக உள்ளது. ஆனால் மழையின் போது பஸ்நிலையத்தின் முன்பு தண்ணீர் தேங்கியதாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும், மழைநீர் வடிகால் ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் பஸ் நிலையத்தை திறக்க அரசு முடிவு செய்தது. தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்றார்.

    Next Story
    ×