search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stormwater"

    • பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது.
    • பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி.சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின்போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது. இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 4 கல்வெட்டுகளும் குறுகலாக மற்றும் சிதலமடைந்து உள்ளதாலும், மழைநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் எதிரில் உள்ள ரெயில்வே தடங்களை கடந்து அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதம் உள்ள பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளுதல், வெள்ளத்தடுப்பு நடவடிக்கை, சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைசெயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    தலைமைசெயலாளர் சிவ்தாஸ்மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது,கிளாம்பாக்கம் பஸ்நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி.சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதனால் தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, 'கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

    பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதனை சரிசெய்து பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையெனில் புறநகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்ததற்காக நோக்கம் நிறை வேறாமல் போய்விடும். பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை எப்படி கையாள வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்' என்றனர்.

    ×