search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    இன்ஸ்டாகிராமில் காதல்: பிளஸ்-1 மாணவியை ஏமாற்றி நகை பறித்த என்ஜினீயர்
    X

    இன்ஸ்டாகிராமில் காதல்: பிளஸ்-1 மாணவியை ஏமாற்றி நகை பறித்த என்ஜினீயர்

    • மாணவியிடம் வேல்முருகன் அடிக்கடி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.

    வண்டலூர்:

    மறைமலை நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த என்ஜினீயரான வேல்முருகன்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் பேசி காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் செல்போனில் பிரீபயர் கேம் விளையாடுவது வழக்கம். இந்த விளையாட்டுக்காக பணம் தேவைப்படுகிறது என்று கூறி மாணவியிடம் வேல்முருகன் அடிக்கடி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பெற்றோருக்கு தெரியாமல் வேல்முருகனுடன் பழகி வந்து உள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த 12 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். மகளிடம் விசாரித்த போது அவர், காதலன் வேல்முருகனுக்கு பணம் தேவைப்பட்டதால் நகையை கூரியர் மூலம் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் மகளின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் வேல்முருகனுக்கு அனுப்பி இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் திசையன்விளை சென்று மாணவியை ஏமாற்றி நகை-பணம் பறித்த வேல்முருகனை கைது செய்தனர். அவர் இதுபோல் வேறு பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா? என்று அவரது செல்போனை கைப்பற்றி மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×