என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 15 டன் விநாயகர் சிலை மும்பை கொண்டு செல்லப்பட்டது.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சிற்ப கலை கூடத்தில் மும்பையில் உள்ள ஜீவ்தானி மந்திர் கோவிலில் உள்ள கருவறையில் நிறுவுவதற்காக 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைத்து தரும்படி கேட்கப்பட்டது.

    15 டன் எடையுள்ள ஒரே கல்லில் 10 அடி உயரத்தில் மூசிக (எலி) வாகனம் தாங்கிய ஆதார பீடத்துடன், அமர்ந்த திருக்கோலத்தில் 6 அடி அகலத்தில் 4 கரங்களில் பாசம், அங்குஷம், லட்டு, அபயம் தாங்கிய திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் சைவ ஆகம முறைப்படி வலம்புரி விநாயகர் சிலையை 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த 2 மாதங்களாக வடிவமைத்தனர்.

    பளபளப்புடன் பாலிஷ் போடப்பட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு முழுவதும் வடிவமைக்கப்பட்ட பிறகு கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்ட இந்த சிலையை சிற்பிகள் சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த சிலைக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்து கன்டெய்னர் லாரியில் கிரேன் மூலம் தூக்கி வைத்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சிலைக்கு மும்பையில் உள்ள கோவிலில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்தி கருவறையில் வைக்க உள்ளதாக சிற்பிகள் தெரிவித்தனர்.
    சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 43). இவர், சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டிவிட்டு, கீழ்தளத்தில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, மாடி அறையின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அபி முஸ்தபா (33). இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 17 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி அரைஞாண் கொடி, ரூ.27 ஆயிரத்தை திருடிச்சென்றுவிட்டது தெரிந்தது.

    இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே நடந்து சென்ற இளம்பெண் மீது வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த கல்குளம் புதிய தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் கலைச்செல்வி (வயது 29) திருமணமாகாத இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

    நேற்றுமுன்தினம் காலை வீட்டில் இருந்து புறப்பட்ட கலைச்செல்வி சற்று தொலைவில் உள்ள கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்து கடலூர் - மதுராந்தகம் சாலையில் நடந்தே வீடு திரும்பினார்.

    வழியில் கண்டிகை பெட்ரோல் நிலையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது பலமாக மோதி விட்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வி உயிருக்கு போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்- மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த பேரமனூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆதிலட்சுமி (40).

    சீனிவாசன் மதுராந்தகத்தை அடுத்த மொறப்பக்கத்தில் உள்ள தன்னுடைய தங்கை வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சியி்ல் பங்கேற்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் என்ற இடத்தில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு ஆகியோர் விரைந்து சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான சீனிவாசன், ஆதிலட்சுமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
    செங்கல்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் 2 சிறுமிகள் உள்பட 3 பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காந்தலூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. தற்போது குவாரி இயங்காத நிலையில் அங்கு ராட்சத பள்ளம் உள்ளது.

    கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஆயிரம் அடிக்கும் மேலாக உள்ள குவாரி பள்ளத்தில் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த கல்குவாரி குட்டை பிரமாண்ட பரப்பளவில் இருப்பதாலும், தேங்கியுள்ள நீர் காண்பதற்கு ரம்மியமாக இருப்பதாலும் அப்பகுதி திடீர் சுற்றுலாத்தலமாகி பிரபலமானது.

    இந்தநிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமீம் அன்சாரி (வயது 25) மற்றும் அவரது மாமன் மகள் சமீதா (17), அவரது தோழி ஏஞ்சல் (17) உள்ளிட்ட 3 பேர் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.

    இதையடுத்து குளித்து கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், நீச்சல் தெரியாததால் மேற்கண்ட 3 பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் கல்குவாரி குட்டையில் குதித்து உடலை தேடும் பணியில் இறங்கினர். அதைத்தொடர்ந்து, மூழ்கி கிடந்த 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கல்குவாரி குட்டையில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் இல்லாததால் ஆபத்தை உணராமல் இங்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் சிலர், குட்டையில் மூழ்கி உயிரிழந்து வருவது தொடர் கதையாக உள்ளது எனவே எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த கல்குவாரி குட்டையில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. செங்கல்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் 2 சிறுமிகள் உள்பட 3 பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் அஜய் (வயது 19). பெயிண்டரான இவர், தனது உறவினர் பிரபு என்பவருடன் சேர்ந்து கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டை, துர்கா நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.

    நேற்று காலை வீட்டின் வெளிப்புற சுவரில் பெயிண்ட் அடித்தபோது, அருகில் இருந்த உயரழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக அவரது கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அஜய், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான அஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் செய்யூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள இரும்பேடு கிராமம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.

    இவர் பாலூர் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். தினமும் இரவில் கடை யில் வசூலாகும் பணத்தை பையில் வைத்து மோட்டார்சைக்கிளில் எடுத்து செல்வது வழக்கம்.

    நேற்று இரவும் இதே போன்று டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து சுரேஷ்குமார் எடுத்து சென்றார்.

    சுரேஷ்குமார் தனது ஊரான இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த நண்பர் சங்கருடன் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றார். சுரேஷ்குமார் மோட்டார்சைக்கிளை ஓட்டினார். சங்கர் பின்னால் அமர்ந்திருந்தார். நேற்று இரவு 9 மணியளவில் பவுஞ்சூரில் இருந்து செய்யூர் செல்லும் வழியில் அம்மனூர் கிராமம் வழியாக இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

    அம்மனூர் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் அருகில் புத்தூர் செல்லும் சாலையில் மோட் டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென வழிமறித்தது.

    அவர்களில் ஒரு மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கிய 2 பேர் திடீரென சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் சுரேஷ்குமார் நிலைகுலைந்தார். அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். அப்போது இடது கையால் சுரேஷ்குமார் தடுத்தார்.

    இதில் கை மணிக்கட்டில் பலத்த வெட்டு விழுந்தது. இதன் பின்னரும் இருவரும் சுரேஷ்குமாரை விடாமல் வெட்டினார்கள். இதில் மூக்கு, கழுத்து, இடது கண் புருவம் ஆகிய இடங்களிலும் சரமாரியாக வெட்டு விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமார் மயங்கி கீழே விழுந்தார். இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் 4 பேரும் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தில் சுரேஷ்குமாருடன் சென்ற சங்கர் மீது தாக்குதல் நடைபெறவில்லை.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் செய்யூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சுரேஷ் குமாரை மீட்டு செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டன.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுரேஷ்குமார் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டாஸ்மாக் சூப்பர்வைசரை வெட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் செய்யூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் 4 கொள்ளையர்களையும் பிடிக்க தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

    தப்பி சென்ற கொள்ளையர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சுரேஷ் குமார் தினமும் டாஸ்மாக் கடையில் இருந்து பணம் எடுத்துச் செல்வதை நோட்டமிட்டு திட்டம் போட்டு கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    பம்மல் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருநீர்மலை சாலையில் வசித்து வந்தவர் அருண்குமார்(வயது 29). இவர், கருத்துவேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    இதற்கிடையில் சரியான வேலை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவித்த அருண்குமார், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவிக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி புராதன சின்னங்கள், கடற்கரை பகுதிகள் வெறிச்சோடின.
    மாமல்லபுரம்:

    தற்போது உருமாறிய கொரோனா புதிய வைரசாக உருவாகி பரவுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15-ந்தேதி முதல் முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களுக்கு மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு புராதன சின்னங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று மாமல்லபுரம் கடற்கரையில் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் கூடுவர். பல்வேறு இடங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வரும் பொதுமக்கள் புராதன சின்னங்களை கண்டு களித்து விட்டு செல்வதுண்டு.

    கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் காணும் பொங்கல் தினமான நேற்று மாமல்லபுரம் கடற்கரை பகுதி மற்றும் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் பயணிகள் நடமாட்டம் இன்றி களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள சங்குமணி கடைகள், சிற்பகலை கூடங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் கடற்கரைக்கு செல்லாத வண்ணம் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் 2 இடங்களில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி உள்ளிட்ட போலீசார் தடுப்புகள் வைத்து கடற்கரைக்கு செல்ல முயன்ற வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

    3 நாட்கள் தடை முடிந்து புராதன சின்னங்கள் திறந்தவுடன் அவற்றை வந்து பார்க்குமாறு நேற்று மூடப்பட்ட தகவல் தெரியாமல் வந்த பயணிகள் சிலருக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

    இந்த ஆண்டு காணும் பொங்கல் கொண்டாட்ட தடையால் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலா வாகன போக்குவரத்து இல்லாததால் அந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மொத்தத்தில் இந்த வருட காணும் பொங்கல் கொண்டாட்டம் இல்லாத ஒரு நகரமாகவே மாமல்லபுரம் காட்சி அளித்தது.

    நேற்று காணும் பொங்கல் தடையால் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஓட்டல் நிர்வாகங்கள் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 754-ஆக உயர்ந்தது. 365 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 40 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 432 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 436 பேர் உயிரிழந்துள்ளனர். 172 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் திருப்போரூர் தாலுகாவுக்குட்பட்ட மானாமதி திருநிலை கிராமம் மற்றும் கொண்டங்கி பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது மானாமதி பகுதியில் சுதா (வயது41) என்ற பெண் திருட்டுத்தனமாக மதுவிற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றை கைப்பற்றிய மதுவிலக்கு துறையினர் அவரை கைது செய்தனர்.

    அதேபோல திருட்டுத்தனமாக மதுவிற்றதாக திருநிலை கிராமத்தை சேர்ந்த பார்வதி (60), கொண்டங்கி கிராமத்தை சேர்ந்த யுவராஜ்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னையில் வசிக்கும் பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்களது சொந்த ஊருக்கு செல்வதால் தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    தாம்பரம்:

    சென்னையில் வசிக்கும் பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, மன்னார்குடி செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதன் காரணமாக தாம்பரத்தில் ஏராளமான அரசு பஸ்கள் ஜி.எஸ்.டி. சாலையின் இரு பகுதிகளிலும் நிறுத்தப்பட்டதாலும், பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் கார்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதாலும் ஒரே நேரத்தில் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் அணிவகுத்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
    ×