என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மாமல்லபுரம் அருகே கடல் அரிப்பால் சிமெண்டு சாலை சேதம் அடைந்தது. தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பத்தில் மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள சூளேரிக்காட்டு குப்பத்தில் கடற்கரையோரம் செயல்பட்டு வரும் கடல் நீர் குடிநீராக்கும் ஆலைக்கு கடல் நீர் கொண்டு வர ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு பெரிய, பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டன.

    அங்கு கடல் அலையின் வேகத்தை குறைக்க கொட்டப்பட்ட கற்களால் பக்கத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்தது. அங்கு கடல் அலையின் வேகம் அதிகரித்து 50 மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி கரைப்பகுதியை நோக்கி வந்துவிட்டதால் அங்குள்ள மணல் பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. 50 மீட்டர் கரைப்பகுதி கடல் நீரால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    அங்குள்ள சிமெண்டு சாலை வரை ராட்சத அலை முன்னோக்கி சீறி பாய்ந்து வந்து தாக்கியதால் 100 மீட்டர் நீளமுள்ள சிமெண்டு சாலை சேதம் அடைந்துள்ளது. படகுகள் அங்குள்ள சேதமடைந்த சிமெண்டு சாலை கற்கள் மீது மோதும்போது சேதமடைகின்றன. இதுவரை 10-க்கும் மேற்பட்ட படகுகள் ராட்சத அலையால் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளன. நெம்மேலி குப்பத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள கரைப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு 20 மீட்டர் தூரத்திற்கு மணல் திட்டு ஏற்பட்டுள்ளது.

    அதேபோல் அங்குள்ள கடற்கரை ஓரம் உள்ள அம்மன் கோவிலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெம்மேலி குப்பம் மீனவர்கள் பலமுறை மீன்வளத்துறைக்கும், தமிழக அரசுக்கும் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இன்னும் அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக நெம்மேலி குப்பம் கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆட்டோவில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகையை நேர்மையாக ஒப்பட்டைத்த ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது.
    தாம்பரம்:

    குரோம்பேட்டையை சேர்ந்தவர் பால் பிரைட். வியாபாரிகள் சங்க பிரமுகரான இவருடைய மகன் திருமணம் நேற்று முன்தினம் அங்குள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. பின்னர் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், தேவாலயத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் சென்றுள்ளார்.

    அப்போது தன்னுடைய பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டுவிட்டார். இதையடுத்து, வீட்டில் சென்று பார்த்தபோது, தன்னுடையை நகைப்பையை ஆட்டோவில் தவறவிட்டது உணர்ந்தார். இதைத்தொடர்ந்து பால் பிரைட், குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார், நகையை தவறவிட்ட ஆட்டோவை தேடி வந்தனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் ஆட்டோ டிரைவர் சரவணகுமார், ஆட்டோவில் தவறவிட்ட நகைப்பையை எடுத்து கொண்டு குரோம்பேட்டை போலீஸ் நிலையம் வந்தார். பின்னர் நடந்தவற்றை கூறி நகையை போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்தார்.

    50 பவுன் நகையை நேர்மையாக ஒப்பட்டைத்த ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் பாராட்டி வெகுமதி அளித்தனர்.
    பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டுமுறை மரச்சிற்பத்தில் வடிவமைத்து மாமல்லபுரம் சிற்ப கலை கல்லூரி மாணவர் முதல் பரிசை பெற்றார்.
    மாமல்லபுரம்

    தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிறுத்தி தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு நுண்கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு மாதிரி சிற்பங்கள் மூலம் வாக்காளர்கள் புரிந்து கொள்கின்ற வகைகளில் மாதிரி சிற்பங்கள் வடிமைக்கும் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலை கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட மரச்சிற்ப பிரிவு பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் சுதர்ஷன் என்ற மாணவர் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மற்றும் வாக்காளர்களை கவரும் விதமாக பழங்கால பனை ஓலை ஓட்டு முறை முதல் தற்போதைய வாக்குப்பதிவு எந்திர ஓட்டு முறை வரை மற்றும் நாடாளுமன்ற கட்டிடம், தமிழக சட்டமன்ற கட்டிடம் போன்றவற்றை மரச்சிற்பத்தில் அழகுற வடிவமைத்தார்.

    இந்த மரச்சிற்பம் தமிழக அளவில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறந்த விழிப்புணர்வு கலை படைப்பு சிற்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த மாணவருக்கு பரிசு வழங்கி உள்ளார்.

    அதேபோல் மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் உலோக சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும்முரட்டுகருப்பன் என்ற மாணவர் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டுரிமை முக்கியம் என்ற கருத்தினை முன்னிறுத்துகின்ற வகையில் மெழுகில் வட்டவடிவில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக ஒரு விரலை காண்பித்த நிலையில், சுற்றி பல்வேறு பணி செய்கின்ற டாக்டர், போலீசார், வக்கீல்கள், மாணவர்கள், கலைஞர்கள், விவசாயிகள், கர்ப்பிணி பெண், ஊனமுற்றோர், பிச்சைக்காரர், கலைஞர்கள், சமூகத்தில் உயர்ந்த மனிதர், துப்புரவு பணியாளர் போன்ற அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வோடு அனைவரும் காட்சி கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மெழுகு சிற்பம் 3-ம் பரிசு பெற்றுள்ளது.

    தமிழக அளவில் வாக்காளர் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசும், 3-ம் பரிசும் பெற்ற சுதர்ஷன் மற்றும் முரட்டு கருப்பன் ஆகியோரை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் சக ஆசிரியர்கள், தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்சாகு மற்றும் அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினர்.
    செங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே சாந்திநகர் விரிவு பகுதிக்கு உட்பட்ட அனந்தகமல நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மோகன் வயது (60). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் அச்சரப்பாக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து அவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கம்ப்யூட்டர் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹேமாவதி (வயது 31). இவர் சிறுசேரியில் உள்ள சாப்ட்வேர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில், அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்தாலப்பாக்கம், தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியைச் சேர்ந்த‌ கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் கார்த்திக் (35), என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். கார்த்திக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தவர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஆன்லைன் திருமண தகவல் விளம்பரத்தின் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில், சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கார்த்திக் உறவினர்கள் வீட்டிற்கு சென்று வந்துள்ளனர். அப்போது திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது குறித்து உறவினர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதில் கணவன், மனைவி இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதன்பின், ஹேமாவதியிடம், கார்த்திக் பேசாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

    இதனால், கணவனுடன் ஏற்பட்ட தகராறில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சித்தாலப்பாக்கத்திலிருந்து மாடம்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு ஹேமாவதி வந்துள்ளார். இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக ஹேமாவதியின் தாயார் சாந்தி சேலையூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகளின் சாவுக்கு அவரது கணவரின் கொடுமையே காரணம் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    மறைமலைநகர் அருகே கடைக்காரரிடம் கத்திமுனையில் பணம் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 45). இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது பெட்டி கடைக்கு வந்த 2 வாலிபர்கள் இளங்கோவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து இளங்கோ மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த தீனா (29), பொத்தேரி பகுதியை சேர்ந்த சூர்யா (23), ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே வீட்டில் இருந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்

    செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் சண்முகா நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் திலகமணி (வயது 32). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பற்றி தகவல் அறிந்த ஒட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய திலகமணியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகமணி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ரூ.28 லட்சம் வங்கி கடன் பெற்ற தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடனை திரும்ப கேட்டு வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர், தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வசுமதி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    செந்தில்குமார், கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்து வந்தார். இதனால் பல்வேறு வங்கிகளில் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.28 லட்சம் வரை கடன் பெற்றதாகவும், அந்த கடனை திரும்ப செலுத்தும்படி வங்கி அதிகாரிகள் தரப்பில் நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்குமார், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சிட்லபாக்கம் போலீசார், தற்கொலை செய்த செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி அதிகாரிகள், கடனை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்ததால் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கப்பெருமாள் கோவிலில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தாம்பரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 25). இவர், நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வாங்கினார்.

    பின்னர் அந்த பணத்தை பையில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தனலட்சுமியிடம் உங்கள் பணம் ரூ.500 கீழே விழுந்து விட்டது என்று கூறினர்.

    உடனே அந்த பணத்தை தனலட்சுமி கீழே குனிந்து எடுக்க முயன்றார். அப்போது அவர் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்துச்சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, இதுபற்றி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    மாமல்லபுரத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலாசார கலைவிழா வருகிற பிப்ரவரி 21-ந்தேதி வரை 2 மாதம் நடைபெறுகிறது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலாசார கலைவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வார இறுதி கலாசார கலை விழா மாமல்லபுரம் மரக பூங்காவில் உள்ள திறந்தவெளி மேடையில் நேற்று தொடங்கியது. மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி ச.ராஜாராமன் தலைமையில், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் ஜெ.ராஜேந்திரன் முன்னிலையில், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. எஸ்.செல்வம் குத்துவிளக்கேற்றி கலாசார கலை விழாவை தொடங்கி வைத்தார்.

    நேற்று முதல் நாள் நிகழ்ச்சியில் மீனாட்சிராகவன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், திருவண்ணாமலை மகேந்திரன் குழுவினரின் தப்பாட்டம், கிராமிய நடன நிகழ்ச்சியும் நடந்தது. இந்த கலாசார கலை விழாவில் பங்கேற்று நடனம் ஆடிய நடனக்குழுவினருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகள் சங்க மூத்த தலைவர் எம்.கே.சீனிவாசன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கலாசார கலை விழா வருகிற பிப்ரவரி 21-ந்தேதி வரை 2 மாதம் நடைபெறுகிறது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 160-ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 160-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 50 ஆயிரத்து 20 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 762-ஆக உயர்ந்தது. 378 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 134-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 561 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 438 பேர் உயிரிழந்துள்ளனர். 135 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 43 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 42 ஆயிரத்து 446 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 225 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 687 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
    ஊரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது40) , தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் ஊரப்பாக்கம் அருகே உள்ள பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள தனது நண்பர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பிரின்ஸ் அங்கு உள்ள விவசாய கிணற்றில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். திடீரென பிரின்ஸ் கிணற்றில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனே மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும் கூடுவாஞ்சேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்து போன பிரின்சின் உடலை மீட்டனர். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×