search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கம்ப்யூட்டர் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை

    தாம்பரம் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கம்ப்யூட்டர் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹேமாவதி (வயது 31). இவர் சிறுசேரியில் உள்ள சாப்ட்வேர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில், அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்தாலப்பாக்கம், தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியைச் சேர்ந்த‌ கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் கார்த்திக் (35), என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். கார்த்திக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தவர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஆன்லைன் திருமண தகவல் விளம்பரத்தின் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில், சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கார்த்திக் உறவினர்கள் வீட்டிற்கு சென்று வந்துள்ளனர். அப்போது திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது குறித்து உறவினர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதில் கணவன், மனைவி இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதன்பின், ஹேமாவதியிடம், கார்த்திக் பேசாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

    இதனால், கணவனுடன் ஏற்பட்ட தகராறில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சித்தாலப்பாக்கத்திலிருந்து மாடம்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு ஹேமாவதி வந்துள்ளார். இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக ஹேமாவதியின் தாயார் சாந்தி சேலையூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகளின் சாவுக்கு அவரது கணவரின் கொடுமையே காரணம் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×