என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.

    வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்கள் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனடியாக வடிந்தது. வெள்ளம் வடியாத பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது.

    ஆனால் புறநகர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    சென்னை பூந்தமல்லி பகுதிகளில் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி எம்.ஜி.ஆர். நகர், மேல்மா நகர், பிராட்டிஸ் சாலை, அம்மன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளை சுற்றி சாலையில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை திருவேற்காடு ராஜீவ் நகர், ராஜாங்குப்பம், எஸ்.பி.நகர் குடியிருப்பு, கோலடி, நூம்பல், ஏழுமலை நகர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    மாங்காடு சீனிவாசநகர், பத்மாவதி நகர், ஓம்சக்தி நகர், ஸ்ரீசக்ரா நகர் பகுதிகளில் தெருக்களில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், ஸ்டான்லி நகர், ராயபுரம் பனைமரத் தொட்டி, கல்மண்டபம் சாலை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் வைத்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். கோயம்பேடு ரெயில் நகரில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. சாலைக்கு மேலே ஒரு அடி அளவுக்கு தண்ணீர் செல்வதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து துண்டிக்கப்பட் டுள்ளது.


    காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், அருந்ததி பாளையம் பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற் கொண்டனர். இதையடுத்து மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் முட்டளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    ஒவ்வொரு பருவமழையின் போதும் இங்கு மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருப்பதாக கவலை தெரிவிக்கும் நோயாளிகள், இப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    செங்கல்பட்டு அண்ணா நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும் இன்னும் சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கியுள்ள நீரில் இருந்து பாம்பு, விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் அச்சத்துடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்னர். அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு மழை வெள்ள நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை வரை செல்லும் சாலையில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நந்தி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி மழை வெள்ளம் காட்டாறு போல் சீறிப் பாய்கிறது. இதனால் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.

    • தரைப்பாலத்தின் மீது கிளியாற்று உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    மதுராந்தகம்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மதுராந்தகம் ஏரிக்கு வரக்கூடிய நீர் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்பட்டு கிளியாற்று வழியாக செல்கிறது.

    இந்த நிலையில் தச்சூரிலிருந்து செங்கல்பட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பஸ் சகாய் நகர் என்ற இடத்தில் தரைப்பாலம் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது தரைப்பாலத்தின் மீது கிளியாற்று உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அந்த பாலத்தை கடந்து சென்ற போது வெள்ளப்பெருக்கில் பஸ் சிக்கியது. இதனால் பஸ் செல்ல முடியாமல் தத்தளித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் தவித்தனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கயிறு கட்டி பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    ஆனாலும் வெள்ளப்பெருக்கு காரணத்தால் பஸ்சை வெளியே எடுக்க முடியவில்லை. பஸ் தண்ணீரிலேயே சிக்கி நிற்கிறது. தரைப்பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பவுஞ்சூரில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    • தகவலறிந்த கல்பாக்கம் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் படகை ஆய்வு செய்தனர்.
    • கடல் சீற்றம் காரணமாக இங்கு காற்று இழுத்து வந்திருக்கலாம் என தகவல்.

    செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கடலில் மரத்திலான படகு ஒன்று மிதந்து கரை அருகே வந்தது.

    இதை பார்த்த மீனவர்கள் படகை கரைக்கு இழுத்து வந்தனர். தகவலறிந்த கல்பாக்கம் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் படகை ஆய்வு செய்தனர்.

    படகில் புத்தர் படங்கள், புத்தமத வழிபாட்டு முத்திரைகள், பொறிக்கப்பட்டு இருந்ததால் சீனா, மாலத்தீவு அல்லது பர்மா பகுதிகளில் உள்ளதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

    மேலும், கடல் சீற்றம் காரணமாக இங்கு காற்று இழுத்து வந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விநோதமான இந்த படகை அப்பகுதி மக்கள் கூட்டமாக ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • கோவில் செயல் அலுவலர் செல்வகுமார், மேலாளர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் புயல்,மழை போன்ற இயற்கை பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்கவும், உலக அமைதிக்காகவும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் பாடி கூட்டு பிராத்தனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல் அலுவலர் செல்வகுமார், மேலாளர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி.

    கூடுவாஞ்சேரி:

    மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியற்றவர்களும் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுவதாக புகார்கள் கூறப்பட்டது.

    மேலும், பலர் ஏழ்மை நிலையில் இருந்தும் தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று கூறி வந்தனர். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது முதலே, குடும்ப தலைவிகளில் யார் யாருக்கு, எதன் அடிப்படையில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதில் தொடங்கி அதற்கு என்னென்ன ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்பது வரை பல்வேறு குழப்ப நிலை நீடித்து வந்தது.

    பிறகு, உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்காக விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. எனினும், பலர் தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமார் 1.27 லட்சம் பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் இந்த தகவல் வெளியானது. தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இவ்வாறு உயிரிழந்த பெண்களின் பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், இன்னும் மகளிர் உரிமை தொகை வராத ஒரு சில பேருக்கு மட்டும் 2 மாதங்களில் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் பின் பேசிய அவர்,

    "என்ன பண்ணலை நாங்க. தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை 90 சதவீதம் நிறைவேற்றி மக்களின் பேரன்பை பெற்றிருக்குற ஒரே தலைவர் தளபதி தான். தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி."

    "இன்னும் ஒரு சில பேருக்கு மகளிர் உரிமை தொகை வந்திருக்காது. இப்போ சொல்றேன்... இன்னும் 2 மாதங்கள் பொறுங்கள்.. இப்போ நிதிநிலை சரியில்ல. அதை சரி பண்ணிட்டு யார் யாருக்கெல்லாம் உண்மையிலேயே கஷ்டப்படுற பெண்களுக்கு வரலையோ அந்த ஆயிரம் ரூபாய் தருகிற ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி," என்றார்.

    அமைச்சர் தற்போது வாக்குறுதி அளித்துள்ள நிலையில் விடுப்பட்ட மற்றும் உண்மையில் கஷ்டப்படுகிற பெண்களுக்கு மாதந்தோரும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • சினிமாவ சும்மா பார்க்கல. நாம காசு கொடுத்து பார்க்குறோம்.
    • கட்சித்தான் ஞாபத்தில் இருக்கணுமே தவிர நடிகர்கள் ஞாபகத்துக்கு இருக்கக்கூடாது.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர்:-

    நடிகர் எல்லாம் அரசியலுக்கு வரஆரம்பித்து விட்டார்கள். சினிமா பார்த்தோமா, வந்தோமா, அத அங்கேயே மறந்துவிட வேண்டும். சினிமாவ சும்மா பார்க்கல. நாம காசு கொடுத்து பார்க்குறோம். ரசித்தோமா அதோடு பார்த்துவிட்டு வெளியே வந்திடணும். அதுக்கப்புறம் கட்சித்தான் ஞாபத்தில் இருக்கணுமே தவிர நடிகர்கள் ஞாபகத்துக்கு இருக்கக்கூடாது.

    எடப்பாடி பழனிசாமின்னு ஒருவர் இருக்கிறார். அவர் இது விடியாத ஆட்சி... விடியாத ஆட்சி...ன்னு சொல்றாரு. என்ன விடியல. விடியா மூஞ்சிக்கு விடியாத ஆட்சி மாதிரி தான் தெரியும் என்றார்.

    • அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர்.
    • செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3 மணியளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் ஏரிக்கரை தெரு, செல்வ விநாயகர் தெரு, திருக்கழுக்குன்றம் சாலை, முதல் குறுக்கு தெரு, 2வது மற்றும் 3வது குறுக்கு தெருக்களை உள்ளடக்கிய பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதிக்கு ஏரிக்கரை தெருவை ஒட்டியுள்ள தரைமட்ட கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. பின்னர் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு தேவையான குடிநீரை வடகடம்பாடி ஊராட்சி நிர்வாகம் தடையின்றி வழங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள ஏரிக்கரை தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கலங்கிய நீருடன், கருப்பு துருக்கள் கலந்து குடிநீர் வந்து கொண்டிருந்தது. தற்போது 'ஃபெஞ்ஜல்' புயல் கனமழைக்கு பிறகு இது அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த, குடிநீரை மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    இதனால், அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதற்கு காரணம் அங்கு உள்ள தரைமட்ட கிணறு மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் கிடப்பதால் தூசிகளும், சிற்பப்பட்டறை துகள்களும் கிணற்று நீரில் கலப்பதாக கூறப்படுகிறது.

    இந்த மாசடைந்த குடி நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் போது தொண்டை மற்றும் உடலில் அரிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் குடிநீர் மாசு ஏற்படுத்தும் இந்த கிணற்றை மூடி பாதுகாத்து, நீர்தேக்க தொட்டியையும் சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,

    தொடர்ந்து இப்படி மாசடைந்த குடிநீரை குடிப்பதால் இப்பகுதி முதியவர்கள், சிறுவர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வாந்தி, தொண்டை தொற்று, பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்நிலை தொடர்ந்தால் அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தண்ணீரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க உள்ளோம், தற்போது பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் பலியாகி 60 பேர் பாதிக்கப்பட்ட சம்பவத்தால் இன்னும் கூடுதல் பயமாக உள்ளது என்றனர்.

    • சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    • குடிநீர் வரும் குழாய்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.

    தாம்பரம்:

    பல்லாவரம், காமராஜர் நகர், கண்டோண்மெண்ட் பல்லாவரம் 6-வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன்கோவில் தெரு, மாரியம்மன்கோவில் தெரு, மலை மேடு பகுதிகளில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாங்காடு பகுதியை சேர்ந்த திருவேதி(56), மோகனரங்கம் (42) ஆகியோர் இறந்தனர். இதேபோல் கண்டோண்மெண்ட் பல்லாவரம், மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வரலட்சுமி (88) என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவர்களது இறப்புக்கு குடிநீரில் கழிவுநீர் கலந்ததே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, தண்ணீரை குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் உட்கொண்ட உணவு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.

    குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 31 பேர் சிகிச்சைபெற்ற நிலையில் இன்று காலை அவர்களில் 6 பேரின் உடல் நிலை சீரானது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். 25 பேருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்கள் பயன் படுத்திய குடிநீரின் தன்மையை அறிய 5 இடங்களில் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பரிசோதனை முடிவு வெளிவர 3 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.


    இதற்கிடையே பாதிப்பு ஏற்பட்ட பல்லாவரம் காமராஜ் நகர், கண்டோண்மெண்ட் பல்லாவரம் 6-வது வார்டு பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. தெருக்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும் வீடு, வீடாக சுகாதார ஊழியர்கள் சென்று பாதிப்பு ஏதேனும் உள்ளதா? என்று கணக்கெடுத்தனர்.

    குடிநீர் வரும் குழாய்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் எந்த இடத்திலும் உடைப்பு இல்லை. மேலும் குடிநீர் வினியோகிக்க தேக்கி வைக்கப்படும் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    உடல்நலம் பாதிப்பு இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பல்லாவரம் கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த குடிநீரின் தரத்தை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று காலை பரிசோதித்து ஆய்வு செய்தார். இதேபோல் அங்குள்ள குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரும் பரிசோதிக்கப்பட்டது. அப்போது மண்டலக்குழுத்தலைவர் ஜோசப்அண்ணாத்துரை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அனைத்து பஸ்களும் சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.
    • தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தாம்பரம்:

    தாம்பரம் பஸ்நிலைய பகுதி எப்போதும் போக்கு வரத்து நெரிசலாக காணப்படும். தாம்பரத்திற்கு என தனி பஸ் நிலையம் இல்லாததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் ரெயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி ஆங்காங்கு நிறுத்தப்படுவது வழக்கம்.

    ஜி.எஸ்.டி.சாலை மூன்று தடங்களை கொண்டதாக உள்ளது. பயணிகளை இறக்குவதற்காக ஒரு தடத்தில் பஸ்கள் வரிசை கட்டி நிற்கும்போது மற்ற இருதடங்களில் பஸ்கள், வாகனங்கள் செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. இதற்காக தாம்பரத்தில் இருந்து பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி செல்ல 110 மீட்டர் நீளத்திற்கு மேற் கூரையுடன் கூடிய(தடம்66) பஸ்நிலையமும், பல்லாவரம் கிண்டி வடபழனி வழியாக கோயம்பேடு செல்ல (தடம்70) 90 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு பஸ்நிலையமும் ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்நிலையங்களாலும் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த 2 பஸ்நிலையங்களிலும் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், ஆணையர் பாலச்சந்தர், மண்டல தலைவர் காமராஜ் இந்திரன், தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த இரண்டு பஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது 2 பஸ்நிலையங்களையும் நவீன வசதியுடன் மறு சீர மைப்பு செய்து போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

    அதன்படி ஜி.எஸ்.டி.சாலையின் ஓரத்தில் ஒருபுறத்தில் மட்டுமே இரண்டு மீட்டர் அகலத்திற்கு நடைபாதை, கான்கிரீட் தூண்களுடன் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாமல் தென் மாவட்டம் மற்றும் சென்னையை ஒட்டி உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.

    இதில் சாலையின் ஓரத்தில் ஒரு புறத்தில் மட்டுமே தூண்கள் அமைத்து கட்டப்படவுள்ளதால் சாலையை ஒட்டி உள்ள பகுதியில் சாலை மார்க்கத்தில் 10 மீட்டர் அகலத்திற்கு காலியிடம் கிடைக்கும். இதன் மூலம் தற்போது இரண்டு வரிசைகளில் செல்லும் வாகனங்கள் 3 வரிசைகளில் செல்ல முடியும்.

    இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் சீரமைக்கப்படும் பஸ்நிலையங்களில் நவீன மேற்கூரை, கண்காணிப்பு கேமராக்கள். ஒலிபெருக்கிகள், டிஜிட்டல் பெயர்பலகை உள்ளிட்டவை நவீனமாக அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • குடில் வீடுகளின் தார்பாய் கூரைகள் கிழிந்து நாசமானது.
    • வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரை கோயில் தென்பகுதியில் ஜெமின் இடம் என்று சொல்லக்கூடிய, கடலோரத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 85 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தற்காலிக குடில் அமைத்து வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பழைய பேப்பர் சேகரித்து விற்பது, பாம்பு பிடிப்பது, காட்டுவேலை உள்ளிட்ட கூலிவேலை செய்து வருகின்றனர்.


    இவர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கனவே அரசாங்கம், திருக்கழுகுன்றம் அருகே வீடுகட்டி குடியேற நிலம் ஒதுக்கி கொடுத்ததாகவும், அங்கு வேறு சிலர் நிலத்தை ஆக்ரமித்து பயிர் வைத்து விவசாயம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் குடில் வீடுகளின் தார்பாய் கூறைகள் கிழிந்து நாசமானது. இவர்களை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.

    தற்போது மாமல்லபுரத்தில் இயல்பு நிலை திரும்பியதால் வீடுகளுக்கு வந்து பார்த்தபோது அங்கு தங்க முடியாத அளவிற்கு கூரைகள் சேதமடைந்து கிடந்தது.


    தகவலறிந்த திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, 85 இருளர் குடும்பங்களுக்கும் புதிய தார்பாய்களை வழங்கினார். பின்னர் அவர்களிடம் திருக்கழுகுன்றம் அருகே நடுவக்கரை பகுதியில் நிரந்தரமாக வீடுகட்டி நீங்கள் அங்கு வசிப்பதற்கான ஏற்பாடுகள் விரைந்து செய்யப்படும் என எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.

    அப்போது, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, வி.சி.க ஒன்றிய செயலாளர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன் குமார், சிந்தனை சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது.
    • பக்கிங்காம் கால்வாய்க்கு வெள்ளப்பெருக்கு அபாயம்.

    மாமல்லபுரம்:

    ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் இருந்தே காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. நேற்று இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றில் கடற்கரை கோயில் வடபகுதி கடற்கரை ஓரம் உள்ள கூறை உணவகம் ஒன்று சரிந்து விழுந்தது அதிஷ்டவசமாக ஊழியர்கள் அங்கு தங்காததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    பூஞ்சேரி, பொதுப்பணித்துறை சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம், வெண்புருஷம், தேவநேரி, தனியார் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.


    தகவலறிந்த தீயணைப்பு படை, பேரிடர் மீட்பு படை, பேரூராட்சி ஊழியர்கள் சம்ப இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    அண்ணாநகர், சூளைமேடு, எடையூர், வடக்கு மாமல்லபுரம், பகுதி குடியிருப்புகள் அருகே மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள சிற்பக் கூடங்களுக்குள் மழைநீர் புகுந்தது.

    இன்று காலை காற்றும், மழையும் இன்றி இயல்பு நிலை திரும்பி உள்ளதால், வழக்கம் போல் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் பகுதிகளில் வாகனங்கள் சென்று வருகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்திற்கு சென்னை மாநகர, அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக மரங்கள் விழுந்து உள்ளதால் பாண்டிச்சேரி வழியாக சென்னை வரும் வாகனங்கள் தற்போது குறைந்த அளவில் இயக்கப்படுவதால் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது. மாமல்லபுரம் நகர வீதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்து குப்பைக் காடாக கிடந்த பகுதிகளை பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். காலையில் குடிநீர் தடை வராமல் இருக்க ஜெனரேட்டர் வைத்து குடிநீர் மோட்டார்கள் இயக்கப்பட்டது.

    சென்னை, புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய்க்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை நின்று வெயில் அடிக்க துவங்கியதால் விடுமுறை நாளான இன்று மாமல்லபுரத்திற்கு வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×