என் மலர்tooltip icon

    அரியலூர்

    • திருமண கூட்டத்தில் நுழைந்ததால் ஏற்பட்ட தகராறில் விவசாயி தாக்கப்பட்டார்
    • வழக்கு பதிந்து ஒருவர் கைது செய்யப்பட்டார்

    அரியலூர்,

    வெங்கடகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி விவசாயி. இவர் குடிபோதையில் காலனி தெரு வழியாக சென்று உள்ளார். அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் திருமணத்திற்கு கூட்டமாக வழியில் நின்றுள்ளனர். அப்போது ரெங்கசாமி செல்வதற்கு வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த வெங்கடாசலம்(50), ராமசாமி(38) மற்றும் 2 நபர்கள் சேர்ந்து ரெங்கசாமியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கசாமி அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் ரெங்கசாமி மனைவி சுவிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடாசலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொன்னேரியில் ரூ.662.73 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணி
    • பா.ம.க. வழக்கறிஞர் பாலு தகவல்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,சோழகங்கம் எனும் பொன்னேரி ஏரியினை சீர் படுத்தும் பணிக்கு 662.73 கோடி தேவைப்படுகிறது. இந்த பணியினை வரும் 2023 - 24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்த்து இடம்பெற செய்ய உள்ளதாக நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.சோழர் பாசன திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 13ஆம் தேதி அரியலூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 5 லட்சம் கையெழுத்து இயக்கம் துவங்க உள்ளது.500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடுவதாக அறிவித்த நிலையில் பட்டியலை தேடி பார்த்த போது அரியலூர் மாவட்டத்தில் ஒரு கடையின் பெயர் கூட இடம்பெறவில்லை.முன்பே மூடிய கடைகளை தற்பொழுது ஒப்பிட்டு சொல்லக்கூடாது.வரும் ஆண்டில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மூடுவதற்கான பெயர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் பெயர்கள் இடம் பெற செய்ய வேண்டும்என கூறினார்.

    • ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணல் மாதத்தை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது
    • இத்தகவலை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய குறிப்பிட்ட 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் படி சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஓய்வூதியம் அல்லது சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதத்திலும், சிவில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தாங்கள் ஓய்வுப்பெற்ற மாதத்திலும் நேர்காணல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

    இருப்பினும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023-ம் ஆண்டிற்கான நேர்காணல் செய்து கொள்ளலாம். மேற்கண்ட நடைமுறையின்படி ஒவ்வொரு ஓய்வூதியர்களுக்கு தாங்கள் எந்த மாதம் நேர்காணல் செய்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும் மேலும் இணையத்தின் மூலமாக ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • சிறுவளூர் கிராமத்தில் மலேரியா நோய் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது
    • பேரணியை அரியலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணி கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

    அரியலூர்,

    உலக மலேரியா நோய் எதிர்ப்பு மாத தினத்தையொட்டி, அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்தில், பொது சுகாதாரத் துறை மற்றும் உயர்நிலைப் பள்ளி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற பேரணியை அரியலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணி கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். கடுகூர் பொய்யூர் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், அருண்குமார், விளாங்குடி சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜ், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமரன், ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி கோகிலா, செவ்வேள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணியானது, பிரதான வீதியின் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



    • மாற்றுப்பயிர் சாகுபடிக்கு 50 சதவீத மானியம் வழங்கபடும்
    • மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பை பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில், மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறுதானியங்கள், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள் நுண்ணுட்டக்கலவை ஆகிய பொருள்கள் அடங்கிய மாற்றுப்பயிர் சாகுபடி தொகுப்பு 50 சதவீத மானியத்திலும், பசுந்தாழ் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    மொத்த இலக்கில் 19 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், 1 சதவீதம் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். சிறுதானிய தொகுப்பு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு ரூ.1,150 (50%மானியம்). பயிறுவகை சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.1740 (50%மானியம்) எண்ணெய் வித்து சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4700 (50% மானியம்) கடந்த 2 ஆண்டுகளில் பயன் பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேற்கண்ட மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பை பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். ஓடிபி விவசாயிகளின் கைபேசிக்கு வரும். மேலும் விவரங்களுக்கு திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    • கழுமங்கலம் கோவிலில் பாம்பு பிடிபட்டது.
    • வனத்துறையினர் அங்கு வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர்.

    அரியலூர்:

    உடையார்பாளையம்: கழுமங்கலம் கிராமத்தில் கார்குடி ஏரியின் மேற்கு பகுதியில் விநாயகர், அய்யனார், வீரன், கருப்பு கோவில் உள்ளது. இந்த கோவிலில் அரிய வகை விஷப்பாம்பு ஒன்று வந்தது. பாம்பை கண்டு கோவில் பூசாரி ராமச்சந்திரன் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர்.



    • உடையார்பாளையம் அருகே சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்த ரூ.2,180 மற்றும் 2 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் அரண்மனை காடு பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் நிர்மல்குமார் (வயது 26), புதுத்தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் அசோக்ராஜ் (33), 3 சென்ட் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் (29), புதுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் பிரதாப் (23), காதர் ஷரிப் மகன் முஸ்தபா (23) மற்றும் ராஜேந்திரன் மகன் அருண்குமார் (25) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் 6 பேர் மீது உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.2,180 மற்றும் 2 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.


    • மருவத்தூர் தாண்டி சென்றபோது அங்கே நடுரோட்டில் டயர் வெடித்து நின்ற டிராக்டரில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தி டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் பாக்கியராஜ் (வயது38). இவர் மாணவர் விடுதியில் சமையலராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு செந்துறையில் இருந்து தனது பைக்கில் ஊருக்கு புறப்பட்டார். வழியில் விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் சித்தாள் வேலை செய்து கொண்டிருந்த அவரது உறவினர்களான சுரேஷ் மனைவி அமுதா (33) மற்றும் பரமசிவம் மனைவி அமராவதி (30) ஆகிய 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் தனது பைக்கில் அழைத்து கொண்டு ஊருக்கு சென்று கொண்டு இருந்தார்.

    மருவத்தூர் தாண்டி சென்றபோது அங்கே நடுரோட்டில் டயர் வெடித்து நின்ற டிராக்டரில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம்அடைந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் பாக்கியராஜ் மற்றும் அமராவதி ஆகியோரை மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடலை மீண்டும் செந்துறை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தி டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே பாக்கியராஜின் உறவினர்கள், செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. அதனால் சிகிச்சைக்காக கொண்டு வந்தவர்கள் உயிர் இழந்தனர். மருத்துவமனையில் போதி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசாரே உடலை ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது
    • வருகிற 6-ந்தேதி முதல் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் மறைமுக முறையில் நடைபெறவுள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 6-ந்தேதி முதல் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் மறைமுக முறையில் நடைபெறவுள்ளது. மேற்படி ஏலத்தில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளிமாவட்ட வியாபாரிகளும், இந்திய பருத்தி கழகத்தாரும் பங்கேற்க உள்ளதால் விவசாயிகள் பருத்தியினை தூசி மற்றும் அயல் பொருட்கள் கலப்பின்றி நன்கு உலர வைத்து தரம் பிரித்து விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம்.

    விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கு உரிய தொகை அவரவர் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படவுள்ளதால் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை விவசாயிகள் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர்களை 04331-296224 என்ற தொலைபேசி எண்ணிலும், 9655180343, 9842452150 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண் துணை இயக்குனர் கண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • பக்ரீத் பண்டிகைைய முன்னிட்டு அரியலூர் மாவட்ட பள்ளி வசால்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது
    • தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

    அரியலூர்,

    பக்ரீத் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அரியலூர் மார்க்கெட்டில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசல், மஸ்ஜிதே உமர் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் இஸ்லாமிய மரபுபடி குர்பானி கொடுப்பதற்காக, ஏழை-எளிய மக்களுக்கு ஆட்டு இறைச்சியை பங்கிட்டு கொடுத்து மகிழ்ந்தனர்.பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் உலக அமைதிக்காவும், அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் நோய்நொடி இல்லாமல் நன்றாக வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    இதில் அரியலூர் ராமலிங்க நகர் திடலில் தவ்ஹீத ஜமாஅத் சார்பில் நடைபெற்ற தொழுகையில் அந்த அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு,மனித நேயம் மிக்க மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் நிர்வாகிகள் அலாவுதீன் சபியுல்லா சையது ரசீது மற்றும் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் திருமானூர் செந்துறை, ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    • கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் முகாம் ஜெயங்கொண்டத்தில் நாளை நடக்கிறது.
    • முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை-அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்கிற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை-அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளில் விண்ணப்பித்தல், சேர்க்கை, கல்வி கடனுதவி, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படவுள்ளது. இந்த முகாமில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு உயர்கல்வியில் சேர்ந்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா த.பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 56). இவரது மகன் மணிகண்டபிரபு (21). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை மணிகண்டபிரபு தனது மோட்டார் சைக்கிளில் கீழப்பழுவூரில் உள்ள போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று அவர் விண்ணப்பித்திருந்த ஓட்டுனர் உரிமம் பெற்று கொண்டு மீண்டும் சொந்த ஊரான த.பொட்டகொல்லை கிராமத்திற்கு திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

    அப்போது பொய்யூர் சுண்டக்குடி பிரிவு பாதை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×